செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பறிபோகும் தமிழக வளம் ...அயல் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் மணல் கடத்தப்படுகிறது.

இந்த தொடர்வண்டி நின்றுகொண்டிருக்கும் இடம் சேலம். தமிழ்நாட்டின் வளம் தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட பேராசைக்காரர்களை தலைவர்களாகவும், ஆள்பவர்களாகவும் மக்கள் தேர்நதெடுத்ததின் விளைவு இது. ஒரு நாளைக்கு தமிழக ஆறுகளிலிருந்து எடுக்கப்படும் மணல் 90,000-யிரம் லாரி லோடுகள். ஒரு செ.மீ மணல் உருவாக 100 ஆண்டுகளும், ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளும் ஆகின்றன என்கிறது அறிவியல் ஆய்வுகள். தமிழகத்தில் ஓடும் நதிகளில், பெரும்பாலானவற்றில் ஆற்றுமணல் வரைமுறையற்று இரக்கமில்லாமல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மணல் என்பது ஏதோ வீணாகக் கிடப்பதல்ல. ஆற்றில் மணல் இருந்தால்தான் ஓடும் நதிநீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும். ஆற்று மணல்தான் தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், மணல் கொள்ளையர்களோ அரசு அனுமதித்த 1 மீட்டர் ஆழம் (3½ அடி) வரை என்பதை மீறி 100 அடி ஆழம் கட்டாந்தரை வரை ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள் ரளத்தில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் கேரள அரசு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது


அரசு 3 யூனிட் கொண்ட ஒரு லாரி மணல் 945 என விலை நிர்ணயித்திருந்தாலும் அதன் உண்மையான விற்பனை விலையாக ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது. இந்த விலையை தீர்மானிப்பவர்கள் மணல் கொள்ளையர்கள் மட்டுமே.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆற்றுமணல் அனைத்தும் தமிழகத்தின் கட்டட வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் சுரண்டும் ஆற்றுமணல் அளவிற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டிட வேலைகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. தமிழகத்தில் அள்ளப்படும் ஆற்றுமணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கூட கடத்தப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பல இடங்களில் காவிரி, அமராவதி, தாமிரபரணி ஆற்று மணல் கிடைக்குமென பெயர்ப்பலகைகள் தொங்குகிறது. மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கு ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படும் ஆற்று மணலின் அளவு ஆண்டிற்கு 11 லட்சம் டன்னாகும். இயற்கையின் மடியில் பாலைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையின் மடியையே அறுத்து ரத்தம் குடிக்கும் இக்கொள்ளையர்களால் தமிழகத்தின் ஆற்று வளமே அழிந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டமே தாழ்ந்துவிட்டது. ஆற்றில் எங்கு கைவைத்து தோண்டினாலே தண்ணீர் வரும் என்ற நிலை அழிந்தே போய்விட்டது. ஆறுகளில் ராட்சச இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் 2010, 2012, 2013 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருந்தாலும் அது எதுவும் மணல் கொள்ளையை தடுக்க உதவவில்லை. 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் அள்ளியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மணல்குவாரிகள் விதிமுறைகள் சில :

-காலை 7 முதல் மாலை 5 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.

-தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.

-நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

-மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.

- வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது.

-ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

-ஆற்றின் கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.

--அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

-இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி துறையிடம் செகண்ட் சேல்(second sals) வரி செழுத்த வேண்டும்.

- இதை கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு என அமைத்து இயங்க வேண்டும் எனவும்,மாதம் ஒருமுறை இக்குழு கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.

இவை அனைத்தும் சட்டமாக தாள்களில் மட்டும் உள்ளது.இதை அதிகாரிகள், அரசு யாரும், எங்கும் நடைமுறைப் படுத்துவதில்லை.

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலை:

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலையை மணல்கொள்ளையர்கள் தெளிவாக வரைபடம் போல் வரையறுத்து வைத்து உள்ளனர். முதலில் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தேவையானதைக் கொடுத்து விலைக்கு வாங்குவது. பின்பு அப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் மக்களை நல்ல வேலைவாய்ப்பு என கூறி அழைத்து வேலை கொடுப்பது. பின்பு அவர்களை வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டு வீட்டில் சும்மா இருங்கள் உங்களுக்கு மாத மாதம் சம்பளம் வரும் எனக் கூறி ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாசி கருவிகளை வைத்து மணல் அள்ளத் தொடங்குவது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு ரேஷன் அட்டைக்கு என சில மாதங்களுக்கு ஒருமுறை 5000, 10000 என பணம் கொடுப்பது. ஊரில் கோவில்கட்ட, கும்பாபிஷேகம் நடத்த, பள்ளி மராமத்து, விளையாட்டு போட்டிக்கு பணம் - பரிசுகள், ஊரில் நடக்கும் நாடகம் , தெருக்கூத்து , கலைநிகழ்சிகளுக்கு பணம் கொடுப்பது, முன்னணியில் நிற்பவர்களுக்கு பல லட்சம் பணம் என பணத்தை அருவி போல் கொட்டி அவர்களை விலைக்கு வாங்குவது என்பது நடக்கும்.

இதற்கும் மசியாமல் மக்களோ, தனிநபரோ, இயக்கமோ போராடினால் ஒவ்வொரு ஊரிலேயேயும் மக்களிடம் பிளவை உருவாக்கி சமூக பதட்டத்தை ஏற்படுத்துவது, ஊர் மோதல் ஏற்படுத்துவது, சாதி மோதல் ஏற்படுத்துவது, மாத மோதல் ஏற்படுத்துவது, மக்களையே ஒருவரை ஒருவர் தாக்க செய்வது, உள்ளூரில் விலைக்கு வாங்கிய தனது ஆதரவாளர் மூலம் தனக்கு எதிரானவர்கள் மீது பொய்வழக்குகளை தொடர்ந்து கொடுக்க வைப்பது என்பதை நடத்துவார்கள். மேலும் போராட்ட தலைவர்களை விலைக்கு வாங்க முடியாவிட்டால் அவர்களைப் பற்றி பல்வேறு பொய்யான அவதூறுகளை மக்களிடம் கட்டவிழ்த்து விடுவது அதன் மூலம் மக்களிடையே அவர்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது என்பதும்: சில நேர்மையான அதிகாரிகளுக்கு மேல் அதிகாரி மூலம் அச்சுறுத்தல், மிரட்டல், அதற்க்கும் அடிபணிய மறுத்தால் பணிமாற்றம் என்பதும் நடக்கும்.

மேலும் மணல்குவாரியை எதிர்ப்பவர்களுக்கு மறைமுக மிரட்டல், குடும்ப உறவுகள்-நட்பு வட்டம் மூலம் நெருக்கடி, குடும்ப உறவுகள்-நட்பு வட்டதிதிற்க்கு மணல் எடுக்க வாகன வாய்ப்பு, தொழில் ஏற்பாடு செய்து போராட்ட முன்னணியினரை செயலிழக்க செய்வது, அரசு பணியில் யாராவது உள்ளூரில் இருந்தால் போராட்டத்தில் தொடர்பு எனக் கூறி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்வது-இதன் மூலம் மக்களை மிரள வைப்பது, உள்ளூர் அதிகாரிகள் மூலம் மிரட்டல், பின்பு காவல்துறையினரே களத்தில் இறக்கப்படுவார்கள். சட்டத்தைக் காக்கிறேன் என்பதன் பெயரில் உன்னைப் பற்றி புகார் வந்துள்ளது எனக் கூறி மிரட்டல், காவல்துறை மூலம் பொய்வழக்கு , காவல்துறை மூலம் தாக்குதல், காவல்துறையின் பொய்வழக்கு மூலம் சிறை, சித்திரவதை, நீதிமன்ற விசாரணை என்பது தொடர்ந்து நடக்கும்.

சில நேரங்களில் மணல்குவாரியை எதிர்ப்பவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வது, ஆளே இல்லாமல் செய்து விடுவது என்பதும் நடக்கும். இப்படி எண்ணற்ற சாம, பேத, தான, தண்ட முறையிலேதான் போராடும் மக்களையும், போராட்ட தலைவர்களையும், சில நேர்மையான அதிகாரிகளையும் மணல்குவாரி நடத்துபவர்களால் இப்படி கவனிக்கப்படுவார்கள்.

இதற்கு பல உதாரணங்கள் உண்டு. வருவாய்துறை தாசில்தார் காஞ்சிபுரம் வெங்கடேசன் , காவல்துறை ஏட்டு அரக்கோணம் கனகராசு , பல்வேறு சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் மானுர் தனிகாச்சலம், புதுக்கோட்டை கார்த்திக் மற்றும் ராஜேஷ், திசையன்விளை சதீஷ்குமார், திருவைகுண்டம் சாம் தேவசகாயம் போன்ற ஊர்தலைவர்கள், தோழர் நெல்லை வீரவநல்லுர் சுடலைமுத்து போன்ற அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் என பலரும் மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் சகாயம் போன்றவர்களே மணல்கொள்ளையர்களால் காஞ்சிபுரத்தில் பணியாற்றி வந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.

நம்மையில்லாம் எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ இந்த கொள்ளைகள்

நன்றி முத்தமிழ் வேந்தன்.
.....

கருத்துகள் இல்லை: