ஞாயிறு, 27 நவம்பர், 2016

மார்க்சிஸ்ட் கட்சியும் மா ஓயிஸ்டுகள் குறித்த அணுகல் முறையும்.

கேரளத்தில் நீலாம்பூர் வனப் பகுதியில் நடைபெற்றுள்ள என்கவுண்டர் படுகொலைகளை கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் கண்டித்துள்ளார். அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும், சுட்டுக் கொன்றது தவறு எனக் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சியான CPI கட்சிச் செயலாளர்கானம் ராஜேந்திரன், "மக்கள் நம்மை ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்திருப்பது BJP காரர்களைப்போல் நடந்துகொள்வதற்கல்ல " என்று இந்த என்கவுன்ட்டரை கண்டித்துள்ளார்.
தண்டர்போல்ட் என்பது நக்சல் ஒழிப்பிற்காகக் கேரள மாநிலத்திற்கென உருவாக்கப்பட்ட ஒரு படை. எனினும் இத்தகைய கொடும் அமைப்புகள் உள்ளூர் போலீசுடன் இணைந்துதான் இதைச் செய்கின்றன. சென்ற மாதத்தில் நடைபெற்ற மக்கான்கிரி படுகொலைகளும் இப்படித்தான் ஆந்திர - தெலுங்கானா மாநில நக்சல் ஒழிப்புப் படையான கிரேஹவுண்டசும் உள்ளூர் போலீசும் சேர்ந்து நடத்தியதுதான்.
இது கேரள முதல்வர் பிரணயி விஜயன் மட்டத்தில் ஒப்புதல் பெற்று செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் மாவோயிஸ்டுகளைக் கையாள்வதில் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும், இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் பொது அணுகல்முறையிலிருந்து வேறுபட்ட அணுகல்முறை என எதையும் உருவாக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் ஆட்சி அதிகாரத்தை நக்கிச் சுவைத்த அனுபவம் உடைய மே.வங்கம், கேரளம் முதலான மாநிலங்களில் உள்ள கட்சியின் தன்மைக்கும் பிற மாநிலங்களில் அதன் தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.
கேரளத்தில் ஆட்சிக்கு வருமுன் அது நடத்திய வீரஞ்செறிந்த மகத்தான போராட்ட வரலாறுகளையும் அநுபவித்த அடக்குமுறைகளையும் அது ஆட்சியில் இருந்த காலங்களில் எந்த அளவு நினைவில் கொண்டு செயல்பட்டது என்பதெல்லாம் கேள்விக்குரிய ஒன்றுதான்.
எப்படியோ இன்று ஒரு ஆளும் கட்சியின் மாநிலச் செயலாளர் அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற ஒரு என்கவுண்டரைக் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இடதுசாரிகளிடம் இன்னும் எஞ்சியுள்ள இடதுசாரித் தன்மையின் எச்ச சொச்சங்களில் ஒன்று என்று தான் இதைச் சொல்லத் தோன்றுகிறது.
நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற அந்த திட்ட ஆணையம் நியமித்த குழு (பாலகோபால் உள்ளிட்ட மனித உரிமைப் போராளிகள் மற்றும் முன்னாள் அதிகாரவர்க்கத்தினர், காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு) 2008 ல் அளித்த அறிக்கை ஒரு மிக முக்கியமான ஆவணம். நக்சல் பிரச்சினையை ஒரு வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்க்கும் அரச அணுகல்முறையைக் கண்டிக்கும் இவ்வறிக்கை அதை ஒரு அரசியல் பிரச்சினை என அங்கீகரித்து அணுக வேண்டும் என வற்புறுத்துகிறது. பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் அரசுகள் தோற்றுள்ளன. அரசுகள் தோற்ற இடங்களில் ஒரு மாற்றாந்தாயைப் (surrogate state) போலச் செயல்படும் மா ஓயிஸ்டுகளை அங்கீகரித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்பது அந்தக் குழு அளிக்கும் பரிந்துரை. அந்த அற்புதமான அறிக்கையை அனைத்து அரசுகளும் குப்பையில் எறிந்தன. இந்த அம்சத்தில் இடதுசாரிக் கட்சிகளும் பெரிய வித்தியாசங்களுடன் நடந்து கொள்ளவில்லை.
எல்லாத்தரப்பு இடதுசாரிகளும் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ளும் காலம் இது. மறுபரிசீலனை செய்துகொள்வது மட்டுமே தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்வதற்கான ஒரே வழி என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அந்த வகையில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர்களின் இந்தக் கருத்துக்களையும் கண்டனங்களையும் வரவேற்போம்.  முகநூல் பதிவு
Marx Anthonisamy

கருத்துகள் இல்லை: