புதன், 21 டிசம்பர், 2016

கருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்.. வினவு .காம்

தமிழகம் முழுவதும் ஆறு பெருநகரங்களில் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு – பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 3000த்திற்கும் மேற்பட்ட மக்களிடம் வினவு நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் – முதல் பாகம். படியுங்கள் – பகிருங்கள்
பா.ஜ.க அரசின் ரூபாய் மதிப்பழிப்பு நடவடிக்கை ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு பிறகு கருத்துக் கணிப்பு ஒன்று நடத்த முடிவு செய்தோம். பொதுவான ஊடக செய்திகள், நேரடி அனுபவங்கள், ஆங்காங்கே மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து சுமார் 25 கேள்விகளை தெரிவு செய்தோம். அதையும் பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு 13 கேள்விகளாக சுருக்கினோம்.
எங்களுடைய நோக்கம் கருப்புப் பணம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும், மோடியின் அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறார்கள், இந்த நடவடிக்கை என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் – ஏற்படுத்தாது என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது. அதே நேரம் முதலாளித்துவத ஊடகங்கள் – நிறுவனங்கள் பின்பற்றும் குறிப்பிட்ட பதிலை வாங்குவதற்காகவே தயாரிக்கப்படும் கேள்விகள்-சர்வேகளுக்கு மாற்றாக உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கும் வண்ணம் கேள்விகள், அனைத்து கருத்துக்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறான பதில்களையும் உள்ளடக்கி தயாரித்தோம்.
பிறகு யாரிடம் எடுப்பது என்ற பிரச்சினை. சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கம், மாத அதிக ஊதியம், குறைந்த மாத ஊதியம், தினசரி ஊதியம், மாணவர்கள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் போன்ற பெரும்பான்மை மக்களை சென்றடைவதற்கு திட்டமிட்டோம். அதன்படி சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சை, மதுரை ஆகிய நகரங்களில் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டன.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனி மற்றும் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி குடியிருப்புக்கள், இரு பகுதிகளிலும் கடைத்தெரு, சந்தை போன்ற பொது இடங்கள்; திருச்சியில் திருவெறும்பூர், சுப்ரமணியபுரம், வயலூர் போன்ற புறநகர் பகுதிகளின் குடியிருப்புகள், கடைத்தெருக்கள், ஏ.டி.எம் வரிசைகள், பிஷப் ஹீபர் கல்லூரி; தஞ்சையில் புது பேருந்து நிலையம், கடைத்தெரு, கட்டிடத் தொழிலாளிகள், மானோஜிப்பட்டி குடியிருப்பு; மதுரையில் நீதிமன்ற வளாகம், மகவுப் பாளையம் – எல்லீசு நகர் – பழங்காநத்தம் குடியிருப்புக்கள், கடை வீதிகள், ஏ.டி.எம் வரிசைகள்; கோவையில் சூலூர், கவுண்டம்பாளையம், துடியலூர் குடியிருப்புகள்; வேலூரில் பழைய பேருந்து நிலையம், புது பேருந்து நிலையம்; ஆகிய இடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
மொத்தமாக 85 தோழர்கள் கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். சில இடங்களில் ஒரு நாளும் சில ஊர்களில் இரு நாட்களும் கருத்துக் கணிப்பு நடைபெற்றன. சென்னையில் 12.12.2016 அன்று வீசிய புயலுக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது. மற்ற ஊர்களில் அதே நாளிலும் அடுத்து வரும் இரு நாட்களிலும் எடுக்கப்பட்டன. கருத்துக் கணிப்பை அனுபவம் வாய்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.
சென்னையில் வினவு செய்தியாளர் குழு, ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்களும் மற்ற நகரங்களில் ம.க.இ.க தோழர்களும் பங்கேற்றனர். களத்திற்குச் செல்லும் தோழர்களின் அரசியல் அமைப்பு பின்புலம் அறிமுகமாகாத வண்ணம் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. எங்கள் படிவங்களை நிரப்பிய மக்களில் மூன்று பேர் மட்டும் தோழர்களை ‘இன்னார்’ என்று கண்டு பிடித்தனர். அதே நேரம் அந்த மூன்று பேரும் அதற்காக தமது கருத்தை மாற்றிக் கொள்ளாமலேயே படிவங்களை நிரப்பினர்.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வீடுகளில் உள்ள பெண்கள், சாதாரண மக்கள் பலரிடம் கேள்விகளைக் கேட்டும், புரிய வைத்தும் பதில்கள் நிரப்பப்பட்டன. நடுத்தர வர்க்கத்தினர் அவர்களே பதிவு செய்தனர். ஏ.டி.எம் வரிசைகளில் நின்றோர் கொலை வெறியுடன் கருத்துக்களை பேசிய வண்ணம் ஆவேசத்துடன் படிவங்களை நிரப்பினர். திருநங்கைகள் இருவரும், தமிழ் தெரிந்த சில வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் இக்கணிப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.
செய்தியாளர்கள் பல்வேறு சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டனர். சந்திக்கும் மக்களின் வயது, பாலினம், தொழில் மற்றும் கட்சி சார்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வது, முடிந்த வரை அனைத்துப் பிரிவு மக்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்கணிப்பை நடத்துவது என அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.
கருத்துக்களை அறிந்து அதை வெளியிடுவதோடு, நாங்களே விரும்பாத கருத்தாக இருந்தாலும் கூட அது ஏன் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதையும் அதற்கான சமூக பொருளாதார பின்புலத்தையும் ஆய்வு செய்வதே எமது நோக்கமாக இருந்தது. இந்த பகுதி அடுத்த பாகத்தில் வெளிவரும். முதலில் கருத்துக் கணிப்பு யார் யாரிடம் எங்கே என்ன பிரிவினரிடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விளக்கப் படங்களைப் பாருங்கள்.
_______
சர்வேயில் பங்கேற்ற மொத்த மக்கள்

Ques1-total-per
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்கள் இடம் வாரியான எண்ணிக்கை மற்றும் சதவீதம்
2ques-city
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்கள் வயது வாரியான விவரம்
Ques3-age
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்களின் வருமான ரீதியிலான பிரிவு எண்ணிக்கை மற்றும் சதவீதம்
Backup_of_chart1
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்களின் நகரம், கிராமம் சதவீதம்

Backup_of_chart2
____________________
சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் நாளிதழ் படிக்கும் பழக்கம்
Backup_of_chart3
____________________
சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் டி.வி செய்தி பார்க்கும் பழக்கம்
 Backup_of_chart4
____________________
சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் நாளிதழ், டி.வி செய்தி இரண்டும் பார்க்கும் பழக்கம்
 Backup_of_chart5
____________________
சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் கட்சி ஆதரவு

Backup_of_chart6
____________________
ருத்துக் கணிப்பு முடிந்த பிறகு அனைத்து படிவங்களையும் கணினியில் பதிவு செய்யும் இமாலய பணி அச்சுறுத்தியது. அடுத்த நாளே வந்த வர்தா புயல் எமது பணியை பெரிதும் பாதித்தது. பிறகு தகவல் பதிவு செய்வதற்கான மென்பொருளை தயார் செய்து பல தோழர்கள் தமது அலுவலக பணிகளை முடித்து விட்டு கணினியேற்றம் செய்தனர். ஒரிரு தோழர்கள் இதற்காக கடுமையாக உழைத்தனர். பிறகு தகவல் பதிவு முடிந்து அதை பல்வேறு முறைகளில் சரிபார்த்து, பல்வேறு முறைகளில் இணைத்து ஆய்வு முடிவுகளை எடுக்கும் பணி நடந்தது. இறுதியாக வரைபடங்களை தயாரித்து அனைத்தும் சர்வே முடிவுகளாக உங்கள் பார்வைக்கு வருகிறது.
அனைத்து இடங்களையும் சேர்த்து இந்த கருத்துக் கணிப்பிற்கு ஆன செலவு, படிவம் தயாரிப்பு, எழுது பொருள் செலவு, உணவு தேநீர் செலவு அனைத்தும் சேர்ந்து ரூ. 6,000த்திற்குள் மட்டும்தான். சென்னை சர்வேயில் பங்கேற்ற தோழர்கள் பலர் தமது காலை, மதிய உணவை அம்மா உணவகத்தில் முடித்தனர். அதுவும் அன்றைக்கு ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அங்கே இலவசமாக வழங்கப்பட்டது.
பொதுவாக கருத்துக் கணிப்புக்கான செலவு என்பது சந்திக்கப்படும் மக்களின் தலைக்கு இத்தனை ரூபாய் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமான சர்வே, விரிவான சர்வே, ஆழமான சர்வே என்று இதற்கு முதலாளித்துவ உலகம் விலையை நிர்ணயித்திருக்கிறது. வினவு சர்வேயை அத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தலைக்கு 1000 ரூபாய் என்று வைத்தால் முப்பது இலட்சம் வருகிறது. அதையே ரூ.6000 செலவில் உங்களுக்குத் தருகிறோம்.

கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்.

1. எல்லையில் வீரர்கள் கஷ்டப்படும் போது ஏ.டி.எம்.மில் நிற்க உனக்கு என்ன கேடு என்ற கேள்வி
ques1-army
____________________
2. ஜெயலலிதா, சசிகலா, சன் டி.வி மாறன்களின் கருப்புப் பணத்தை மோடி கைப்பற்றுவாரா?
ques2-modi-capture
____________________
3. கருப்பு பணத்தில் 50% அரசுக்கு கொடுத்துவிட்டு 50% வைத்துக் கொள்ளலாம் என்று சென்ற வாரம் மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வந்திருப்பது சரியா, தவறா?
ques3-new-law
____________________
4. பார்ட்டிசிபேட்டரி நோட் என்பது பற்றி தெரியுமா?
ques4-participatry-note
____________________
5. கருப்புப் பணம் அதிகமாக இருப்பது எங்கே?
ques5-blackmoney
____________________
6. ரஜினி, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் வாங்கும் சம்பளம் முறையாக வரிகட்டியது
ques6-actor-salary
____________________
7. மோடியின் நடவடிக்கையால் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் ஒழியுமா?
ques7-bribe
____________________
8. அண்ணாச்சி கடைகளில் நீங்கள் எந்த முறையில் பொருள் வாங்க விரும்புகிறீர்கள் ?
ques8-department-store
____________________
9. இனிமேல் தனியார் பள்ளி / கல்லூரிகளில் கருப்புப் பணமாக வாங்கப்படும் கட்டாய டொனேசன் நிறுத்தப்படுமா?
ques9-school-college
____________________
10. பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளுக்கு முதலாளிகள் கொடுக்கும் நன்கொடை
ques10-parties
____________________
11. மோடி நடவடிக்கையால் பாதிப்பிருந்தாலும் நீங்கள் ஏன் போராடவில்லை?
ques11-affested
____________________
12. மோடியின் நடவடிக்கையால் சிறுதொழில்கள், சிறு வணிகம் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. என்ன கருதுகிறீர்கள்?
ques12-small-industry
____________________
13. நீங்கள் எத்தனை நாட்கள் வங்கியின் முன் வரிசையில் நின்றீர்கள்?
ques13-queue
____________________
“அரசியல்வாதிங்க கஸ்டப்படறாங்களா? எங்க சார்.. ஒரு அரசியல்வாதி கஸ்டப்படறத காட்டுங்க பாக்கலாம்? வயசாளி ஜனங்கதான் சார் லைன்லே நின்னு செத்து விழறாங்க? அந்த ஆளுக்கு ஒரு மனசாட்சி இருக்காதா… இத்தினி ஜனங்க செத்துப் போயிருக்காங்களேன்னு உறுத்தாதா? என்ன சார் ஜென்மம்”
“இல்லைங்க.. இப்படியெல்லாம் கொஞ்சம் நாள் சிரமங்கள் இருக்கும், அதைப் பொறுத்துக்கிட்டா எதிர்காலம் நல்லா இருக்கும்னு தானே மோடி சொல்றாரு? கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டாமா?”
“ஒழிக்கட்டும்.. யாரு வேண்டாமின்னு சொன்னா? ஆனா இவரா ஒழிக்கப் போறாரு? அம்மா செத்து மாலை போட வந்தவரு.. நேரா போயி சசிகலா மண்டைய நீவிக்கிட்டு நிக்கிறாரு. இவரு எங்கேர்ந்து கருப்புப் பணத்தை ஒழிச்சிடப் போறாரு?”
– வினவு சர்வேயில் தனியார் பள்ளி ஆசிரியையின் கருத்து
சிறுபான்மை என்றாலும் கணிசமான மக்கள் “மோடியின் நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கானதே” என்று நம்பினர். அவ்வாறு நம்பியவர்களும் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்காதோரும் மதிப்பழிப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படும் முறையை மிகக் கடுமையாக விமரிசித்தனர். ஆச்சரியமாக, பாரதிய ஜனதா ஆதரவாளர்களும், மோடியின் இரசிகர்களுமே கூட இந்நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்து விடாது என்றே தெரிவித்தனர்.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தாம் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை ‘தேச நலனை’ முன்னிட்டு தாங்கிக் கொள்வதாக தெரிவித்தனர். என்றாலும், பெரும்பான்மை மக்கள் மோடியின் நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்புக்கானது அல்ல என்றே நம்புகின்றனர். பொருளாதார ஆய்வுகளில் இருந்தோ, பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையிலோ மக்கள் அந்த முடிவுக்கு வந்தடையவில்லை; மாறாக தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்தே அந்த முடிவுக்கு வந்துள்ளனர். அதே நேரம் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்கும் கணிசமானோரின் கருத்தை உருவாக்கும் பணியில் ஊடகங்களின் செல்வாக்கு இருப்பதையும் நாம் மறுக்க இயலாது.
படிவத்தின் ஆரம்பத்தில் வயது, தொழில், பாலினம், கட்சி சார்பு, டி.வி – தினசரி செய்தி படிக்கும் பார்க்கும் வழக்கம் போன்ற அறிமுக விவரங்களைப் பெற்றுக் கொண்டோம். அதன் அடிப்படையில் இந்த சர்வேயின் முடிவுகள் குறித்த ஆய்வு அடுத்த பாகத்தில் வெளிவரும்.
”கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்னு சொல்றாரு.. சரிங்க, ஆனா இது வரைக்கும் கருப்புப் பணம் வச்சிருக்கிற ஒரு அரசியல்வாதி, ஒரு காலேஜ் ஓனருன்னு எவனையுமே அரெஸ்ட் பண்ணலைங்களே? தோ பாருங்க.. இன்னிக்கு ஞாயித்துக் கிழமை.. கறியெடுக்க கையிலே காசில்ல. ரெண்டு மூணு நாளாவே வேலை செய்துட்டு இருந்த ஏ.டி.எம்கள் கூட வேலை செய்யாமே கிடக்கு. காலைலேர்ந்து ஒவ்வொரு தெருவா சுத்தி வந்தும் பாத்தாச்சி.. தோ அங்கே பாருங்க.. கார்லே போறான் அவன் கஷ்டப்படுவான்னா நினைக்கிறீங்க?”- என்கிறார் லெட்சுமணன்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சென்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளார். லெட்சுமணன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அருகே இருந்த அவரது நண்பர் மணிகண்டன் குறுக்கிடுகிறார்..
“ஏய்.. இருப்பா. தினத்தந்தியப் பாரு வேலூர்ல கோடி கோடியா புடிச்சிருக்கானாம்.. மோடி ஒருத்தனையும் விடமாட்டாருபா..” என்றவர், நம்மிடம் “சார், சுதந்திரத்திலேர்ந்து எத்தினி பேரு ஆண்டிருக்காங்க.. எவன் ஒருத்தனுக்காவது மோடிக்கு இருந்தா மாதிரி தில்லு இருந்திருக்கா? நீங்க வேணா பாருங்க.. இப்ப ரெண்டாயிரம் நோட்டு விட்டிருக்காரா.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் அதை வாங்கிப் பதுக்குனதுக்கு அப்புறம் அதையும் செல்லாதுன்னு சொல்லிடுவாரு.” என்றார்.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
“அப்படியே செத்து செத்து வெளையாட வேண்டியது தானா? யோவ்.. புடிச்சதெல்லாம் புது நோட்டுய்யா.. கவருமெண்டுக்கே தெரியாம எப்டி அவனுக்கு கிடைச்சிதாம்? என்னாங்கடா கொரளி வித்த காட்றீங்க” என்று தனது நண்பரை முறைத்த லெட்சுமணன், நம்மிடம் திரும்பி “சார், எப்டி பழைய கருப்புப் பணத்தை புது கருப்புப் பணமா மாத்தினானுங்களோ அதே மாதிரி நாளைக்கு ரெண்டாயிரம் நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சா வேற நோட்டுக்கு மாத்திடுவானுங்க. கவர்மெண்ட்டே இதுக்கு உள்கை சார்” என்கிறார்.
நண்பர்களின் மோதலுக்கு காரணமாகி விடக்கூடாதென அவர்கள் நிரப்பிய படிவங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தோம். மோடி ரசிகர் மணிகண்டன் நிரப்பியிருந்த படிவத்தைப் பார்வையிட்டோம் அதில் பள்ளி கல்லூரிகளில் செலுத்தப்படும் டொனேசன் இனிமேலும் கருப்பாகத் தான் இருக்கும் என்பதற்கான பெட்டியில் டிக் அடித்திருந்தார். இருபத்தைந்து வயதுக்கு கீழ் இருந்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சி ஆதரவற்றவர்களாவோ, மோடி ரசிகர்களாகவோ இருந்தனர். அவர்களுமே கூட இந்நடவடிக்கை லஞ்சத்தை ஒழித்து “வெள்ளையான” இந்தியாவைப் படைக்கும் என நம்பவில்லை.. “ஒரு அட்டெம்ப்ட் தானே பாஸ்” என்றார் ஒரு இளைஞர். அதே நேரம் இந்த பிரிவினர் குறிப்பாக மாணவர்கள் நாட்டு நடப்பு குறித்த பொது அறிவு ஏதுமற்றும் இருந்தது உண்மை. அது குறித்த ஆய்வும் இரண்டாம் பாகத்தில் வரும்.
“ஒன்றுமில்லாததற்கு ஏதோவொரு முயற்சி எடுப்பது நல்லது தானே” என இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்றால் குடும்பத் தலைவிகளின் கருத்தோ அதற்கு நேர் எதிரான திசையில் இருந்தது.
“மோடி அக்கவுண்டுலே காசு போடுங்கன்னு சொன்னதை நம்பி 13 ஆயிரத்த போட்டேன் தம்பி. ரெண்டு நா மின்ன போயி கேட்டா காசு தரமாட்டோமின்னு பேங்குல சொல்லிட்டாங்க. நான் போயி மேனேஜரு கிட்டே அழுகவும் ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் தாரோமின்னு சொன்னாரு. அன்னிக்கு சொன்ன படி காசு குடுத்தாங்க. நேத்து காசு எடுக்கலாமுன்னு ஆட்டோவுக்கு போக வர 100 ரூபா செலவு செஞ்சிட்டு பேங்குக்கு போனா இல்லேன்னு திருப்பி அனுப்பிட்டாங்க” என்கிறார் 60 வயதான பாத்திமா என்கிற முதிய பெண்.
அவரது வீட்டு வாடகையை வசூலிக்க புரசைவாக்கத்திலிருந்து வந்திருந்தார் வீட்டு உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும்.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
“சார் தப்பா நெனச்சிக்காதீங்க.. இன்னும் ரெண்டு ஒரு நாள்லே நானே கொண்டாந்து குடுத்துடறேன்” என்று அவரிடம் சொல்லி வழியனுப்பிக் கொண்டிருந்தார் பாத்திமா.
“மனுஷனுக்கு மனுஷன் இது கூட செய்யாட்டி எப்படிம்மா..” என்றவர் இரண்டடி நகர்ந்த பின் திரும்பி ”காசு கிடைச்சதும் கொண்டாந்து குடுத்துடுங்க.. இப்ப நான் வந்து போறதுக்கே இருநூறு ரூபா செலவு செய்திட்டேன்” என்றபடி நடையைக் கட்டினார்.
“பாருங்க தம்பி, இனி நான் வாடகை குடுக்க போக வர ஆட்டோவுக்கு செலவு செய்யனும். வயசாயிப் போச்சி.. பஸ்சுலயும் போக முடியாது. ஏதோ ஓனரு நல்ல மனுசனா இருக்கப் போயி பதினோராந்தேதி ஆகியும் வாடகை வசூலாகலைன்னு சத்தம் போடாம போறாரு” என்கிறார் பாத்திமா.
குடும்ப பாரத்தை தாங்குவதற்காக சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை.
“சார் எங்க மேடம் தினசரி கொஞ்சம் கொஞ்சமா காசு எடுத்து அதையெல்லாம் சேத்து வைச்சி தான் சம்பளம் குடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. இப்ப செலவுக்கு நாங்க எங்க சார் போவோம்? மோடி குடுப்பாரா சார்?” என்றார் தனியார் பள்ளி ஆசிரியை ப்ரமிளா.
அதே நேரம் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும் அரசியல் – பொது அறிவில் பின்தங்கியிருப்பதை பார்க்கமுடிகிறது. அவர்களின் கருத்தை டி.விக்கள் உருவாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது.  இல்லத்தரசிகளில் கணிசமானோர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஆனால் வேலைக்கு போகும் பெண்களோ மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர். இது குறித்த ஆய்வும் பின்னர் வரும்.
மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அரும்பாக்கம் அண்ணா பெரும்பாதையில் இருக்கும் கறிக் கோழி கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம்.
“யாரும் செலவு செய்யத் தயாரில்ல சார். கைலேர்ந்து போனா வராதுன்னு எல்லாரும் கிடைச்ச ஆயிரம் ரெண்டாயிரத்தையும் வீட்லேயே வைச்சி பாத்து பாத்து தண்ணி குடிச்சிட்டு இருக்கானுங்க. எங்க பொழப்பு நாறிடிச்சி சார்” என்றார்.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
அவருக்கு அக்கம் பக்கமாக கடை போட்டிருந்தவர்கள் தற்போது வியாபாரம் இல்லாமல் மூடி விட்டதாகத் தெரிவித்தார். “சார் இந்தக் கோழியெல்லாம் தாங்காது சார். வர வர தள்ளி வுட்டுடனும். தேங்கிடிச்சின்னா நம்ப கைக்காசு தான் போகும்” என்றவர், பகுதியில் இருந்த சில அசைவ உணவகங்களின் ஆர்டர் குறைந்த அளவிலாவது வந்து கொண்டிருப்பதால் தனது பிழைப்பு ஏதோ ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரிடம் ஸ்வைப் மிசின் வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை என்று கேட்டோம் “சார், நான் படிச்சதே அஞ்சாங்கிளாஸ் தான்.. அதுக்கெல்லாம் என்னா ரூல்சுன்னே தெரியாது சார்” என்றார்.
இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் ஏஜெண்ட் ஒருவர், வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்ற தனது வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை நகல்களை ஒப்படைக்க வேண்டுமென அவரது வங்கி திடீரென சொன்னதாகவும், இப்போது அந்த வாடிக்கையாளர்களை எங்கே போய்த் தேடுவதெனத் தெரியவில்லை எனவும் புலம்பினார். மேலும், பல சந்தர்பங்களில் வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்று இரண்டு நாட்கள் கழித்தே தனது கணக்குக்கு பணம் மாறுவதாகவும் தெரிவித்தார்.
“சரிங்க.. மோடி நாட்டோட பிரதமரு. அவரு சொல்றதுல எதுனா அர்த்தம் இருந்தாகனும் இல்ல. நீங்க கண்டிப்பா கார்டுல தான் வண்டி தருவேன்னு சொல்லிட வேண்டியது தானே?”
“சார் இதுக்கு இணையம் வேலை செய்யனும். அப்படியே வேலை செய்தாலும் பேங்க்கோட சர்வர் ஒழுங்கா இருக்கனும்.. அதாவது மூட்டைப்பூச்சி நசுக்கற மிசின் மாதிரி சார். அப்படியே ரெண்டு நாள் கழிச்சி நம்ம அக்கவுண்டுக்கு காசு வந்தாலும், ஒரு வாரத்துக்கு இவ்வளவு தான் எடுக்க முடியும்னு லிமிட் செட் பண்ணியிருக்காப்ல மோடி.. அப்புறம் நாங்க ரொட்டேசனுக்கு எங்கே போவோம்? எல்லாம் கேட்கிறதுக்கு நல்ல இருக்கும் அவ்ளோ தான் சார்” என்றார் சலிப்பாக.
மக்களின் துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஒரு பக்கமென்றால் அதை எந்த வகையிலும் எதிர்க்காமல் சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தும் மௌனமோ இன்னொரு புறம். அது குறித்த கேள்வியும் படிவத்தில் உண்டு. அதில் பெரும்பாலானோர் வேறு வழியில்லை என்றே தெரிவித்தினர்.
திருச்சியில் முதல் கேள்விக்கு சரி என்றும், தவறு என்றும் டிக் அடித்தவர்களிடம் விளக்கம் கேட்டு அவர்கள் அளித்த பதில் மூன்று வகையாக இருந்தது.
அ.தி.மு.க-பி.ஜே.பி இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இராணுவ வீரர்கள் நாட்டுக்காக நிற்கின்றனர் நாம் ஏ.டி.எம்-ல் நிற்பது ஒன்றும் தவறு இல்லை. என்று கூறினார்கள்.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
கட்சி சாராத அரசு ஊழியர்கள், வியாபரிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஓரளவு அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் இராணுவ வீரர்கள் சம்பளத்திற்காக நிற்கின்றனர் எங்களது பணத்தை எடுக்க நாங்கள் ஏன் நிற்க வேண்டும்? வேலைகளை விட்டுவிட்டு இங்கு வந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு எத்தனை முதலாளிகள் காரை ரோட்டில் போட்டு விட்டு  நிற்கிறார்கள்? நீங்களே பாருங்கள். மோடி வந்து வரிசையில் நிற்பாரா? இல்லை. இந்த ஆளு நிர்வாக திறமையில்லாத நபருங்க  இந்த இரண்டாயிரம் பணத்திற்காக தினமும் இந்த வெயிலில் நிற்க வேண்டியுள்ளது, என்று கூறினார்கள்.
இன்னும் சிலபேர் அரசுக்கு சார்பாக சர்வே எடுக்கிறீங்களா? என்று கேட்டனர். இல்லை ஊடக ஆராய்ச்சி என்று ஏதோ சொன்னதும் ஒருவர் உங்களால் தான் இந்த மோடி ஆட்சிக்கு வர முடிந்தது. விளம்பரம் செய்தே பிரதமரா வந்துவிட்டான் பாவி, உங்களை முதலில் உதைக்க வேண்டும் என்றார். சிலர் மோடியின் நோக்கமே வரி கூட்டுவதற்கு தான் இப்படி செய்கிறார் என்றனர்.
மூன்று நபர்கள் படிவத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக போடக்கூடாது (காங் + பா.ஜ.க வாங்கும் கருப்புப் பண நன்கொடை குறித்த கேள்வி) எவனாவது சண்டைக்கு வருவார்கள், அதனால் பெயர்களை தவிர்த்து விடுங்கள் என்றனர். சிலர் ஏ.டி.எம் வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளவர்களா? என்ற கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.
திருச்சியின் மைய SBI வங்கிக்கு முன்  எடிஎம் வரிசையில் உள்ளவர்களிடம் சர்வே எடுத்த போது தான் மோடியை கெட்டவார்த்தைகளில் திட்டினார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக படியான பாதிப்பில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
அதே நேரம் குடியிருப்பிலோ, மதுரை நீதிமன்ற வளாகத்திலோ மோடியை ரசிக்கும் மக்களும் உண்டு. கோவையில் பா.ஜ.க தரப்பினரும் டி.வி விவாதங்களில் பேசுவது போலவே சொல்கின்றனர். இருப்பினும் படிவத்தில் அவர்கள் அனைத்திற்கும் மோடிக்கு ஜே போடவில்லை.
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
கட்சி சார்பு என்று பார்த்தால் எங்களது கணிப்பில் மொத்த மக்களில் 4 சதவீதம் பேர் பா.ஜ.க-விற்கு ஆதரவு என்றே தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய கருத்துரைக்கும் பாணியும், அ.தி.மு.கவினரின் பாணியும் பெரிய அளவில் வேறுபடவில்லை. ஆனால் அ.தி.மு.கவில் சாதாரண மக்களும் பா.ஜ.கவில் நடுத்தர வர்க்கமும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தி.மு.க செல்வாக்கு அதிகம் இருந்த தஞ்சை, வேலூர் பகுதிகளில் கருத்துக்கள் மற்ற ஊர்களை விட மாறுபட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.
சென்னையில் சொந்தமாக பட்டரை வைத்திருக்கும் மெக்கானிக் ஒருவரை சந்தித்தோம். குழந்தைக்கு உடல் சுகமில்லை எனவும், கடந்த மூன்று நாட்களாக வங்கியில் பணம் எடுக்க முடியாமல் தவிப்பதாகவும், தெருவில் போவோர் வருவோரில் எப்போதோ பார்த்து சிரித்தவர்களைக் கூட விடாமல் கைநீட்டி காசு கேட்டும் கிடைக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் நிலைக்கு தான் வந்து விட்டதாகவும் சொல்லிக் கண்கலங்கினார்.
“சரிங்க… கஸ்டப்படறேன்னு சொல்றீங்க. இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பலரும் இதையே தான் சொல்றாங்க ஆனா ஏன் யாருமே போராட முன்வரலை?”
“வேற வழியில்ல சார்..” என்றவர் அவரிடமிருந்த படிவத்தை நம்மிடம் தந்து விட்டு தலையைக் குனிந்து கொண்டார்.
மொத்தத்தில் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றை மக்களிடம் காண முடிந்தது. அதோடு கூட எப்போது வெடிக்கும் எனத் தெரியாத எரிமலை ஒன்று உள்ளே குமைந்து கொண்டிருப்பதையும் கண்டுணர முடிந்தது.
  • தொடரும்

1 கருத்து:

Unknown சொன்னது…

‘Demonetisation can have value banks Rs 3,000 cr per day’
Stock Market Advisory