வெள்ளி, 1 ஜனவரி, 2016

வினவு: சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!

அமேசான்
புலிகேசி 30% இனாமை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு குளிர்பானங்களான “அக்கமாலா”, “கப்சி”யை உள்ளூரில் அறிமுகப்படுத்தும் பொழுது “விளம்பரப்படுத்தினால் நம் ஊர் மக்கள் ஆட்டு மூத்திரத்தையும் சுத்த இளநீர் என்று ஒருகை பார்த்து விடுவார்கள்” என்று உற்சாகமாக கூறுவார்.
எருவாட்டி விற்க பன்னாட்டு நிறுவனம் “அமேசான்”
ஆனால் நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் விளம்பரப்படுத்தவெல்லாம் தேவையில்லை. மூத்திரம் என்ன? சாணியே கூட விற்கலாம் என்றளவிற்கு வந்துவிட்டது.
E-commerce எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் எருவாட்டி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம். இதுபற்றிய செய்தி 29-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வந்திருக்கிறது.
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.

மோடி இலண்டன் பயணத்திற்கும் துருக்கியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கும் செல்வதற்கு முன்பாகத்தான் 15க்கும் மேற்பட்ட துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்திருந்தார். அவற்றுள் பாதுகாப்பு, கட்டுமானம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பண்பலை வானொலி, தனியார்வங்கிகள் மற்றும் உற்பத்தி துறை ஆகியவை அடங்கும்.
உற்பத்தித் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மேக்-இன்-இந்தியா திட்டத்திற்கு முரணாக இருக்கிறதே என்று விகாஸ் தூத் போன்றவர்கள் ஆங்கில இந்து நாளிதழில் கட்டுரையெல்லாம் எழுதினார்கள்.
ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் சாணி விற்பனையில் அமேசான் இறங்கியிருப்பதைப் பார்க்கும் பொழுது புலிகேசியை விட மோடி எவ்வளவு சமயோசிதமாக சிந்தித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சாணியும் இங்கே கிடைக்கிறது. உமியும் இங்கே கிடைக்கிறது. இரண்டையும் பயன்படுத்தி எருவாட்டி தயாரிப்பில் அமேசான் ஈடுபடுவதன் மூலமாக அதுவும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவது மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் ஒரு கச்சிதமான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல. சரக்கு மற்றும் சேவை வரிக்கான மசோதா (GST Bill- Genral Service and Tax Bill) வரவிருக்கிறது. இது பொருள்களுக்கு விதிக்கப்படும் மறைமுகவரியை ஒழுங்குபடுத்துவதுடன் இதுவரை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டை தளர்த்தி நாடெங்கிலும் மையப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறையைக் கொண்டுவரப்போகிறது.
சில்லறை வணிகம்
இந்திய சில்லறை வணிகத்தை கைப்பற்ற பன்னாட்டு மூலதனம்
இதன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாடுகள் போடும் சாணி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலுமாக விலக்கப்பட போகிறது. அதாவது சாணியின் மீது இனி எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது.
மாநிலத்தின் சுயாட்சி என்பது சாணியளவுக்கும் கீழே போய்விட்டது. இதைத்தான் நாம் அரசுக்கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.
நிலைமை இப்படியிருக்க நம்மூர் அரசியல்வாதிகள் அடுத்த ஆட்சி, மக்கள் நல கூட்டியக்கம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொற்கால ஆட்சி, ஊழலற்ற ஆட்சி என்று சொல்பவர்களிடம் நாம் கேட்க வேண்டிய எளிய கேள்வி. உன்னால் தமிழ்நாட்டின் சாணியை ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து காப்பாற்ற துப்பிருக்கிறதா? என்பதுதான்.
ஏனெனில் எருவாட்டி, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்படப் போகிறது. இதனால் எருவாட்டியை வாங்குகிற ஆன்லைன் நுகர்வோர்கள் இணைய சேவை வரியை மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கு வழங்குவார்களே தவிர, சாணிக்கும் மாநிலத்திற்கும் நுகர்வோருக்கும் மத்தியில் அதனை விற்பனை செய்யும் அமேசானைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
இதை போகிற போக்கில் படிக்கிறவர்கள் எருவாட்டி கூடவா இந்தியர்களுக்கு உருவாக்கத் தெரியாது என்று கேட்கலாம். இந்தியர்களுக்கு ஆளத்தெரியாது என்று சொல்லித்தான் வெள்ளைக்காரன் ஆட்சி புரிய சொல்லிக்கொடுத்தானாம். உங்களுக்கு சாணி தட்டவும் தெரியாது என்று அமேசான் சொல்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
என்னதான் இருந்தாலும் சாணி-ஆன்லைன்வர்த்தகம்-அமேசான் ஒன்றும் புரியவில்லையே மன்னா? என்கிறீர்களா? கொஞ்சம் உள்ளே என்னதான் இருக்கிறதென்று பார்ப்போம்.
செய்தி ஒளிபரப்புத் துறை
ஒளிபரப்புத் துறையையும் விட்டு வைக்கப் போவதில்லை.
ஆன்லைன் வர்த்தகம் என்பது தொழில் நுட்பத்தால் விளைந்த மகசூல் அல்ல. மாறாக மடிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவம் மூச்சுவிடுவதற்கு கண்டுபிடித்த உத்தி. தரகு முதலாளித்துவத்தின் அழுகி நாறும் வடிவம் தான் ஆன்லைன் வர்த்தகம். இங்கு உற்பத்தியாளன் என்று யாரும் கிடையாது. நுகர்வோரையும் விற்பவரையும் இணையத்தில் இணைத்துவிட்டு, கமிசன் தொகை மூலமாக மட்டுமே கொள்ளையிடும் முறைதான் ஆன்லைன் வர்த்தகம்.
இதை இரு எடுத்துக்காட்டுகள் மூலமாக பார்ப்போம். நம்மூர் விவசாயி நிலத்திலே கத்தரிக்காய் போட்டு சந்தைக்கு கொண்டு வந்து கத்தரிக்காய் விற்பதன் மூலம் என்ன செய்கிறார்? அதற்குண்டான பணத்தை பெற்றுக்கொண்டு தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்குகிறார். ஆக இங்கு இருக்கும் தொடர்பு பண்டம்-பணம்-பண்டம் என்பதாகும். பணத்தின் பயன்மதிப்பு பண்டமாக இருக்கிறது.
ஆனால் அமேசான் என்ன செய்கிறது? இந்தியாவில் பணத்தைக்கொண்டு வந்து முதலீடு செய்கிறது. முதலீடு என்றால் எத்தகைய முதலீடு? இந்தியாவில் உள்ள சிறுவணிகர்களுக்கு கந்துவட்டிக்கு கடன் கொடுக்கிறது. 2011 வரை இப்படி அமேசான் 6.4 கோடி டாலர்களை மூன்றிலிருந்து ஆறுமாதக் கடனாக 1,000 டாலர் முதல் 6 லட்சம் டாலர் வரை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 30,000 சிறுவணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் அமேசான் பிடிக்குள் வந்துவிட்டிருக்கின்றன.
“ஸ்னாப்-டீல்” என்ற மற்றொரு ஆன்லைன் சந்தை நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 1.5 லட்சம் வியாபாரிகள் சிக்கியிருக்கிறார்கள். சுதந்திர பொருளாதாரம் என்று மேதைகள் விடுகிற கதை முதலாளித்துவ ஏகபோகமின்றி வேறில்லை என்பதற்கு பதினோரு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐனூற்றி அறுபத்து ஆறுவது சான்று இது. சரி இருக்கட்டும்.
அதாவது அமேசான் வியாபாரத்தை பண்டத்திலிருந்து அல்ல பணத்திலிருந்து தொடங்குகிறது. இத்தகைய உறவு பணம்-பண்டம்-பணம் என்பதாக இருக்கிறது. அதாவது பணத்தை வைத்துக்கொண்டு பணம் பார்ப்பதற்காக பண்டத்தை (சாணியை) வாங்கி பணம் உருவாக்கும் உறவு முறை. முதலாளித்துவம் இப்படித்தான் தன்னளவில் ஆரம்பித்தது. இப்பொழுது கதை அதுவும் அல்ல.
உலகப்பொருளாதாரமே ஒட்டுமொத்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் மேலும் மேலும் உலகமயமாக்கப்படுகிறது. எஞ்சியிருக்கிற இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதரங்களையும் கசக்கி பிழிந்து காசு பார்த்துவிட்டு ஓடிவிட துடிக்கும் வெட்டுக்கிளி மூலதனம் தான் இன்றைய உலகம்.
சனிப்பிணம் தனியே போகாது என்பதற்கேற்ப அனைத்து மக்களையும் கோழிகளாய் தனது பாடையில் சேர்த்துக் கட்டிக்கொண்டு போக எத்தனிக்கும் முதலாளித்துவம் இது.
மேக் இன் இந்தியா
“மேக் இன் இந்தியா” – சாணி விற்க வெளிநாட்டு கம்பெனி
ஏற்கனவே அமேசான் உலக வல்லாதிக்கமான அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட 2 லட்சம் பேரின் வேலையைப் பறித்திருக்கிறது. வால்மார்ட்டிற்கு எதிராக அமெரிக்க மக்களே கருப்பு வெள்ளியை அனுசரித்திருக்கிறார்கள். சீனாவின் சந்தை சீட்டுக்கட்டாய் சரிந்த பொழுது அலிபாபா வெறும் 500 கோடி டாலர்களுக்கு ஸ்னாப்-டீலின் பங்குகளை இந்தியாவில் வாங்க பேரம் பேசியது.
நிற்க இடமில்லாமல் தவிக்கிற ஏகபோக முதலாளித்துவம் இந்தியாவில் ஏகாதிபத்தியமாய், கோதுமை நாகங்களாக சுற்றி வளைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் சில்லறை விற்பனை துறை தற்பொழுது 56,000 கோடி டாலரிலிருந்து 2016-ல் 1.3 லட்சம் கோடி டாலராக இருக்கும் என்று கணக்கு போடப்படுகிறது. சிறு வியாபாரிகளை துரத்தி விட்டு இந்த சந்தையை கைப்பற்ற அமேசான் முதலான ‘சாணி விற்கும்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.
மாறாக இந்த ஆன்லைன் வர்த்தகம் தோற்றுவித்திருக்கும் புற சூழ்நிலையில், மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் எந்தவொரு விதமான சாதக சூழ்நிலையும் இல்லை.
மேலிருந்து கீழாக பார்க்கிற பொழுது, எப்பொழுதெல்லாம் பொருளாதார தேக்கம் ஏற்படுகிறதோ அப்பொழுதிருந்தே முதலாளிகள் மூலதனத்தை பாதுகாக்க பல்வேறு திருட்டுத்தனங்களை புரிகின்றனர். 2008 பொருளாதார பெருங்குமிழி வெடித்த பொழுது, முதலாளிகள் ஒன்று தங்களது நிறுவனங்களின் பங்குகளை தாங்களே வாங்கி குவித்தனர்; அல்லது தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பெனிகளை சூறையாடினர். இதனால் ஏகபோகம் மேலும் இறுகிப்போனது. இதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் தோற்றுவாய்க்கும் வீழ்ச்சிக்கும் கட்டியம் கூறுவதாக இருக்கிறதென்று சொல்கிறார்கள் பொருளாதாரவாதிகள்.
27-12-2015 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த கட்டுரை ஆன்லைன் வர்த்தகத்தின் குமிழி பெருவெடிப்பை எடுத்துக்காட்டும் சமிக்ஞைகளை தெளிவாக காட்டியிருப்பதை தேர்ந்த வாசகர் இனம் கண்டுகொள்ள முடியும்.
Merger and Acquisition (இணைத்தலும், கையகப்படுத்தலும்) என்ற பெயரில் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய கும்பலும் நடத்தும் ஊழிக்கூத்துகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதன்படி
வால்மார்ட்
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் படையெடுப்பு
  • பியூச்சர் குழுமமும், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
  • Gap and Aeropostale போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்கின்றன. Gap and Aeropostale அரவிந்த் பிராண்டுகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
  • அமேசான் சாணி விற்பதோடு செங்கல் வியாபாரத்திலும் இறங்கியிருக்கிறது.
  • ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஆதித்யா பிர்லா நுவாவும் மதுரா கார்மென்ட்சும் இனைக்கப்பட்டு பாண்டலூன் பேசன் கம்பெனியாக மாற்றப்பட்டிருக்கிறது.
  • கூடவே ஆதித்யா பிர்லா குழுமம் ஜூபிலியண்ட் தொழிற்குழுமத்தை வாங்கியிருக்கிறது.
  • ஸ்வீடன் நாட்டு பன்னாட்டு நிறுவனமான Hennes and Mauritz (ஹென்னஸ் மவுரிட்ஸ்) இந்தியாவெங்கும் 50 கிளைகளை திறக்கப்போகின்றது.
  • ஏற்கனவே ஸ்வீடன் நாட்டின் ஐக்கியா (IKEA) ஹைதராபாத்தில் மிகப்பெரும் சேகரிக்கும் கிடங்கிற்கான நிலத்தை வாங்கியிருக்கிறது. சில்லறை வணிகத்தில் ஈடுபட உ.பி மாநிலத்தோடு புரிந்து உணர்வு ஒப்பந்தங்களும் போட்டிருக்கிறது.
  • “பிளிப்-கார்ட்” மற்றும் “ஸ்னாப்-டீலு”க்கு போட்டியாக அம்பானி மற்றும் பிர்லா குழுமம் சூப்பர் மார்கெட்டிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு வந்திருக்கின்றனர்.
மேற்கண்ட அனைத்துவிதமான எடுத்துக்காட்டுகள் பல்வேறு கம்பெனிகளை இணைத்தல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மறுகாலனியாதிக்கத்தின் சுருக்குக் கண்ணி மிகத் தீவிரமடைவதை எடுத்துக்காட்டுகின்றன. நாட்டின் சிறுவணிகம் துரிதமாக அழிக்கப்பட்டு ஏகபோகமாக எவ்வாறு சாணியைக் கூட விட்டுவைப்பதில்லை என்பதற்கு தெளிவான சான்றுகளாக இருக்கின்றன.
இதையே கீழிருந்து மேல் நோக்கி பார்க்கும் பொழுது ஆன் லைன் வர்த்தகம் தொழிலாளிகளின் நிலைமைகளை மோசமாக்கி இருண்டகாலத்திற்கு கொண்டு போகிறது. சான்றாக, ஆன்லைன் வர்த்தகம் வெற்றி பெறவேண்டுமானால் மிகக் கேவலமான முறையில் தொழிலாளிகள் சுரண்டப்பட்டால் அன்றி சாத்தியமில்லை.
ஏற்கனவே “பிளிக்-கார்ட்டி”ன் டெலிவரி செய்யும் 400 லாரி ஓட்டுனர்கள் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த ஓட்டுனர்களின் சம்பளம் 21,000 ரூபாய் மட்டுமே. லாரிக்குத் தேவையான எரிபொருள் 6,000 இதிலிருந்தே செலவிட வேண்டும்.
அமேசான் கம்பெனி பொருட்களை டெலிவரி செய்யும் 4800 மோட்டார் சைக்கிள் தொழிலாளிகளும் பல்வேறுவிதமாக கசக்கிப்பிழியப்படுகின்றனர்.
பன்னாட்டு கம்பெனிகளின் கிடங்குகள் என்பது மாட்டுக்கொட்டகையை விட மிகவும் கேவலமாக இருப்பதாக சொல்கிறார்கள். இங்கிருந்துதான் செல்போன் ஆர்டர் செய்தாலும் டிவி ஆர்டர் செய்தாலும் பொருட்களை ஏற்றி இறக்கி டெலிவரி செய்யும் வேலையாட்கள் மிக மோசமாக சுரண்டப்படுகிறார்கள். இவர்களின் வேலை அமைப்பு என்பது 8,500 ரூபாய் சம்பளம், ஐந்து நாள் வேலை, பத்து-12 மணி நேர வேலை என்பதாகவும், கிடங்கில் பொருட்களை வகை பிரிப்பதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 150-லிருந்து 200ஆகவும் இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
மேலும் அமேசான் போன்ற பன்னாட்டு கம்பெனிகளோடு இந்திய தரகுமுதலாளிவர்க்கமும் பார்ப்பனிய சாதியும் எவ்வாறு இறுக்கமாக பிணைந்திருக்கின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும்.
சான்றாக, டெல்லியில் உள்ள அமேசான் பொருட்கள் வைக்கும் கிடங்கில் (Warehouse) 1600 தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். இதில் 300 லிருந்து 400 பேர் அமேசான் செல்லர் சர்வீசஸ் எனும் ஒப்பந்த நிறுவனம் மூலம் அமர்த்தப்படுகிறார்கள். மீதியுள்ள தொழிலாளிகள் இந்திய தரகு ஒப்பந்த நிறுவனமான ஓம் எண்டர்பிரைசஸ் மூலமாகவும் சிப்பி மூலமாகவும் பணியமர்த்தப்படுகின்றனர். இதில் ஓம் எண்டர்பிரைசஸ் நடுத்தரவர்க்கம் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் “மைன்த்ரா” (Myntra) எனும் பன்னாட்டு கம்பெனிக்கும் “பிளிக்-கார்ட்” கம்பெனிக்கும் ஆள்பிடிக்கும் வேலையை சேர்த்தே செய்து தருகிறது. இதில் அமேசான் கம்பெனிக்கு தேவையான துப்புரவுத் தொழிலாளிகள் 70 பேர் ஸ்பைப்பி நிறுவனம் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஏகாதிபத்தியம் இங்குள்ள பார்ப்பனிய சாதியமைப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஒட்டச் சுரண்டுகிறது. இதுவன்றி 1.3 லட்சம் கோடி டாலர் ஆன்லைன் வர்த்தகம் சாத்தியமில்லை.
இது தான் மேக் இன் இந்தியா. ஏகபோகத்தை இறுதியாக உறுதி செய்வதுதான் இதன் நிகழ்ச்சி நிரல். தோற்று வீழ்ந்து போன்ற இந்த அரசுக் கட்டமைப்பு வேறு எப்படியும் இருக்க இயலாது என்பதற்கு இது வகைமாதிரி. இனி நாம் செய்ய வேண்டியது, இதை அகற்றிவிட்டு மக்கள் அதிகாரத்தை எப்படி நிறுவப்போகிறோம் என்பதே.
– இளங்கோ

கருத்துகள் இல்லை: