திங்கள், 28 நவம்பர், 2016

ஃபிடல் காஸ்ட்ரோ ஏன் இலங்கை அரசை ஆதரித்தார்? யமுனா ராஜேந்திரன்.

யமுனா ராஜேந்திரன் thetimestamil.com : வரலாறு முழுதும் கியூப அரசை அழிக்க முயன்ற அமெரிக்க அரசு ஆதரிக்கும் எதனையும் கியூபா ஆதரிக்க முடியாது. அமெரிக்க அரசு உலக அரசியலில் மனித உரிமை என்பதைத் தனது அதிகாரத்தை நிலைநாட்டும்-தலையிடும் தந்திரமாகவே பாவிக்கிறது. அமெரிக்கா மகிந்த அரசு இருந்த போது கொண்டிருந்த நிலைபாட்டையும் இன்றைய நிலைபாட்டையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
கியூபா பாரம்பர்யமாகவே இந்திய அரசின் நண்பன். இந்தியப் பிரதமர் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பை அதனது நட்பு நாடு ஆதரிக்க முடியாது. ஃபிடல் தனிமனிதன் அல்ல, ஒரு நாட்டின் தலைவன். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பு உலகின் இடதுசாரி விடுதலை அமைப்புக்களுடனோ அல்லது கலைஞர்கள்-சிந்தனையாளர்களுடனோ ஒரு போதும் தோழமையைப் பேணியிருக்கவில்லை.

கியூபா திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகவோ அல்லது இனக்கொலைக்கு ஆதரவாகவோ சுயாதீனமாக முடிவெடுக்கவில்லை. பாரம்பர்யமாக அமெரிக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த முழு இலத்தீனமெரிக்க நாடுகளும் அமெரிக்கக் கொள்கையை-அதனது மனித உரிமை மற்றும் தலையீட்டுக் கொள்கைகளை எதிர்த்தே வந்திருக்கின்றன.
நாடுகள் விடுதலை அமைப்புகளை ஆதரித்து வந்த காலம் சோவியத் யூனியனின் வீழ்ந்த நாளில் முடிவுக்கு வந்தது. முன்னாள் சோசலிச நாடுகள் கருத்தியல் ரீதியில் முடிவெடுப்பது என்பது முடிந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எனும் வெளிவிவகாரக் கொள்கையைத் தேர்ந்த காலமும் அதுதான். கியூபாவும் இந்த உலக நிலைமையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் முடிவுகளையே எடுக்க நேர்ந்தது.
ஈழவிடுதலைப் போராட்டத்தை உள்ளார்ந்து உணர்ந்த நண்பர்கள் கியூபத் தோழமை அமைப்புகள் மூலம் கியூப அரசைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ரான் ரைட்னர் சர்வதேச அளவில் பயணம் செய்து நூலையும் எழுதி வெளியிட்டார்.
பிரச்சினைகளை எப்போதுமே தனிநபர்களுக்கு இடையிலானதாகக் குறுக்கிக் காணும் எவரும் அரசியல் யதார்த்தங்களை பகுப்பாய்வு செய்வது கிடையாது. ஃபிடல் சொல்வது போல ‘கியூபா ஒரு நாளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு-புரட்சியைப் பாதுகாத்தல் என்பதில் மூலோபாயத் தவறுகள் செய்ததில்லை. ஒரு நாடு எனும் அளவில் தந்திரோபாயத் தவறுகளை அது செய்திருக்கிறது’. இந்தப் பரிதலுடன் வரலாற்றில் ஃபிடல் எனும் ஆளுமை வகித்த பாத்திரத்தை மறுப்பவர்களை, மிகுந்த அகவய உணர்வுடன் வசைபாடுபவர்களை வரலாறு கடந்து செல்லும்..
யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர். வெளிவரவிருக்கும் நூல்கள் இடது பக்கம் திரும்புவோம்-உலக எதிர்ப்பு இலக்கியம், ஜோரிஸ் இவான்ஸ் தேடிய காற்று- உலகை மாற்றிய ஆவணப்படங்கள், புத்தனின் பெயரால்-திரைப்பட சாட்சியம்.

கருத்துகள் இல்லை: