வியாழன், 1 டிசம்பர், 2016

நல்ல நோட்டை ஒழுங்காக அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?

ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. .
எங்கே புதிய 500 ரூபாய் நோட்டு? பணத்தை இழந்த பிறகு அனைவரும் கேட்கும் கேள்வியிது. நாம் அனைவரும் வாட்ஸப்பிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் அதைத் தொட்டுப் பார்த்ததில்லை. காரணம் இன்றியமையாத அந்தப் பண மதிப்பை அச்சிடுவதில் இருக்கும் மொத்த நிர்வாகக் குளறுபடிகள்.
  • மொத்தமாக 1660 கோடி 500 ரூபாய் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்தன.
  • இதுவரை 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அதாவது வெறும் 06% மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
  • ஒட்டுமொத்த இந்திய நாணய மதிப்பில் பாதி அளவு 500 ரூபாய் பணத்தாள்களாக இருந்தது.
  • 500 ரூபாய் அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (Chairman and Managing director) கிடையாது.
  • அந்நிறுவனத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான பூசல் நடந்து கொண்டிருக்கிறது.
  • நவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும் நாணய அச்சகங்களுக்கு 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிட கொடுக்கப்படவில்லை.
  • அச்சடிப்பதில் நிர்வாகக் குளறுபடி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் கூறுகிறார்.
தாமதத்திற்கான காரணத்தை ஆராயும் முன் 500 ரூபாய் பணத்தாளின் இன்றியமையாமையைப் பார்த்து விடுவோம். செல்லாக்காசுத் திட்டத்தை நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவிக்கும் முன்னர் 500 ரூபாய் மதிப்பிலான 1,660 கோடி பணத்தாள்கள் இருந்தன. ஒட்டுமொத்த நாணய மதிப்பில் பாதிக்கும் அதிகமாகப் புழக்கத்திலிருந்த அதன் மதிப்பு 8.3 இலட்சம் கோடி ரூபாயாகும். எனவே அது புழக்கத்தில் இருந்த இன்றியமையாத ஒரே நாணய மதிப்பாகும்.
அதிர்ச்சியூட்டும் விதமாக மோடியின் அறிவிப்பிற்குச் சற்று ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் புதிய 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் பணித் தொடங்கியது. இரண்டு அச்சகங்களால் கடந்த மூன்று வாரங்களில் 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அச்சடிக்க முடிந்தது. இயல்பு நிலைமைக்குத் திரும்பக் கூடுதலாக ஒரு 1,659 கோடி பணத்தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் பணத்தாள்களில் வெறும் 0.06% மட்டுமே ரிசர்வ் வங்கியால் மாற்ற முடிந்தது. இவ்வளவு பணத்தாள்களையும் அச்சடிக்க எத்தனை காலமாகும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

ஏன் தாமதம்?

ந்தக் கேள்விக்கு விடை தேடும் பொருட்டு நாசிக்கில் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் நாணய நோட்டு அச்சகத்திற்கு(CNP) சென்றோம். CNP ஐ தவிர மத்தியப்பிரதேசத்தின் தேவாஸில் உள்ள நாணய நோட்டு அச்சகத்திலும் 500 ரூபாய் பணத்தாள் அச்சிடப்படுகிறது. இரண்டு அச்சகங்களும் நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தை (Security Printing and Minting Corporation of India) சேர்ந்தவை.
மேலும் 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்களையும் ரிசர்வ் வங்கி இயக்குகின்றது. நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் பணத்தாள்களை அச்சிடும் பணித் தொடங்கியது. நவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும் இந்த அச்சகங்கள் வேகமாக அச்சிடும் திறன் படைத்தவை. 2000 ரூபாய் பணத்தாளை அச்சிட நல்ல இயந்திரங்களைக் கொண்ட இந்த அச்சகங்கள் முன்கூட்டியே பணிக்கப்பட்டதால் மோடி அறிவிப்பிற்குப் பிந்தைய 48 மணி நேரத்திற்குள் வங்கிகளுக்கு அந்தப் பணத்தாள்கள் கிடைத்தன.
பிறகு அதே போல 500 ரூபாய் பணத்தாளை அச்சிட ரிசர்வ் வங்கியையும் நிதியமைச்சகத்தையும் தடுத்தது எது? 7 வாரங்களுக்குப் பிறகே 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடத் தொடங்கப்பட்டது ஏன்? மிக இன்றியமையாத நாணயப் பணத்தாள்களை அச்சிடும் பணி பழைய தொழில்நுட்பங்களைக் கொண்ட இரண்டு அச்சகங்களுக்குக் கொடுக்கப்பட்டது ஏன்? யார் அந்த முடிவை எடுத்தது?

ரிசர்வ் வங்கி மற்றும் நாணய அச்சகத்திற்கு இடையேயான முரண்பாடு

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன். மக்களுக்கு பணக் கொடுக்காமல் சிரமப் படுத்திய குற்றவாளிகள்!
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன். மக்களுக்கு பணக் கொடுக்காமல் சிரமப் படுத்திய குற்றவாளிகள்!
CNP அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும் 500 ரூபாய் அச்சடிப்பில் ஈடுபடும் சில ஊழியர்கள் பேரை வெளியிடாத பட்சத்தில் பேச ஒத்துக் கொண்டனர். ரிசர்வ் வங்கியின் உத்தரவை வெறுமனே தாங்கள் நிறைவேற்றியதாக வேலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கூறினர். காலதாமதத்திற்கும் அதைத் தொடர்ந்தக் குழப்பத்திற்கும் ரிசர்வ் வங்கிதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.
வடிவமைப்பு, தாள் மற்றும் அனுமதி எங்களுக்குக் கிடைத்த பின்னர் புதிய நோட்டிற்கான வேலையைத் தொடங்கினோம். கள நிலவரங்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்குத் தெரியாது. ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. பணத்தாள்களை வடிவமைத்தல் மற்றும் அச்சடிக்கும் தொழிலில் 1925-லிருந்து நாங்கள் இருக்கிறோம்.. ஆனால் வடிவமைப்பு முதல் அச்சிடுதல் வரை அனைத்தையும் ரிசர்வ் வங்கியே செய்ய இப்போது விரும்புகிறது. ஆனால் அது கட்டுப்படுத்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.
பல்வேறு ஊழியர்களைச் சந்தித்த பிறகு SPMCIL ற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே முரண்பாடு இருந்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீண்டக்காலமாகவே சண்டை நடந்து வந்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரரான கே.சி.சக்ரபர்த்தி     தி குயன்ட் ஊடகத்திடம் (The Quint) உறுதிபடக் கூறினார். 500 ருபாய் பணத்தாள்களை அச்சடிப்பதில் உள்ள காலதாமதத்திற்கு நிதியமைச்சரை அவர் குற்றம் சாட்டினார்.
SPMCIL ன் அச்சகங்கள் திறமைக்குப் பெயர் பெற்றவை அல்ல. அவை சற்று மந்தமான அச்சகங்கள். ஆனால் SPMCIL நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை என்பதுதான் முக்கியமான விடயம். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தலைவர் இல்லாமல் எப்படி அவர்கள் இருக்க முடியும்? விரைவான முடிவுகளை எடுக்க யார் இருக்கிறார்கள்?
கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.
2016, ஜூலையில் எம்.எஸ்.ராணா அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்படும் வரையில் அந்நிறுவனத்திற்குப் பொறுப்பாளராக நிதியமைச்சகத்தில் இணைச் செயலாளராக உள்ள பிரவீன் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் மற்றும் ஒட்டுமொத்தக் குழப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டபோது பெயர்களைச் சொல்ல மறுத்துவிட்டார் சக்ரபர்த்தி. ஆனால் நிதியமைச்சரை குற்றம் சாட்டினார்.
யார் காரணம் என்று நமக்குத் தெரியவில்லை. அஃது ஆய்வுக்குரியது. நியமனம் செய்யும் பொறுப்பில் இருப்பவர்களைத் தான் கேள்வி கேட்க வேண்டும். ஒட்டுமொத்த நடவடிக்கையையும் சரியான வழியில் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்.
கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.
அதே கேள்வியை நிதியமைச்சகத்திடம் தி குயன்ட் கேட்ட போது அவர்கள் பதிலைத் திருப்பிப் போட்டார்கள்.
பணி நியமன நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிலைமைகளைச் சமாளிக்கும் திறமை இருக்கிறது. அறிவிப்பு திடீரென்று வந்தது. சூழ்நிலைகள் படிப்படியாகச் சீராகி வருகின்றன. சில பகுதிகளில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் பெரிய அளவிற்குப் பிரச்சினைகளைச் சமாளித்து விட்டோம்.
டி.எஸ்.மாலிக், செய்தித் தொடர்பாளர், நிதியமைச்சகம்.

ரிசர்வ் வங்கி பேசுமா?

ரிசர்வ் வங்கிக்கும் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் அச்சகத்திற்கும் ஒரு வெளிப்படையான முரண்பாடு இருக்கிறது. பணத்தாள்களை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை. இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. தகவல் தொடர்பு இடைவெளிப் பிரச்சினை இருந்ததா? இந்தப் பணத்தாள்களை அச்சடிக்க மந்தமான அச்சகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? இந்த முடிவுகளுக்குப் பொறுப்பானவர் யார்?
ரிசர்வ் வங்கி பேசினால் இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவைக்கு விடை கிடைத்து விடக் கூடும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு தி குயன்ட் அனுப்பிய கேள்விப்பட்டியலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
(புதிய பணத்தாள் அச்சடிக்கும் பணியில் இருக்கும் கூத்துக்குளைப் பார்த்தால் இதில் ஏதோ சதித்திட்டம் இருக்க வேண்டும். அல்லது இவர்கள் அடி முட்டாள்களாக இருக்க வேண்டும். செலவழிக்கவே முடியாத 2000 ரூபாய் நோட்டு கிடைத்து, செலவழிப்பிற்கு அத்தியாவசியமான 500 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை. ஒரு சதவீதம் கூட புதிய பணத்தை அளிக்காமல் மோடி அரசு நாட்டு மக்களை எப்படி சித்திரவதை செய்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று
– வினவு)

கருத்துகள் இல்லை: