வெள்ளி, 2 டிசம்பர், 2016

ராஜ்யசபாவில் சேலம் உருக்காலை... திருச்சி சிவாவை பேசவிடாமல் அடாவடி செய்த அதிமுக விஜிலா எம்.பி

மின்னம்பலம்.com :‘சேலம் உருக்காலை நஷ்டத்தில் ஓடவில்லை. திட்டமிட்டே அதனை முடக்கி வரும் பணியில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகிறது’ என்று குற்றம்சாட்டி, ‘சேலம் உருக்காலையை மூடக்கூடாது’ என்று திருச்சி சிவா எம்.பி மாநிலங்களவையில் பேசினார். ஆனால், அவர் பேசும் போது அவரை பேச விடாமல் தடுக்கும் விதமாக அதிமுக பெண் எம்.பி விஜிலா எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு அவைத்தலைவர் குரியன் கண்டனம் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விதி எண் 56இன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று தொடர்ந்து காங்கிரஸ் பிடிவாதம் செய்து வருகிறது.
12ஆவது நாளாக இன்று காலை மக்களவை கூடியபோது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், “கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காதீர்கள். விவாதம் செய்வதற்கு அரசு தயார். ஆனால், எதிர்க்கட்சியினர்தான் வேண்டுமென்றே அவையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்” என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், “மேற்கு வங்கத்தில் மாநில அரசின் அனுமதியின்றி தேவையில்லாமல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், “அது வழக்கமான பாதுகாப்பு பணிதான்” என்று குறிப்பிட்டார். ஆனால், அதை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் அமளி செய்ததால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ரூபாய் நோட்டு விவகாரத்தை கிளப்பினார்கள். கருப்புப் பணத்துக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று பிரதமர் குற்றம் சாட்டியது தொடர்பாக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
அப்போது, கேள்வி நேரத்தை அவை துணைத் தலைவர் குரியன் தொடக்கி வைத்தார். அதையடுத்து, திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, “சேலம் உருக்காலையின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால், அது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும்” என்றார். “சேலம் உருக்காலை நஷ்டத்தில் ஓடவில்லை. திட்டமிட்டே அதனை முடக்கி வரும் பணியில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டி, “சேலம் உருக்காலையை மூடக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
அப்போது அதிமுக உறுப்பினர் விஜிலா குறுக்கிட்டு இடையூறு செய்தார். அதனை, துணைத் தலைவர் குரியன் கண்டித்து விஜிலாவை இருக்கையில் அமரும்படி உத்தரவிட்டார்.
அதேபோல், சேலம் உருக்காலையை மூடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் ரங்கராஜனும் வலியுறுத்தி பேசினார். அதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆனந்த் சர்மா, சுப்புராம ரெட்டி ஆகியோர், “ நாட்டில் பணப்பஞ்சம் எப்போது தீரும்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பதில் தெரிவித்ததை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து கூச்சலிட்டனர்.
காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகர்ஜுன கார்கே பேசுகையில், “வங்கியில் பணமில்லை என்று தெரிவிக்கின்றனர். ஆனால், நிதியமைச்சர் போதுமான பணம் இருக்கிறது என்கிறார். இதில் எது உண்மை?” என்று கேள்வி எழுப்பியபோது, நிதியமைச்சர் பதில் தெரிவிக்க எழுந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் பெரும் கூச்சலிட்டனர். அதையடுத்து அவையை பிற்பகல் 2.3௦ மணி வரைக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: