செவ்வாய், 29 நவம்பர், 2016

பிளாஸ்டிக்கை சாலையில் போடாதீர்கள்...சாலை போடுங்கள்!' இந்தியாவின் பிளாஸ்டிக் மேன்!

பிளாஸ்டிக் மேன் "பிளாஸ்டிக் நல்லது"- சூழலியல் ஆர்வலர்கள் அடிக்க வந்தாலும் பரவாயில்லை என இப்படி சொல்கிறார், ‘இந்தியாவின் பிளாஸ்டிக்மேன்’ என அழைக்கப்படுகிற பேராசிரியர் டாக்டர் வாசுதேவன்.
மதுரை தியாகராஜர் கல்லூரியின் டீனான வாசுதேவன், இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களிலும் பிளாஸ்டிக் சாலைகள் அமைத்து சாதனை புரிந்து கொண்டிருப்பவர்.
''A waste becomes useful to the world because of another waste....
இங்க நான் வேஸ்ட்டுனு சொன்னது என்னை.... என் மூலமா இன்னொரு வேஸ்ட் உலகத்துக்குப் பயன்பட ஆரம்பிச்சிருக்கு பார்த்தீங்களா'' - பெரிய சிரிப்புடன் வரவேற்கிறார் டாக்டர் வாசுதேவன்.

''எங்கக் குடும்பத்துல எல்லாரும் வக்கீல். நானும் வக்கீலாயிடுவேன்னு  எதிர்பார்த்திட்டிருந்தப்ப நான் கெமிஸ்ட்ரி படிக்கப் போயிட்டேன். எம்.எஸ்.சி., பி.ஹெச்டி எல்லாம் முடிச்சதும் பாலிடெக்னிக்ல வாத்தியார் வேலைக்குப் போனேன். இவ்ளோ படிச்சிட்டு பாலிடெக்னிக்ல வேலையானு எல்லாரும் சிரிச்சாங்க. நான் கவலைப்படலை. அதை ஒரு வேலையா பார்க்காம, வாய்ப்பா பார்த்தேன். கெமிஸ்ட்ரின்னா ஈக்வேஷன், ப்ராப்பர்ட்டினு படிச்ச எனக்கு சிமென்ட்டும், கரியும், பெட்ரோலும் எப்படியெல்லாம் உபயோகமாகுதுங்கிற அப்ளைடு சயின்ஸ் ரொம்பப் பிடிச்சது. மதுரை தியாகராஜர் காலேஜ்ல வேலை கிடைச்சதும் வாழ்க்கையே சொர்க்கமா மாறினது போல இருந்தது. அந்த வேலைக்கு இன்டர்வியூ போகும்போது ரிசர்ச் பண்ணணும்... டென்னிஸ் விளையாடணும்னு ரெண்டு ஆசைகளைச்  சொன்னேன். இன்னிவரைக்கும் டென்னிஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கலை. ஆனா ரிசர்ச் கனவு நனவாயிடுச்சு...''அதே சிரிப்புடன் அடுத்தடுத்த விஷயங்களுக்குள் போகிறார் பேராசிரியர்.
''2001ல ஒரு டி.வி புரோகிராம்ல டாக்டர் ஒருத்தங்க பேசிட்டிருந்தாங்க. பிளாஸ்டிக் கழிவுகள் எல்லாம் நீர்நிலைகள்ல கரைஞ்சு சூழலை மாசுப்படுத்தறதா அவங்க சொன்னதைக் கேட்டு ஷாக் ஆனேன். பிளாஸ்டிக் என்பது தண்ணியில கரையாது. பெட்ரோலியத்துலேருந்து எடுக்கப்படற ஒரு துணை விளைபொருள்தான் பிளாஸ்டிக். அந்த டாக்டர் சொன்ன தவறான தகவலும், பிளாஸ்டிக்கை ஒழிக்கணும்ங்கிற பரவலான முழக்கங்களும்தான் என் ஆராய்ச்சிக்கான விதை.. இதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு, ஏதாவது மாற்று கண்டுபிடிக்க முடியுமானு யோசிச்சேன்.
நிறைய நிறைய முயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் பிறகு சாலைகள் போடறதுக்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாமேங்கிற ஐடியா வந்தது. உபயோகமற்ற பிளாஸ்டிக்கை தாருடன் கரைச்சு ரோடு போட முடியுமானு ட்ரை பண்ணினேன். பரிசோதனைக் கூடத்துக்குள்ள அதைக் கரைக்க முடிஞ்சது. பெரிய அளவுல பண்ண முடியலை. அப்புறம்தான் முதல்ல கற்களைப் போட்டு, அதுக்கு மேல பிளாஸ்டிக்கை உருக்கி ஊற்றி, அதுக்கும் மேல தார் போட்டு முயற்சி பண்ணினேன். கல்லுக்கு மேல லேமினேஷன் போட்டது போல அந்த டெக்னிக்  நல்லா வந்தது. அப்துல் கலாம் ஐயா எங்க காலேஜுக்கு வந்தபோது என்னோட இந்த ஐடியாவை பத்தி சொன்னேன். ரொம்ப இம்ப்ரெஸ் ஆனார். 'உங்க காலேஜுக்கே பிளாஸ்டிக் ரோடு போடுங்க'னு சொல்லிட்டுப் போனார். அவர் சொன்னபடியே 2002ல முதல் முறையா எங்க காலேஜுக்குள்ள பிளாஸ்டிக் ரோடு போட்டோம். சொன்னா நம்ப மாட்டீங்க... இன்னி வரைக்கும் அந்த ரோடு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு..''  Road less travelled  டெக்னிக்கில் வென்ற கதையுடன் தொடர்கிறார் வாசுதேவன்.
''ஆளாளுக்கு பிளாஸ்டிக்கை வில்லனா பார்க்கிறதும் அதை ஒழிக்கிறதுக்கான வழிகளைப் பத்திப் பேசறதுமா இருந்த நேரம் அது... அப்படி ஒழிச்சிட்டா பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட தயாரிப்புல இருக்கிற 7 ஆயிரம் தொழிற்சாலைகளையும் மூடணும். அதுல வேலை பார்க்கிறவங்களோட நிலைமை என்னாகும்? அவங்க எங்கே போவாங்க..? இதை நான் சொன்னபோது, பிளாஸ்டிக் அசோசியேஷன் தானா முன்வந்து எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. பிளாஸ்டிக் கழிவுகளை ரோடு போடக் கொடுக்க உதவறதா சொன்னாங்க. இதையெல்லாம் கேள்விப்பட்டு, 2004ல முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா மேடம் என்னைக் கூப்பிட்டு அவங்க எதிர்ல டெமோ பண்ணிக் காட்டச் சொன்னாங்க. ஒரு இலுப்பச்சட்டி, ஒரு கரண்டி, ஒரு ஸ்டவ்... இதோட போனேன். கல்லை வறுத்து, அதுக்கு மேல பிளாஸ்டிக் துண்டுகளைப் போட்டு உருக்கி, தார் ஊத்தறதைப் பார்த்துட்டு, 'இவர் என்ன கடலை வறுக்கறாரா'னு மேடம் கிண்டல் பண்ணினாங்க.  டெமோ பார்த்த உடனேயே தமிழ்நாட்டுல 1000 கிலோமீட்டருக்கு பிளாஸ்டிக் ரோடு போடச் சொல்லி ஆர்டர் போட்டாங்க. மளமளனு நிறைய சாலைகள் பிளாஸ்ட்டிக்குக்கு மாற ஆரம்பிச்சது...'' மாற்றம் விதைத்தவர், பிளாஸ்டிக் சாலைகளின் சாதகங்களையும் பட்டியலிடுகிறார்.
''சாதாரணமா கல்லுல தார் ஊத்தி ரோடு போட்டா குறைஞ்சது மூணு வருஷம் அப்படியே இருக்கணும். ஆனா இன்னிக்கு எந்த ரோடும் 6 மாசம்கூட தாக்குப்பிடிக்கிறதில்லை. மழை பெய்யறப்ப, தார் உரிந்து போய், கல் பெயர்ந்து சிதிலமாகுது. தண்ணியைத் தக்க வச்சுக்கிற சக்தி இருக்கிறதில்லை. பிளாஸ்டிக் ரோடுல, கல்லுக்கு மேல பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அதுக்கு மேல தார் ஊத்தறதால தண்ணீர் உள்ளே போக வாய்ப்பில்லை. 12 வருஷங்களைத் தாண்டியும் அப்படியே இருக்கிற ரோடுகளே இதுக்கு உதாரணம். போன வருஷம் சென்னையைப் புரட்டிப் போட்ட மழையின் போது, பிளாஸ்டிக் ரோடு இருந்த ஏரியாக்கள்ல பாதிப்பு இல்லைங்கிற விவரம் பலருக்கும் தெரியாது. சமீபத்துல ஹைதராபாத்ல கடுமையான மழை வந்தபோதும் பிளாஸ்டிக் ரோடு போட்ட ஏரியாக்கள் தப்பிச்சது. பிளாஸ்டிக் ரோடுகள் 2500 கிலோ எடை வரைக்கும் தாங்கக் கூடியது.
கேரி பேக், டீ கப், சாக்லெட் கவர், நொறுக்குத்தீனிகளோட கவர், பால் பாக்கெட், தெர்மகோல்... இப்படி பிளாஸ்டிக் எந்த ரூபத்துல இருந்தாலும் சாலைகள் போடப் பயன்படும்.  இந்த பிராசஸ் சூழலுக்கு எந்த வகையிலயும் பாதிப்பை ஏற்படுத்தறதில்லை. மழையில உடையாது. வெயில்ல உருகாது. குப்பைகளை சேகரிச்சு காசாக்கி பிழைப்பு நடத்தறவங்களுக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்...''
புருவம் உயர்த்தும் புதுத் தகவல்கள் தருகிறார்.
எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் பிளாஸ்டிக் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் விடிவே கிடையாதா என்கிற அங்கலாய்ப்புடன் அந்தக் குப்பையைக் கடந்து செல்கிறோம். ஆனால் பேராசிரியரோ, இந்த இருப்பு போதாது என்கிறார்.
''போன வருஷ வெள்ளத்தின் போது ஒன்றரை லட்சம் டன் பிளாஸ்டிக் கவர்கள் கிடைச்சதா சொன்னாங்க. இந்தியாவுல 41 லட்சம் கிலோ மீட்டர் ரோடு போட வேண்டியிருக்கு. அப்படிப் பார்த்தா நமக்கு இன்னும் 100 லட்சம் டன் பிளாஸ்டிக் தேவை இருக்கு....
கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கிற சாலைகள் மட்டுமே 24 லட்சம் கிலோமீட்டர் இருக்கு. அந்த  சாலைகளை எல்லாம் பிளாஸ்டிக் ஆக்க வேண்டியது முக்கியம். ஹைவேஸ்ல புதுசா ரோடு போடும்போது, ஸ்க்ராப்னு சொல்ற பழைய பகுதியை வெட்டி எடுத்துட்டுப் புதுசா போடுவாங்க. அப்படி எடுக்கிற பழசை என்கிட்ட கொடுக்கச் சொல்றேன். நான் அதுல பிளாஸ்டிக் கலந்து கொடுக்கறேன். 65 சதவிகித  ஸ்க்ராப்ல 35 சதவிகிதம் புது பிளாஸ்டிக் கோட்டிங் கலந்து ரோடு போடற போது செலவு 50 சதவிகிதமா குறையும். சாலைகளோட உயரம் அதிகரிக்கிறதையும் தவிர்க்கலாம்...'' என்கிறார்.
அடுத்து என்ன என்கிற தேடலில் இருக்கிற பேராசிரியர் வாசுதேவனுக்கு அப்படி உதித்த ஐடியாதான் பிளாஸ்டோன். அதாவது பிளாஸ்டிக் மற்றும் கல் கலவை. கல்லுடன் பிளாஸ்டிக் கலவை சேர்த்து அதை செங்கல் மாதிரி உருவாக்கி,  அவற்றை நடைபாதைகளுக்கு உபயோகிக்கிற முறையையும் கண்டுபிடித்திருக்கிறார். இதில் யானையே ஏறினாலும் உடையாதாம். அவ்வளவு ஸ்ட்ராங்! ஒரு பிளாஸ்டோனில் இருப்பது 300 கேரி பேக்ஸ் மற்றும் 6 பெட் பாட்டில்கள்!
இவரது பிளாஸ்டோன் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்ட மத்திய அரசு, விலை மலிவான கழிப்பறைகள் கட்டும் திட்டத்தில் பிளாஸ்டோன்களை கொண்டு சுவர்கள் கட்டித் தரும் பிராஜக்ட்டை ஒப்படைத்திருக்கிறது.
''போன வருஷம் அக்டோபர் மாசம் பிரதமர் மோடி எனக்கு 'டெக் ஐகான்' அவார்ட் கொடுத்தார். அப்ப அவர்கிட்ட பிளாஸ்டிக் ரோடு போடற பிராசஸ் எத்தனை எளிமையானதுனு பேசற வாய்ப்பு கிடைச்சது. அடுத்த மாசமே இனிமே எல்லா சாலைகளும் பிளாஸ்டிக் வேஸ்ட்டும் தாரும் கலந்துதான் போடப்படணும்னு மோடி ஆர்டர் போட்டார். இந்தியா முழுவதும் 9 மாநிலங்கள்ல பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிட்டாங்க. கிராமப்புற சாலை வளர்ச்சித் துறை 50 ஆயிரம் கிலோமீட்டருக்கும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பா ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டருக்கும் பிளாஸ்டிக் ரோடு போடச் சொல்லியிருக்காங்க. இந்த விழிப்பு உணர்வு இன்னும் அதிகமானதுன்னா, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தற பிளாஸ்டிக் குப்பைகளும் குறையும். ரோடுகளும் ஸ்ட்ராங் ஆகும்...'' பிளாஸ்டிக் வெறுப்பாளர்களுக்கு ஆறுதலான செய்தி இது.
''என்னை சந்திக்க வர்றவங்களுக்கு சாக்லெட் தருவேன். பர்த்டேவா... விசேஷமானு கேட்டுட்டு சாக்லெட்டை சாப்பிடுவாங்க. அந்த கவரை அப்படியே சுருட்டி என் டேபிள் மேலயே வச்சிட்டுப் போயிடுவாங்க. அதை எடுத்து குப்பைத் தொட்டியில போடணும்னு பலருக்கும் தெரியறதில்லை. நம்ம மக்களோட குப்பைத் தொட்டிக் கலாசாரம் அவ்வளவு மோசம்...
பிளாஸ்டிக்கை எப்படி ஒழிக்கிறதுனு பேசறவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். உங்கக்கிட்ட இருக்கிற பிளாஸ்டிக் குப்பைகளை உங்க ஏரியாவுல உள்ள சுயஉதவிக் குழுக்கள்கிட்ட ஒப்படைச்சிடுங்க. அவங்க  அதை கார்ப்பரேஷனுக்கு அனுப்பி, ரோடு போடற வேலைக்குப் பயன்படச் செய்வாங்க. பிளாஸ்டிக்கை சபிக்கிறதைத் தவிர்த்துட்டு, அது செய்யக்கூடிய நல்ல விஷயத்தைப் பத்தி யோசியுங்க... இந்த இடத்துல எங்க ஊர் ஆட்டோவுல படிச்ச வாசகம்தான் ஞாபகம் வருது... 'பிளாஸ்டிக்கை சாலையில் போடாதீர்கள். பிளாஸ்டிக்கால் சாலை போடுங்கள்...'' அதையே அடுத்தவருக்கான அட்வைஸாகவும் முன் வைக்கிறார்.
சாலைகளில் சாதித்துவிட்ட பேராசிரியரின் அடுத்த இலக்கு ரயில்வே பாதைகள்.
''தண்டவாளங்களுக்குக் கீழே உள்ள ஸ்லீப்பர்ஸை கான்கிரீட்லதான் போடறாங்க. அதுக்கு பதிலா பிளாஸ்டிக்கை உபயோகிக்கச் செய்யற ஐடியா இருக்கு. ( அது ஏற்கனவே சிலநாடுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது)  அதுதான் என் முக்கியமான இலக்கு... என்னோட இந்த டெக்னாலஜியை 300 மில்லியன் டாலருக்கு அமெரிக்காவுலேருந்து விலை பேசினாங்க. ஸாரி... இது எங்க நாட்டுக்கானது'னு சொல்லிட்டேன்.
முதல்ல நம்ம நாட்டை சுத்தப்படுத்துவோம். ஸ்மார்ட் சிட்டி சாத்தியமாகணும்னா அதுக்கு முன்னாடி ஸ்மார்ட் ரோடு சாத்தியமாகணும். அந்த பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கணும்...'' ஸ்மார்ட்டாக முடிக்கிறார் பிளாஸ்டிக் மேன் வாசுதேவன்  விஜயானந் ,, விகடன்,காம்

கருத்துகள் இல்லை: