திங்கள், 28 நவம்பர், 2016

டிஸ்சார்ஜ் நாள் குறித்துக் கொடுத்த புதிய ஜோதிடர்! இதெல்லாம் ஒரு கட்சி.. ஆட்சி அதிகாரம் வேற .. வெளங்கிடும்!

minnamalam.com : “முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவது பற்றிய முடிவெடுப்பது முதல்வர் கையில்தான் இருக்கிறது என்பதை திரும்பத்திரும்ப சொல்லி வருகிறார் அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி. டிஸ்சார்ஜ் தொடர்பாக சசிகலா தீவிர ஆலோசனையில் இருக்கிறார். ஏற்கனவே, வேளச்சேரியில் உள்ள கேரள ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் சில ஐடியாக்களை சொன்னார். நாளும் குறித்துக் கொடுத்தார். அதில் சசிகலா திருப்தி ஆகவில்லை. இப்போது லேட்டஸ்ட்டாக கூட்டநெரிசல் மிகுந்த சென்னைப் பகுதியில் இருக்கும் ஜோதிடர் ஒருவர் எண்ட்ரி ஆகியிருக்கிறார். அந்த ஜோதிடரிடம் ஜெயலலிதா ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் ஜாதகத்தை முழுவதுமாகப் படித்து முடித்து, பஞ்சாங்கத்தை வைத்து சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அதன்படி, ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை ஜாதகப்படி சரியில்லாமல் இருக்கிறது. டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தாலும் டிசம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் அந்த ஜோதிடர் கொடுத்த அட்வைஸ்.
அதுமட்டுமல்ல. ‘டிசம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஒரு வருடத்துக்கு முதல்வரின் ஆரோக்கியத்துக்கு எதுவும் சிக்கல் இருக்காது. அவர்களின் ராசிப்படி அமோகமாக இருப்பார். டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் டிஸ்சார்ஜ் வைத்துக் கொள்ளலாம். அது வளர்பிறையாகவும் இருக்கிறது’ என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.

(டாக்டர் சிவகுமார், விவேக்)
ஏற்கனவே, வேளச்சேரியில் உள்ள கேரள ஜோதிடரும் டிசம்பர் 5 அல்லது 12 என இரண்டு தேதிகளைத்தான் டிஸ்சார்ஜுக்கு குறித்துக் கொடுத்திருக்கிறார். இப்போது, புதிய ஜோதிடர் குறித்துக் கொடுத்த நாளும் அத்துடன் ஒத்துப்போகிறது. எனவே, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அவர்கள் சொன்ன நாளில் டிஸ்சார்ஜ் வைத்துக் கொள்ளலாம் என சசிகலா நினைக்கிறார். டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் ஒருநாளில் டிஸ்சார்ஜ் இருக்கலாம் என்பதே அவர்கள் தரப்பிலிருந்து இப்போது கசியும் தகவல். டிஸ்சார்ஜுக்குப் பிறகு போயஸ் கார்டனிலேயே இருக்கலாம். வேறு எங்கேயும் வேண்டாம் என்ற முடிவுக்கு சசிகலா வந்துவிட்டாராம்” என்பதுதான் அந்த போஸ்ட். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப், அடுத்ததாக மெசேஜ் ஒன்றையும் தட்டியது.
“அப்பல்லோவுக்குப் போயிருந்தேன். இன்று காலையில் சரியாக 9.40 மணிக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் சிலர் வந்தார்கள். அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்ற செந்தில்பாலாஜியும் இன்று அப்பல்லோவுக்கு வந்திருந்தார்.
தரைத்தளத்தில் உள்ள ரிசப்சனில் செந்தில்பாலாஜி காத்திருந்தார். 11 மணியளவில் இளவரசியின் மகன் விவேக் உள்ளே வந்தார். அப்போது எழுந்துநின்று வளைந்து கும்பிடு போட்டார் செந்தில்பாலாஜி. அவரிடம் செந்தில்பாலாஜி ஏதோ சொல்ல, தலையாட்டியபடியே ஜெயலலிதா இருக்கும் தளத்துக்குப் போனார் விவேக். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த டாக்டர் சிவகுமாரும் மேலே போனார். மதியம் ஒரு மணியளவில் சசிகலாவின் அறையிலிருந்து சிவகுமாரும், விவேக்கும் வெளியே வந்தார்கள். அப்போது, அவர்கள் இருவருக்குமிடையில் ஏதோ காரசாரமான வாக்குவாதம் நடந்திருக்கிறது. விவேக், ஏதோ சொல்லச்சொல்ல... சிவகுமாரும் விடாமல் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில் விவேக் மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டாராம்.
]
(செந்தில் பாலாஜி)
எதற்காக இருவருக்குமிடையில் வாக்குவாதம் என விசாரித்தோம். ‘விவேக் சின்னக் குழந்தையாக இருக்கும்போதிருந்தே போயஸ் கார்டனில் வளர்ந்தவர். அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. அதனால் கட்சிக்காரர்களுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி மரியாதை கொடுக்கவே மாட்டார். என்ன நினைக்கிறாரோ அதைப் பேசிடுவாரு. சில நேரங்களில் பலரையும் எடுத்தெறிந்து பேசுவது அவரது வழக்கமாகியிருந்தது. இப்போதும் அப்படித்தான் ஏதாவது நடந்திருக்க வேண்டும். சிவகுமார் சொல்வதை அவர் கேட்டிருக்க மாட்டார். தான் சொல்வது நடக்க வேண்டும் என்பதில் விவேக்குக்கு பிடிவாதம் அதிகம். செந்தில்பாலாஜியை மீண்டும் உள்ளே சேர்ப்பதில் சிவகுமாருக்கு விருப்பம் இல்லை. ஆனால் விவேக்தான் அவரைக் கொண்டுவந்தே ஆக வேண்டும் என தொடர்ந்து சொல்லிவருகிறார். இப்போது, மீண்டும் செந்தில்பாலாஜிக்கு சீட் கிடைக்க காரணமும் விவேக்தான். அத்தையிடம் பேசி, அவர்தான் செந்தில்பாலாஜிக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். செந்தில்பாலாஜி ஜெயித்தபிறகு சசிகலாவை சந்திக்க வேண்டும் என ஆர்வம்காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் விவேக்தான் செய்துவருகிறார். அதில், ஏதாவது இருவருக்கும் மோதல் வந்திருக்கலாம்’ என்கிறார்கள். எது எப்படியோ, செந்தில் பாலாஜி செல்வாக்கு மீண்டும் கார்டன் வட்டாரத்தில் ஏற ஆரம்பித்திருப்பது உண்மை!”

கருத்துகள் இல்லை: