சனி, 24 டிசம்பர், 2016

அதிமுகவின் இன்றய கொள்கை முழக்கம் : நான் உன்னை காட்டி கொடுக்கமாட்டேன் ! நீயும் என்னை காட்டிகொடுக்காதே ! ப்ளீஸ் !

ராமமோகன் ராவ் அலுவலகத்தில் சிக்கிய லேப்டாப்பும் டைரியும்தான் இப்போது, அமைச்சர்கள் பலரை அலறவைத்துக் கொண்டிருக்கிறது. வருமானவரித் துறையின் சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், அடுத்த கட்டமாக ராமமோகன் ராவை சி.பி.ஐ. விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ராமமோகன் ராவை நேரடியாக விசாரிக்க, சட்ட திட்டங்களால் சி.பி.ஐ-க்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் சேகர் ரெட்டி விவகாரத்தில், கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் நபராக ராமமோகன் ராவை கொண்டுவரலாம். அப்படி கொண்டுவரும்பட்சத்தில், அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. டெல்லியில் அதற்கான மூவ்கள் நடந்து வருகின்றன. ‘தமிழகத்தில் பிஜேபி காலூன்ற வேண்டுமென்றால் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுக்குமே கெட்டபெயரை உண்டாக்க வேண்டும்.
ஏற்கனவே, திமுக-வுக்கு 2ஜி விவகாரம் இருக்கிறது( அடே அது வெறும் புலுடானு நோக்கு தெரியாதோ அம்பி ?). அந்த வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. தீர்ப்பு வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். அதிமுக-வின் இமேஜை உடைப்பதற்கு இதுதான் சரியான தருணம். நேரடியாக, அதிமுக அமைச்சர்கள்மீதோ அல்லது நிர்வாகிகள்மீதோ கை வைத்தால் அது சில சர்ச்சைகளை கிளப்பும். அதனால்தான், சேகர் ரெட்டி வடிவத்தில் சுற்றிவளைத்து, அடுத்தடுத்த மூவ்களை பிஜேபி அரங்கேற்றி வருகிறது. முதலில், சேகர் ரெட்டி அடுத்து ராமமோகன் ராவ். இவர்களை வைத்து, இவ்வளவு ஊழல்களுக்கும் துணையாக இருந்தது என்று சொல்லி அதிமுக-வை மக்கள் ‘டேமேஜ்’ செய்வதுதான் பிஜேபி திட்டம். அதற்காகத்தான், ஒவ்வொரு மூவ் ஆக செய்துவருகிறார்கள்’ என்று சொல்கிறார் டெல்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்.” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது.அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் கம்போஸ் செய்ய ஆரம்பித்தது.
“பிஜேபி நினைப்பதும் செய்வதும் அதிமுக-வுக்கு தெரியாமல் இல்லை. எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தபடியேதான் இருக்கிறார் சசிகலா. ராமமோகன் ராவை அடுத்ததாக கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டிருக்கிறது என்ற தகவலும் கார்டனுக்கு வந்திருக்கிறது. அவர்களில் சிலர் கொடுத்த அட்வைஸ்படிதான் ராமமோகன் ராவ் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘விசாரணையென்று வந்தால், எதற்கும் வாய் திறக்க வேண்டாம். எல்லாம் சட்டப்படிதான் நடந்திருக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள். அதேபோல, எந்த இடத்திலும் அம்மாவின் பெயரையோ, அமைச்சர்கள் பெயரையோ சொல்ல வேண்டாம்’ என்றும், அவருக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் போயிருப்பதாகவும் சொல்கிறார்கள். ராமமோகன் ராவ் தரப்பிலிருந்து கார்டனுக்குப் பேசியவர்களோ, ‘அவரு எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கு எதிராகச் செயல்படமாட்டார். அதேநேரத்தில், நீங்களும் எந்தக் காரணத்துக்காகவும் அவரை விட்டுக் கொடுத்துடாதீங்க. அவர், இவ்வளவு நாளா செஞ்சது எல்லாமே அம்மாவுக்காகத்தான்!’ என்று சொல்லியிருக்கிறார்கள். ராமமோகன் ராவ் வாய் திறக்கவில்லை என்றாலும், ஆவணங்களும் ஆதாரங்களும் சிக்கலை உண்டாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. அதைப் படித்துவிட்டு லைக் போட்ட வாட்ஸ் அப், அப்படியே ஷேரும் செய்தது.
அடுத்த ஸ்டேட்டஸும் ஃபேஸ்புக்தான் தயாராக வைத்திருந்தது. லொக்கேஷன் எழும்பூர் ரயில் நிலையம் எனக் காட்டியது. “மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்குமுன்பே, என்ன செய்யவேண்டும் என்பது கார்டனிலிருந்து எல்லா மாவட்டச் செயலாளர்களுக்கும் சொல்லப்பட்டுவிட்டது. ‘29ஆம் தேதி பொதுக்குழுவுக்கு சென்னைக்கு நிர்வாகிகளை அழைத்துவரும் பொறுப்பு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடையதுதான். எந்த நிர்வாகியையும் தனியாக வரச்சொல்ல வேண்டாம். எல்லோருக்கும் ரயிலில் ஏ.சி. வகுப்பில் முன்கூட்டியே, வருவதற்கும் போவதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்துவிடவும். சென்னையில் அவர்கள் தங்குவதற்கு இரண்டுபேருக்கு ஒரு ரூம் என நல்ல, தரமான ஹோட்டலில் ஏ.சி. ரூம் புக் செய்துவிடவும். அவர்கள் சென்னைக்கு வந்து போகும்வரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். எந்தக் காரணம் கொண்டும், பொதுக்குழுவில் சின்னம்மாவுக்கு எதிராக யாரும் பேசிவிடவோ, குரல் எழுப்பிவிடவோ கூடாது. கவனமாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளைத்தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் செய்து வருகிறார்கள்.” மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: