பாடப் புத்தகங்களின் முகவுரையில், கலைஞர் மற்றும் தங்கம் தென்னரசின்
பெயர்கள் வலிந்து திணிக்கப்படுவதை ஆதரிக்கவில்லை என்றாலும், அரசியல்
வெறுப்புக்காக அந்தப் புத்தகங்களை மீண்டும் அச்சடிப்பது என்பது வீண் செலவு
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், பாடநூல் முகவுரையில் அரசியல் ரீதியாக பிடிக்காதவர்களின்
பெயர்கள் இருப்பதற்காக அந்த பாடநூல்களை மாணவர்கள் படிக்கக்கூடாது என தடை
விதித்து கல்வியை பிணைக்கைதியாக்கும் அதிமுக அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள
முடியாததாகும்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மாநிலப்
பாடத்திட்டத்தின்படியான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு மற்றும்
பொருளியல் பாடநூல்களை புதிதாக அச்சிட தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.
பாடநூல்களில் திருத்தங்கள் செய்வதற்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால்
தமிழக அரசை பாராட்டியிருக்கலாம்.
ஆனால், பாடநூல்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் முன்னள்
கல்வியமைச்சர் தங்கம் தென்னரசின் பெயர்கள் இருந்ததால் அவற்றை நீக்குவதற்காக
பாடநூல்களை புதிதாக அச்சிடுவது கண்டிக்கத்தக்கது.
பாடநூல்களில் அரசியல் புகுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி
தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில்
பாடநூல்களின் முகவுரையில் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் பெயர்கள்
வலிந்து திணிக்கப்படுவதை பா.ம.க ஆதரிக்கவில்லை.
அதேநேரத்தில், பாடநூல் முகவுரையில் அரசியல் ரீதியாக பிடிக்காதவர்களின்
பெயர்கள் இருப்பதற்காக அந்த பாடநூல்களை மாணவர்கள் படிக்கக்கூடாது என தடை
விதித்து கல்வியை பிணைக்கைதியாக்கும் அதிமுக அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள
முடியாததாகும்.
கடந்த 2007-08 ஆம் ஆண்டில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள்
திருத்தியமைக்கப்பட்டன. அவை எவ்வாறு திருத்தியமைக்கப்பட்டன என்பதை
விளக்கும் வகையில் பாடநூல் மேம்பாட்டுக்குழுத் தலைவர் மு.நாகநாதன் எழுதிய
முகநூலில், "பாடநூல்களை மேம்படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த
முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் எங்கள் நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 11, 12 ஆம்
வகுப்புகளுக்காக வரலாறு மற்றும் பொருளியல் புத்தகங்களில் இப்பகுதி
இடம்பெற்றுள்ளது.
2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2012 ஆம் ஆண்டிலும், பின்னர்
நடப்பாண்டிலும் இந்த பாடநூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அ.தி.மு.க. அரசு
நினைத்திருந்தால் அப்போதே இந்தப் பகுதியை நீக்கியிருக்கலாம். ஆனால், அதைச்
செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு இருந்த அரசு, இப்போது
புத்தகங்கள் அச்சிடப்பட்ட பிறகு அவற்றை யாரோ கண்டுபிடித்துக் கூறியதை
அடுத்து அச்சிடப்பட்ட புத்தகங்களையெல்லாம் குப்பையில் வீசிவிட்டு புதிதாக
அச்சிடுவது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பதைத் தவிர வேறு என்னவாக
இருக்க முடியும்?
பாடநூல்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெயர்கள் இருப்பதை கொள்கை
அடிப்படையில் பா.ம.க. எதிர்க்கும் போதிலும், அந்த ஒரே காரணத்திற்காக
அச்சிடப்பட்ட புத்தகங்கள் குப்பையில் வீசப்படுவதை ஆதரிக்கவில்லை.
பாடப்புத்தகங்களிலிருந்து கலைஞரின் பெயரை நீக்குவதற்காக ரூ.3 கோடியில்
புதிதாக பாடநூல்களை அச்சிடுவது அரசியல் நாகரீகம் கொண்ட நடவடிக்கையும்
இல்லை; ரூ. 4 லட்சம் கோடி கடன் வைத்துள்ள தமிழகத்துக்கு பொருளாதார ரீதியாக
உகந்த நடவடிக்கையும் கிடையாது.
கலைஞர் பெயர் கொண்ட முகவுரை அடுத்த பதிப்பு வரை நீடிப்பதால் தமிழகத்தை கடல்
கொண்டு போய்விடாது. இதற்குமுன் சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட
போது கலைஞர் தொடர்பான சில பகுதிகளும், வள்ளுவர் சிலையும் ஜெயலலிதாவுக்கு
மிகவும் பிடித்த பச்சை நிற காகிதத்தைக் கொண்டு மறைக்கப்பட்டன.
அதேபோல் இப்போதும் செய்திருக்கலாம் இல்லாவிட்டால் முகவுரை எழுதப்பட்ட
பக்கத்தை கிழித்து அகற்றியிருக்கலாம். அதைவிடுத்து மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட புத்தகங்களை திரும்பப் பிடுங்குவதும், புதிய புத்தகங்கள் வரும்
வரை மாணவர்கள் பாடம் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துவதும் மாணவர் நலனில்
அக்கறை கொண்ட அரசு செய்யும் செயலல்ல.
மற்றொரு புறம், தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிவடைந்து
வகுப்புகள் தொடங்கி 2 வாரங்கள் ஆகியும் மாணவர்களுக்கு இன்னும் பாடநூல்கள்
வழங்கப்படவில்லை. இதனால், பள்ளிகளில் பாடம் நடத்தப்படாததால், மாணவர்கள்
பெயரளவில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதனால் கவலையடைந்த பெற்றோர் சென்னை பள்ளிக்கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு
பாடநூல் கழகத்தின் விற்பனை நிலையத்திற்கு வந்து புத்தகங்களை வாங்கிச்
செல்கின்றனர். இந்த விற்பனை நிலையத்தில் ஒரு கவுண்டர் மட்டுமே
திறக்கப்பட்டிருப்பதால் காலை முதல் மாலை வரை கால் கடுக்க காத்திருந்து தான்
புத்தகங்களை வாங்க வேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் வரிசையில் காத்திருந்தும் விற்பனை நேரம் முடிந்து விட்டதைக்
காரணம் காட்டி புத்தகங்கள் மறுக்கப்படுவதால் நாகர்கோவில், மதுரை, கோவை
உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த ஏழைப் பெற்றோர் இரவு தங்கி புத்தகங்களை
வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. சில்லறை விற்பனைக் கடைகளில் அரசு பாடநூல்களை
விற்பனைக்கு வைத்தால் மேல்நிலை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்
தேவையில்லாத அலைச்சல் குறையும்.
பாடநூல் வினியோகம் தாமதமாவதற்கு கலைஞர் பெயர் கொண்ட புத்தகங்கள் மீண்டும்
அச்சிடப்படுவது தான் முதன்மை காரணம் ஆகும். மாணவர்களின் எதிர்காலத்துடன்
விளையாடுவதை நிறுத்தி விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக
புத்தகங்கள் கிடைக்க வகை செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்./tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக