திங்கள், 26 ஜூன், 2017

கமல் - பிக் பாஸ் ... மக்களை அவமானப்படுத்த தயாராகிறார்கள் .. டி ஆர் பி க்காக எதுவும் செய்யலாம்?

பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் | கோப்புப் படம்: பிஜாய் கோஷ். விஜய் டிவி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி வரும் ஞாயிறு (25-ம் தேதி) முதல் ஒளிபரப்பாக உள்ளது. நாளிதழ்கள், பேருந்து நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணாடி அணிந்த கமல் தோன்றும் ‘பிக் பாஸ்’ விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்மாக உணர்ந்து பார்க்க, 14 பத்திரிகையாளர்கள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் நானும் ஒருவன்.
பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில், ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது ‘பிக் பாஸ்’ வீடு. மனதை மயங்க வைக்கும் உள் அலங்காரம், பார்த்தாலே தூக்கம் வர வைக்கும் படுக்கை, நம்மை குழந்தையாக்கும் நீச்சல் குளம் என அந்த வீடு, ஆர்ட் டைரக்டர் யார் எனக் கேட்க வைத்தது. அந்த வீட்டில் மொத்தம் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உங்களின் ஒவ்வொரு சின்ன அசைவையும் அந்த கேமராக்கள் கண்காணிக்கும்.
கைபேசி பயன்படுத்தக் கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது, கடிகாரத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள். எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டு நாங்கள் 14 பேரும் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. அங்கு எஃப்.எம். கேட்க முடியாது, டி.வி. பார்க்க முடியாது, பகல் நேரத்தில் தூங்க முடியாது (மீறித் தூங்கினால் நாய் குறைக்கும் சத்தத்தை ஒலிக்கவிடுவார்கள். படுக்கையைவிட்டு நீங்கள் எழும் வரை அந்தச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும்), அந்த 14 பேரைத் தவிர வெளி ஆட்கள் வேறு எவரையும் பார்க்க முடியாது… எனப் பல ‘முடியாதுகள்’!
‘ஆஹா… வசமா மாட்டிக்கொண்டோமே’ என்றிருந்தது. வீட்டுக்குள் நுழைந்த முதல் இரண்டு மணி நேரங்கள் நாங்கள் ‘கேமரா கான்சியஸ்’ ஆக இருந்தோம். நாங்கள் 14 பேரும் அன்றுதான் முதன்முறையாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகினோம். எங்களில் பலருக்கு மனம் விட்டுப் பேசுவதில் தயக்கமிருந்தது. காரணம், எங்கள் கழுத்தில் தொங்கிய மைக்ரோஃபோன். நாம் பேசுவது எல்லாம் கேமராவில் பதிவாகும். அதனால் கேமரா பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற நினைப்பில், சிறிது நேரத்துக்கு ஏன், எதற்கு என்று காரணமில்லாமல் வாய் வலிக்கப் புன்னகைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனாலும் கேமராவுக்கு முன்னால் நமது பயம் தெரியாதபடி நடிப்பது ரொம்பவும் கஷ்டம்தான்.
ஆரம்ப கட்ட அறிமுகங்கள் முடிந்ததும் செய்வதற்கு எங்களுக்கு வேறு வேலைகள் எதுவும் இருக்கவில்லை. அதனால் டைனிங் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து ‘அந்தாக்‌ஷரி’ தொடங்கினோம். பத்து நிமிடம்தான்… திடீரென்று எங்கிருந்தோ ஒரு கணீர் குரல்… ‘இது பிக் பாஸ். நீங்கள் அனைவரும் லிவிங் ரூமில் உள்ள சோஃபாவில் வந்து அமரவும்’ என்று ஒரு கட்டளை. வேறு யார்… கமலின் குரல்தான்!
பிறகு, ஒவ்வொருவராக ‘கன்ஃபெஷன்’ ரூமுக்கு (ஆமாம்… பாவ மன்னிப்பு அறையேதான்!) அழைக்கப்பட்டோம். எங்களில் சிலருக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டன. அதை நாங்கள் தங்கியிருக்கும் அந்த 24 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இது ஒரு பக்கமிருக்க, எங்களில் ஒருவர் ரகசிய உளவாளியாக நியமிக்கப்பட்டார். அது யாரென்று அந்த 24 மணி நேரம் முடியும் வரை எங்களுக்குத் தெரியாது. அவருக்கு ஒரு முக்கியமான பணி தரப்பட்டிருந்தது. ஆனால் அதை அவரால் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியவில்லை.
கூட இருந்த பத்திரிகையாளர் ஒருவர், ”அப்புறம் சார்..? கமல்ஹாசன்லாம் இந்த புரோகிராமுக்கு வருவாருன்னு நினைக்கிறீங்க..?” என்றார்.
”சார்… அவர் செம பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் சார். அதனால நிச்சயமா வருவாருங்க. நம்மோட ஒவ்வொரு அசைவையும் அவர் நோட் பண்ணிக்கிட்டிருக்கார் நண்பரே!” என்றேன்.
”அப்படியா சார்… அப்ப நாம அவரைப் பார்க்கும்போது ஒரு ‘எக்ஸ்க்ளூசிவ்’ போட்டுரணும் சார். நம்ம பத்திரிகைக்கு இந்த வாரத்துக்கு ஒரு மேட்டர் தேத்தணுமில்ல” என்றார் அவர். நான் மெல்ல தலையை ஆட்டி வைத்தேன்.
மூன்று வேளையும் தவறாமல் உணவு வந்தது. நாங்கள் எல்லோரும் ‘எக்ஸ்பீரியன்ஸ் டூர்’ வந்திருப்பதால் எங்களுக்கு இந்தச் சலுகை. இதுவே நிஜமான போட்டியாளர்கள் என்றால், நூறு நாட்களும் அவர்களே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமாம்.
மாலை சுமார் 6 மணி வேளையில், எங்களுக்கு ‘போர்’ அடித்துப் போய்விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் (?) ‘மியூசிக் சேர்’ விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகூட எங்களுக்கான சலுகைதான். நிஜ போட்டியாளர்களுக்கு இதுவும் கிடையாது. அந்தப் போட்டியாளர்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கிறது.
எங்களில் சிலர் ‘ஹார்ட்கோர்’ சினிமா பத்திரிகையாளர்கள். அடுத்த நாள் நடிகர் விஜய்யின் பிறந்தநாள். முந்தின நாள் அவரின் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்பதால், அந்தப் பத்திரிகையாளர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர். ஆனால் சோகம்… எங்களால்தான் வெளி உலகைத் தொடர்புகொள்ள முடியாதே! எனவே அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பொறுமை காத்தார்கள்.
நாங்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பது அந்த நிகழ்ச்சியின் விதிகளில் ஒன்று. நல்லவேளை எங்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள். எனவே, எங்களில் தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நினைப்பில் அடுத்த நாள் காலை டிபனுடன் தெலுங்கு நாளிதழ் ஒன்றை வைத்து அனுப்பினார்கள், ‘பிக் பாஸ்’ குறும்பு டீம். ஆனால், எங்களில் ஒருவருக்கு தெலுங்கு மொழி தெரியும். நாளிதழை எடுத்தவுடன், விஜய்யின் புதிய பட டைட்டில் குறித்த செய்தியைத்தான் தேடினார்கள். செம ‘மெர்சல்!’
இறுதியாக, எங்களில் ஒருவரை அந்த வீட்டிலிருந்து ‘எலிமினேட்’ செய்ய வேண்டிய தருணம் வந்தது. எங்கள் எல்லோரிடமும் கருத்து கேட்கப்பட்டது. நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் எந்தப் பெயர் அதிகமாக சொல்லப்பட்டதோ, அவர் வெளியேற்றப்பட்டார். நல்லவேளை, எலிமினேட் செய்யப்பட்டவர், எங்களை எல்லாம் பார்த்து டாட்டா காட்டி, சிரித்துக்கொண்டேதான் சென்றார்!
இறுதியிலும் இறுதியாக, அந்த ரகசியம் உடைக்கப்பட்டது. எங்களோடு இருந்த அந்த ரகசிய ஏஜென்ட் யார் என்பது தெரிய வந்தது. அவருக்குக் கொடுக்கப்பட்ட மிஷன் என்ன என்பதும் தெரிய வந்தது. ‘கமல் எங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்’ என்ற பொய்யை எங்களிடத்தில் நம்ப வைப்பதுதான் அந்த மிஷன்!
‘எக்ஸ்க்ளூசிவ்’ போட நினைத்த அந்தப் பத்திரிகையாளர் என்னைப் பார்த்து முறைத்தார். நான் வழக்கம் போல என் முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரித்து வைத்தேன்  tamilthehindu

கருத்துகள் இல்லை: