புதன், 22 ஜூன், 2016

யானையை வனத்துறையினர் கொடுமையாக சுட்டு கொன்றனர்....!


கோவை வரகலியார் ஆணை பயிற்சி முகாமில் அடைக்கப்பட்ட ஆண் காட்டு யானை மகராஜ் திடீரென மரணமடைந்தது. யானையின் மறைவுக்கு மதுக்கரை பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். யானையை மதுக்கரையிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை மகராஜ் இயற்கையாக மரணமடையவில்லை என்றும் வனத்துறையினரால் அது கொல்லப்பட்டிருக்கலாம் என்று விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த ஒற்றை ஆண் காட்டு யானையை மதுக்கரை வனப்பகுதியில், கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுகிழமையன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வரகளியார் முகாமில் உள்ள கூண்டில் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மகராஜ் என்ற அந்த யானை அடைக்கப்பட்டது.

யானை மரணம்
இதையடுத்து முகாமை சுற்றிலும் 5 கும்கி யானைகளுடன் வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கூண்டில் அடைக்கப்பட்ட யானைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் யானை உயிரிழந்தது.
மயக்க மருந்தால் மரணம்
சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் சுப்பையா உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினரும் சென்று விசாரனை நடத்தி வருகின்றனர். யானை இறந்ததன் காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் கொடுக்கப்படவில்லை எனினும், அதிகப்படியாக மயக்க ஊசி செலுத்தியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மக்கள் கண்ணீர்
மதுக்கரையில் சுற்றித் திரிந்த மகாராஜா யானைக்கு கட்டையன் என்று அந்த பகுதி மக்கள் செல்லப்பெயர் வைத்துள்ளனர். யானையின் மரணம் அந்த பகுதி மக்களை வெகுவாக பாதித்துள்ளது. கட்டையன் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
குடும்பத்தில் ஒருவர்
கட்டையன் கடந்த ஒன்றரை வருடமாக மதுக்கரையையே சுற்றிச்சுற்றி வந்தது. இதனால யாருக்கும் தொந்தரவு இல்லை. அவ்வப்போது பயிர் நிலங்களை மேய்ந்துவிட்டு செல்லும். அதைக்கூட நாங்கள் யாரும் பெரிதாகப்பார்க்கவில்லை. கட்டையனை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து வந்தோம் என்று மதுக்கரையை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
மதுக்கரையில் அடக்கம்
யானை கட்டையன் இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கட்டையன் உலவி வந்த மதுக்கரையிலேயே அவனை அடக்கம் செய்ய வேண்டும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று மதுக்கரை மக்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.
யானை கொல்லப்பட்டதா?
கோவை மதுக்கரை வனப் பகுதியில் பிடிக்கப்பட்ட யானை இறந்துவிட்டதாக வனத் துறை கூறுவதை ஏற்க முடியாது என்றும் அது கொல்லப்பட்டது என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விலங்க நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
யானையைப் பிடிக்கும்போது கையாளப்படும் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள தொடக்கம் முதலே சூழலியல் ஆர்வலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த யானையின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று சூழலியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
ஓய்வு அளிக்கவில்லை
அச்சுறுத்தும் வன விலங்கை பிடித்து அகற்றுவதற்காக மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் 2003இல் வழிகாட்டும் நெறிமுறையை வகுத்துள்ளது. அதன்படி, பிடிக்கப்படும் விலங்குக்கு ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட வேண்டும். நீண்ட தொலைவு பயணம் கூடாது.
முறையான விசாரணை தேவை
யானைகளுக்கும் மனிதர்களைப் போன்று இருதய செயலிழப்பு, ரத்த அழுத்தம் இருப்பதால், உடலின் வெப்பத்தைக் குறைத்து, ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை எதுவும் கையாளப்படவில்லை. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோவை இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜலாலுதீன் வலியுறுத்தியுள்ளார்.
மிஷன் மதுக்கரை மகராஜ் தோல்வி
வனத் துறையின் மிஷன் மதுக்கரை மகராஜ் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவும், வழித்தடங்களை ஆக்கிரமித்திருப்பவர்களின் பட்டியலைத் தயாரித்து நடவடிக்கை எடுப்பதும் உடனடித் தேவை யானைகள் ஆர்வலர் வினோத்குமார் கூறியுள்ளார். யானை தாக்கி ஒரு பக்கம் மனித உயிர்கள் பலியாகின்றன. அதே நேரத்தில் பிடிபட்ட யானை உயிரிழந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.  தமிழ்.ஒனிந்தியா .காம்

கருத்துகள் இல்லை: