வியாழன், 22 டிசம்பர், 2016

ஓட்டுமொத்த அதிமுகவே ஆடிப்போய் உள்ளது .. 500 கோடிக்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை RMR தான் கவனிப்பார்


சீனியாரிட்டி அடிப்படையில் ராமமோகன ராவ், 20வது இடத்தில் இருந்தார். அவருக்கு தலைமை செயலாளர் பதவிக்கு கொடுக்கப்பட்டது  விகடன்.காம் :தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு நடத்திவிட்டு, தலைமைச் செயலகத்திற்குள்ளும் கால்பதித்துவிட்டது வருமான வரித்துறை. 'கார்டன் வட்டாரத்திற்கும் ஆட்சிக்கும் பகிரங்கமாக சில விஷயங்களை உணர்த்தத் தொடங்கியுள்ளது பா.ஜ.க. அ.தி.மு.க தரப்பில் இருந்து வேறு ஒரு வலுவான தலைவர் உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் பிரதமர் மோடி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஆட்சி அதிகாரத்திற்கும் சசிகலாவே தலைமை தாங்க வேண்டும்' எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். பொதுக்குழு முடிந்த பிறகு, 'சில மாதங்களில் சசிகலா வசம் ஆட்சி அதிகாரம் செல்லலாம்' என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், வருமான வரித்துறையின் அதிரடிகள், போயஸ் கார்டன் வட்டாரத்தை உலுக்கியெடுத்துள்ளது. "சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் குமார் வீடுகளில் ரெய்டு நடந்தபோது, 'அவர்களின் வர்த்தகத் தொடர்புகளுக்காக நடத்துகிறார்கள்' என்றுதான் அமைதியாக இருந்தனர்
மன்னார்குடி உறவுகள். ஆனால், அடுத்தடுத்து நடக்கும் சோதனைகளை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. போயஸ் கார்டனின் மிக நெருங்கிய நட்பில் உள்ளவர் சேகர் ரெட்டி. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். பொதுப் பணித்துறையின் ஒப்பந்தங்களை எடுத்துச் செய்து வருபவர். அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி கால நண்பரான பிரேம் குமார் வீட்டில் நடந்த ரெய்டிலும் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் நீட்சியே, தலைமைச் செயலாளர் தலையிலேயே கை வைத்துள்ளது" என விவரித்த அரசியல் பிரமுகர் ஒருவர்,
"முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற அமைச்சரவையின் கோரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு போய், மோடியிடம் கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே வருமான வரித்துறையின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. மாநில சுயாட்சிக்காக இறுதி வரையில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. தற்போது அரசின் அனுமதியில்லாமலேயே, மத்திய அரசின் துணை ராணுவப் படை தலைமைச் செயலாளர் வீட்டைக் காவல் காக்கிறது. இதற்குக் காரணம், ' மத்திய அரசுக்கு எதிராக கார்டன் வட்டாரத்தினர் செயல்படுகிறார்கள்' என்ற மத்திய உளவுப் பிரிவின் அறிக்கைதான். சசிகலாவின் கணவர் நடராஜன் மதுரையில் பேசும்போது, 'கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை மோடி வெளியிட வேண்டியதானே?' என விமர்சித்தார். அதன்பின்னர், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், 'மத்திய அரசு எங்களுக்கு நெருக்குதல் கொடுக்கிறது' என்றார். அதாவது, மத்திய அரசிற்கு இணக்கமாக தமிழக அரசு செயல்பட்டு வந்தாலும், 'அ.தி.மு.கவிற்கு வலுவான தலைமை அமைந்துவிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் மோடி. கட்சிக்குள் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் அதிகாரம் செலுத்த வந்தால், மிகப் பெரிய தலைமை உருவாக வாய்ப்பில்லை. அதைத்தான் பா.ஜ.கவும் விரும்புகிறது.
கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு, 'முதலமைச்சர் பதவியையும் ஓ.பி.எஸ் விட்டுக் கொடுத்துவிடுவார்' என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது. அப்படி அமைந்தால், அடுத்து வரக் கூடிய தேர்தலில் காங்கிரஸோடு அ.தி.மு.க கைகோர்க்க வாய்ப்பு அதிகம். பா.ஜ.க. தமிழகத்தில் கால் ஊன்றுவது சிரமமாகிவிடும். எனவேதான், கார்டன் வட்டாரத்தை நெருக்கும்விதமாக, இதுநாள் வரையில் அவர்களுக்கு விசுவாசமாக இருந்து வந்த ஆர்.எம்.ஆர் எனப்படும் ராமமோகன ராவை குறி வைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிரானவர் மோடி என்ற இமேஜை உருவாக்குகிறார்கள். இனி அடுத்தகட்ட ரெய்டு, அமைச்சர்கள் வீட்டிலா, மன்னார்குடி உறவுகளை நோக்கியா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்" என்றார் விரிவாக.
" 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று வந்த நேரத்தில், கார்டன் வட்டாரத்திற்குள் நுழைந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். அதுவரையில், தி.மு.க அரசிற்கு வேண்டப்பட்டவராகத்தான் இருந்தார். விலையில்லா மிதிவண்டி, முட்டை கொள்முதல் என மிக முக்கியமான அரசு ஒப்பந்தங்களின் பின்னணியில் ராமமோகன ராவ் இருந்தார். அவருடைய மகன் விவேக்கின் ராஜ்ஜியம் கோட்டையில் கொடிகட்டிப் பறந்தது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் நடந்த பணிகளின் பின்னணியிலும் ஆர்.எம்.ஆர் இருந்தார். '500 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தம் என்றாலே ராமமோகன ராவ்தான் கவனிப்பார்' என அமைச்சர்களே வெளிப்படையாக பேசி வந்தனர். கார்டன் வட்டாரத்தின் மிக முக்கிய கஜானாவாக இருந்த, தலைமைச் செயலாளரை அசைத்துப் பார்த்துவிட்டது ஐ.டி. இது நேரடியாகவே கார்டனை குறிவைக்கும் திட்டம்தான்.
இப்படியொரு ரெய்டு நடத்தப்பட இருக்கிறது என மத்திய அரசில் இருந்து, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரியப்படுத்தியுள்ளனர். அவரும் ரெய்டு நடத்துவதற்கு சிக்னல் கொடுத்துவிட்டார். தலைமைச் செயலாளருக்கு அடுத்து, ஆட்சி அதிகாரத்தில் உள்ள 'முக்கியமானவரை' குறிவைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பிரதமரோடு நட்பு பாராட்டுபவர்தான் அந்த முக்கியமானவர். அடுத்ததாக, கார்டன் வட்டாரத்திற்கு விசுவாசமாக இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் வளையத்திற்குள் கொண்டு வரப்பட இருக்கின்றனர். சேகர் ரெட்டியின் தொடர்பில் லாபம் பார்த்தவர்கள்; தலைமைச் செயலாளரின் நட்போடு காரியம் சாதித்த செயலர்கள் என அனைத்து விவரங்களையும் துல்லியமாக சேகரித்துவிட்டது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. அடுத்தடுத்த நாட்களைக் கடந்து போவதற்கே அ.தி.மு.க அமைச்சர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.
அரசு அதிகாரிகளின் வர்த்தக தொடர்புகளை மக்கள் முன்வைப்பது; அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழலை அடையாளம் காட்டுவது; ஊழல் அரசாங்கம் என்ற இமேஜை உருவாக்குவது என தமிழக அரசைக் குறிவைத்து வெகு சீரியஸாக களம் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், ஆளுநர் துணையோடு காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களை கவலையோடு கவனித்து வருகிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: