வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஜெயலலிதா அதிரடி : இனிமேல் அதிமுகவிற்கு வெற்றிதான்...எந்த காலத்திலும் தோல்வியே கிடையாது..

சென்னை:''இனிமேல் அ.தி.மு.க.,விற்கு வெற்றிதான்; என்றுமே வெற்றிதான்;
இனி எந்தக் காலத்திலும் தோல்வி இல்லை,'' என அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையுடன் பேசியதால் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். >அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது: நான்கு மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கிறோம். இன்னும் ஒரு முறை இவர்கள் ஆண்டால் அடுத்த தேர்தல் தமிழகத்துக்கு தேவையே இல்லை... திவாலாகும் தேசத்துக்கு தேர்தல் தேவை இல்லைதானே


அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய உண்மையான வளர்ச்சியை தமிழகம் எய்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சமூக நலதிட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.இலவச மிக்சி, கிரைண்டர் , மின் விசிறி வழங்கும் திட்டம்; மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதிய திட்டம்; தாலிக்கு தங்கத்துடன் கூடிய 50 ஆயிரம் ரூபாய் வரையிலான
திருமண உதவி திட்டம்; இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம்; அம்மா உணவகம்; அம்மா உப்பு; அம்மா குடிநீர்; அம்மா மருந்தகம்; அம்மா சிமென்ட் என பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாவ மன்னிப்பு: தமிழகத்தில் குறை காண முடியாத அளவுக்கு நிறைவான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.முதல்வர் வேட்பாளர் என மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் ஒருவர் ஒவ்வொரு ஊராக சென்று 'நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்; இனிமேல் இதுபோன்று எந்த தவறையும் செய்ய மாட்டோம்' என பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்து வருகிறேன். தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும்.தேர்தலை சந்திப்பதற்கு எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது.

கடந்த 2011 சட்டசபை தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர் கொண்டோம். அடுத்து 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். அதேபோல் வரும் சட்டசபை தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்.நான் சொல்கிறேன்... எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இதுவரை அ.தி.மு.க. ஆறு முறை ஆட்சி அமைத்திருக்கிறது.

இனிமேல் அ.தி.மு.க., விற்கு வெற்றிதான்; என்றுமே வெற்றிதான்; இனி எந்தக் காலத்திலும் தோல்வி இல்லை. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.
ஜெ.,வை குளிர்வித்த தீர்மானங்கள்!
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்* தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து படகுகளை பறிமுதல் செய்து வருகிறது. இதை தடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவில் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் * தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு 25,912 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் கோரியுள்ளார். அதை ஏற்று மத்திய அரசு உடனடியாக தேவையான நிவாரண நிதியை வழங்க வேண்டும் * முதல்வரின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகையின்போது 'ஜல்லிக்கட்டு' நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் * மின் உற்பத்தியிலும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதிலும் சரித்திரம் பேசும் சாதனைகளை மிகக் குறுகிய காலத்தில் நிகழ்த்தி காட்டியிருக்கும் முதல்வருக்கு பாராட்டு. * அப்துல் கலாம் நினைவை போற்ற முதல்வர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

அ.தி.மு.க., பொதுக்குழு துளிகள்
* பொதுக்குழுவுக்கு வந்த ஜெயலலிதாவை அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் வரவேற்றார்; முதல்வருக்கு அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் வீரவாள் வழங்கினர். மகளிர் அணி சார்பில் மலர் மாலை வழங்கப்பட்டது. * தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. * முதல்வர் வரும் வழியில் சாலைகள் பளிச்சிட்டன. திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்த பகுதியை சுற்றி புதிதாக சாலை போடப்பட்டிருந்தன. * பல தெருக்களில் அவசர அவசரமாக கடைசி நேரத்தில் சாலைகள் அமைக்கப்பட்டதால் பொதுக்குழுவுக்கு வந்த அனைவரது கால் செருப்புகளிலும் தார் ஒட்டியிருந்தது. * பல இடங்களில் புதிய சாலைகளை பெயர்த்தும் சாலைகளின் குறுக்கே சாலைகளை மறித்தும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. * பொதுக்குழு நடந்த பகுதியை சுற்றியிருந்த பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. * காலை முதல் மதியம் வரை பொதுக்குழு நடந்த இடத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. * முதல்வர் புறப்பட்டு சென்ற பின் பல இடங்களில் பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். * பொதுக்குழு நடந்த இடத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அழைத்து செல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், அரங்கிற்கு பின்புறம் நிறுத்தப்பட்டனர்.

சசிகலா 'ஆப்சென்ட்!': சென்னை:முதல்வரின் உயிர்தோழியான சசிகலா பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை.கடந்த 2013 டிசம்பரில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதற்கு முன் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியே அனுப்பப்பட்டிருந்ததால் அப்பொதுக்குழுவில் கட்சியினர் அவரை விமர்சித்தனர்.ஆனால் அடுத்த சில மாதங்களில் அவர் மீண்டும் போயஸ் கார்டன் திரும்பினார். நேற்று பொதுக்குழுவில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இக்கூட்டத்தில் சசிகலாவிற்கு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் கலந்து கொள்ளாதது அ.தி.மு.க. வினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: