திங்கள், 20 ஜூன், 2016

தில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவாலை வெளியேற்றுவோம்: சுப்பிரமணியன் சுவாமி

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் ரகுராம் ராஜன் நீடிக்க முடியாமல் வெளியேறுவதைப் போல தில்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவாலை வெளியேற்றுவோம் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
தில்லியில் மாநகராட்சி கவுன்சிலின் சட்ட ஆலோசகர் எம்.எம். கான் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கும் பாஜக எம்.பி. மகேஷ் கிரிக்கும் தொடர்பிருக்கிறது என்பது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு. பாஜக எம்பி மகேஷ் கிரியை ஆளுநர் நஜீப் ஜங் காப்பாற்றுவதாகவும் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். 
கேஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டுக்கு எதிரே நேற்று முதல் மகேஷ் கிரி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். ஆனால் கேஜ்ரிவாலோ, எம்.எம்.கான் கொலை வழக்கில் மகேஷ் கிரியை மோடி போலீஸ் கைது செய்து விசாரிக்கத்தான் போகிறது என கூறியிருக்கிறார். 
இந்த நிலையில் மகேஷ் கிரிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பாக அவர் கூறுகையில், அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு மோசடியான நபர்... ஐஐடி-யில் தம்மை மெரிட் மாணவர் என கூறி வருகிறார். அவர் எப்படி ஐஐடியில் அட்மிஷன் வாங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. செய்தியாளர்களிடம் அதை தர இருக்கிறேன்.
ரகுராம் ராஜனை விரட்டியடித்தது போல அரவிந்த் கேஜ்ரிவாலையும் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பேன். டெல்லி ஆளுநர் நஜீப் சங், கேஜ்ரிவால் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மகேஷ் கிரி தம்முடைய போராட்டத்தைக் கைவிடக் கூடாது; அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்யும் வரை அவர் ஓயக் கூடாது என்றார்.  dinamani.com

கருத்துகள் இல்லை: