செவ்வாய், 27 ஜூன், 2017

குட்கா விற்பனையில் கோடிகள் குவிக்கும் அரசியல்வாதிகள் + அதிகாரிகள் + போலீஸ் ...

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமாகியுள்ளது.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி பல இடங்களில் இந்தப் பொருட்கள் விற்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அப்போதைய மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘மாவா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சென் னையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதில், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்தால் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவரும்’ என தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி கடந்த 2016 டிசம்பரில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
ஜார்ஜின் கடிதத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுப்பியது. அதனடிப்படையில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையே, சென்னையில் உள்ள எம்டிஎம் குட்கா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமானவரித் துறையிடம் ஊழல் தடுப்பு பிரிவினர் கேட்டிருந்தனர். அதன்படி, ஆவணங்களை வருமான வரித்துறையினர் அளித்திருந்தனர்.
கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி வருமான வரித் துறையினர் நடத் திய சோதனையின்போது கைப்பற்றப் பட்ட ஆவணங்களில், குட்கா விற் பனையை அனுமதிக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. குட்கா உற்பத்தி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான மாதவராவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் மாநில அரசோடு தொடர்புடைய பல் வேறு நபர்களுக்கு பணம் செலுத் தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அவ்வாறு பணம் பெற்றவர்களிடம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் இதுவரை விசாரணை நடத்தவில்லை.
இந்நிலையில், குட்கா விவகாரம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் கடந்த 2016 ஆகஸ்ட் 11-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். (அந்த கடிதத்தின் நகல் ‘தி இந்து’விடம் உள்ளது.)
மேலும், வருமான வரித்துறை துணை இயக்குநர் (புலனாய்வு) கண்ணன் நாராயணன், மாதவ ராவிடம் பெற்ற வாக்குமூலத்தில், சென்னை காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர் ஒருவர், சென்னை மாநகராட்சி அதி காரிகள் ஆகியோருக்கு பணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள் ளார். மேலும் இதற்கு முன்னர் சென்னை மாநகர காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், செங்குன் றம் உதவி ஆணையர் ஆகிய பொறுப் புகளில் இருந்தவர்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக வும் ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தலைமையக அதிகாரிகள் கூறும்போது, ‘‘வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை தமிழக முதல்வருக்கு அப்போதைய டிஜிபி அனுப்பியுள்ளார். அந்த ஆவணங்கள் அரசின் நடவடிக்கைக் காக நிலுவையில் உள்ளன. கடந்த 2015-16-ம் ஆண்டில் தீபாவளி போனஸ், கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் மாதம்தோறும் செலுத்தப்படும் தொகை என மொத்தம் ரூ.40 கோடி வழங்கியுள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.
தொடர்புடையவை

கருத்துகள் இல்லை: