செவ்வாய், 27 ஜூன், 2017

வைகை செல்வன் - ராஜெந்திரபாலாஜி மோதல் பாலுக்காக அல்ல .. நீண்டகால உட்கட்சி கழுத்தறுப்பு இப்போ வெடித்திருக்கிறது

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் உத்தரவை மீறிய அமைச்சர்!
மின்னம்பலம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்குமான மோதல் வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. ‘பாலில் கலப்படம் இருப்பதை நிரூபிக்கவில்லை என்றால் நான் பதவி விலகுவதோடு, தூக்கு மாட்டிக் கொள்கிறேன்’ என சவால் விட்டிருந்தார் பால் வளத் துறை அமைச்சரான ராஜேந்திரபாலாஜி. அது சம்பந்தமாக பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ‘அமைச்சர் ஆதாரமில்லாமல் சவால் விடக் கூடாது. இப்போது அவர் சொன்னது போல பதவி விலகுவாரா’ என கேட்டு வைக்க... தீப்பற்றிக் கொண்டது. ராஜேந்திரபாலாஜியும் விடவில்லை... ‘கூலிக்கு மாரடிக்கும் வைகைச்செல்வனுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...’ என்று பதிலுக்கு வெடி வைத்தார். வைகைச்செல்வன் விடுவாரா... ‘போஸ்டர் ஒட்டிய அமைச்சருக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?’ என கொந்தளித்தார். அதிமுகவில் உட்கட்சி பிரச்னைகளை கடந்து இப்போது இந்த விவகாரம் தான் முன்னணியில் உள்ளது.


ராஜேந்திர பாலாஜியும், வைகைச்செல்வனும் இருப்பது எடப்பாடி அணியில்தான். அதாவது ஒரே அணியில்தான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இருவருக்கும் என்ன பிரச்னை என விசாரித்தோம். இது இன்று நேற்று தொடங்கிய பிரச்னை இல்லை. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே பிரச்னை தொடங்கியது. இவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். விருதுநகர் மாவட்டத்துக்கு யார் ஹீரோ என்பதே இவர்களுக்குள் பிரச்னை. வைகைச்செல்வன் அமைச்சராக இருந்த சமயத்தில் அவருக்கு எதிராக பல்வேறு காய் நகர்த்தல்களை ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள் செய்தார்கள். வைகைச்செல்வனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்குவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ராஜேந்திரபாலாஜிதான். இது சம்பந்தமாக அப்போது விசாரணை நடந்தது. அதன் பிறகு வந்த தேர்தலில் வைகைச்செல்வனுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், வைகைச்செல்வனை தோற்கடிக்க, ராஜேந்திரபாலாஜியே உள்ளடி வேலைகளைப் பார்த்தார். வைகைச்செல்வன் தோற்றும் போனார். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு வைகைச்செல்வன், நேரடியாக ஜெயலலிதாவை பார்த்து, ராஜேந்திரபாலாஜி மீது புகார் செய்தார். அதன் பிறகுதான் வைகைச்செல்வனுக்கு, கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பும் கொடுத்து, ராஜேந்திர பாலாஜியை அழைத்து எச்சரித்தார் ஜெயலலிதா. இப்படியாக போய்க் கொண்டிருந்த பிரச்னை ஜெயலலிதா இருந்தவரை அடங்கி இருந்தது. அவர் மறைவுக்குப் பிறகு, இருவருக்குள்ளும் இருந்த பிரச்னை மீண்டும் புகைய ஆரம்பித்தது. இப்போது வெடித்து வீதிக்கு வந்துவிட்டது.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்துவிட்டு, அடுத்த ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்தது ஃபேஸ்புக்.

”அதன் பிறகு நடந்ததை நான் சொல்கிறேன். ராஜேந்திரபாலாஜி பேசியது தொடர்பாக நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. ராஜேந்திரபாலாஜியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். ‘நீங்க பேசினது ரொம்பவும் தப்பு. கூலிக்கு மாரடிக்கிறவன் என்றெல்லாம் நீங்க பேசியிருக்க கூடாது. அது வைகைச்செல்வனை இல்லை... யாரை நீங்க பேசியிருந்தாலும் தப்புதான். இதனால கட்சிக்குத்தான் கெட்டபேரு. இப்போ இங்கே இருக்கிற பிரச்னை போதாதுன்னு இதை வேற நீங்க கிளப்பி விட்டுட்டீங்க. வெளியில இருந்து யாரும் நம்மை அசிங்கப்படுத்த வேண்டாம். நாமே நம்மை அசிங்கப்படுத்திட்டு இருக்கோம். இனியாவது இதுபோல பேசாதீங்க..’ என கடுமையாகவே சொல்லி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் சிலரும் ராஜேந்திரபாலாஜிக்கு போன் போட்டு அட்வைஸ் செய்தார்களாம்.
‘எனக்கு எதுக்கு எல்லோரும் புத்தி சொல்லிட்டு இருக்காங்க. யாரு எது சொன்னாலும் கேட்டுட்டு நான் அமைதிய போகணுமா? அப்படியெல்லாம் என்னால போக முடியாது.. யாரு என்ன செய்வாங்கன்னு பார்த்துக்கலாம்!’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி...ஜூன் 27 மாலை மீண்டும் வைகை செல்வன் மீதான வார்த்தைத் தாக்குதல்களை தொடர்ந்திருக்கிறார். ‘அழுகிப் போன தக்காளி குழம்புக்கு ஆகாது’ என்று வைகை செல்வனை தனிப்பட்ட முறையில் மீண்டும் ராஜேந்திர பாலாஜி தாக்க... எச்சரிக்கை விடுத்த முதல்வர் எடப்பாடியே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
‘அவருக்காவது அமைச்சர் பதவி இருக்கு. எனக்கு பதவி எதுவும் இல்லை. இனி நானும் அவரது பழைய கதையை விலாவாரியாக வெளியிட வேண்டியதுதான் ’ என வைகைச்செல்வனும் தன் நண்பர்களிடம் கோபமாக சொல்லி இருக்கிறார். ஆக, மோதல் தொடர்கிறது!”

கருத்துகள் இல்லை: