புதன், 30 நவம்பர், 2016

பதுக்கியவர்களுக்கு பணமா?-ராகுல்!


கணக்கில் காட்டாத கருப்புப் பணம் வைத்திருப்போர், டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அதை வருமான வரித் துறையிடம் அறிவித்து, 50 சதவிகிதம் வரி செலுத்தலாம். மீதி 50 சதவிகிதத்தில் 25 சதவிகிதம் பணம், வரி செலுத்துபவர்களுக்கு திரும்பத் தரப்படும். எஞ்சிய 25 சதவிகிதம் 4 ஆண்டுக்கு திரும்பப் பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். மேற்கண்ட அம்சங்களை உள்ளிட்ட வருமான வரி திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறியது. இதை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பதுக்கியவர்களுக்கே மீண்டும் 50 சதவிகித கருப்புப் பணத்தை அரசு வழங்கவுள்ளது” என்று கூறினார். இந்நிலையில், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “வீரர்கள் உயிரிழந்தால் அவையில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.
நக்ரோடா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தவில்லை. ராணுவ வீரர்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தாதது இதுதான் முதன்முறையாகும். எனவே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளன” என்றார். ராகுல் காந்தியின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ள விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிருஷ்டவசமான ஒன்று. நக்ரோடாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் அவையில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது. இதுபோன்ற அரசியலை நாட்டு மக்கள் வெறுக்கின்றனர்” என்றார். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: