ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

தினமலர்: தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம்..........

அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை இணைத்து, தி.மு.க., தலைமை யில் கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கிறது.
'கூட்டணிக் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு அளிக்கும் முறையை அமல்படுத்தினால் தான் கூட்டணி' என்ற, சிறு கட்சிகளின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்டாலும், அ.தி.மு.க., - தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் வேண்டுமானால், இக்கூட்டணியை அமைக்கலாம் என்பது, மார்க்சிஸ்ட் கருத்தாக உள்ளது இதற்கிடையே, தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய
தமிழகம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்டு, கூட்டணி அமைந்து விட்டதாகவும், அவை, போட்டி யிடும் தொகுதிகளை உத்தேசமாக முடிவு செய்துவிட்டதாகவும் கடந்த சில தினங்களாக தகவல்கள் உலா வருகின்றன இந்த உத்தேச தகவலில் தி.மு.க., - 140, தே.மு.தி.க., - 45, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க., - 15, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காதர் மொய்தீன்) ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்களில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும், கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடதுசாரிகளை முற்றிலும் கழற்றிவிடப்பட்டே, இந்த கூட்டணி அமையும் எனவும், அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

இதுகுறித்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:அ.தி.மு.க., அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதற்காக, தி.மு.க.,வோடு கூட்டணி அமைக்க முடியாது; தி.மு.க.,வும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த கட்சியே. அ.தி.மு.க., - தி.மு.க., அல்லாத கூட்டணியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். அதில், காங்கிரசும், பா.ஜ.,வும் இடம்பெறக் கூடாது; இதில், மாற்றுக் கருத்தில்லை. இதைச் சொல்வதால், தி.மு.க.,வுக்கு எங்கள் மீது கோபம் இருக்கலாம். அரசியல் ரீதியாக பிரச்னையை அணுகு கிறோம். இதில், பிற கட்சிகளின் வருத்தங்களை பொருட்படுத்த வேண்டியஅவசியமில்லை. தே.மு.தி.க., - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி மற்றும் பிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க முயற்சிக்கிறோம். இதில், குழப்பம் விளைவிக்கவே, சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், மார்க்சிஸ்ட் நிலையை, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., போன்ற கட்சிகள் எதிர்க்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து, படுதோல்வி அடைந்த தேர்தல்களை, ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் நினைவு கூருகின்றனர். 'பா.ஜ., காங்கிரஸ் தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எங்களுக்கு விருப்பமே' என, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் சொல்கின்றனர்.

மார்க்சிஸ்ட் நிலை குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர்கூறிய தாவது:தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைவதை, மார்க்சிஸ்ட் மாநிலத் தலைமை தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது. இப்போக்கு, ஆளும் கட்சிக்கு சாதகமான அதன் நிலையையே காட்டுகிறது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, மார்க்சிஸ்ட் நிலை மாறும் என எண்ணுகிறோம். இல்லை யேல், அக்கட்சியைத் தவிர்த்துவிட்டு, பிற எதிர்க்கட்சிகளை இணைத்து, தி.மு.க., கூட்டணி அமைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர்தினமலர்.com 

கருத்துகள் இல்லை: