வாஷிங்டன்: முன்னாள் பிரதமர் இந்திரா
காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்தார் என்ற தகவலை வாஷிங்டன்
போஸ்ட் பத்திரிகை நிருபரும், புலிட்சர் விருது பெற்றவருமான லீவிஸ் எம்.
சிமோன்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம்
ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட்
பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் லீவிஸ் எம்.சிமோன்ஸ்.
அப்போது அவரது பத்திரிகையில் வெளியான
ஒரு தகவல் உலகை உலுக்கியது. அதாவது, இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி,
அவரை ஆறுமுறை கன்னத்தில் அறைந்தார் என்பதுதான் அந்த செய்தி.
இதுகுறித்து இந்திய செய்தி ஊடகம் ஒன்று இ-மெயில் மூலம் தற்போது சில தகவல்களை அந்த நிருபரிடமிருந்து பெற்றுள்ளது.
விருந்தில் அடி
அதில், லீவிஸ் எம்.சிமோன்ஸ் கூறியதாவது: எமெர்ஜென்சி
பிரகடனப்படுத்தும் முன்பு, ஒருநாள் இரவு விருந்தின்போது, இந்திராகாந்தியை,
சஞ்சய்காந்தி, கன்னத்தில் ஆறுமுறை அறைந்துள்ளார்.
அந்த விருந்தில் கலந்து கொண்ட 2 பேர் மூலம் எனக்கு இந்த தகவல்
கிடைத்தது. அந்த இருவருமே ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றாலும், என்னிடம்
இந்த தகவலை ஒருவர் சொன்னது மற்றொருவருக்கு தெரியாது.
நாடு கடத்தப்பட்டேன்
இருப்பினும் அந்த தகவலை உடனடியாக நான் பத்திரிகையில் எழுதவில்லை.
எமெர்ஜென்சி காலம் முடிந்த பிறகு நான் இந்தியாவை விட்டே
வெளியேற்றப்பட்டேன். ஹாங்காங்கில் இருந்துதான் நான் அந்த செய்தியை
எழுதினேன். எனவே, நான் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட சஞ்சய்காந்தி
விவகாரம் காரணம் இல்லை.
ராணுவம் பற்றி செய்தி
இந்திராகாந்தி, எமெர்ஜென்சியை பிறப்பித்தது ராணுவத்தினர் பலருக்கும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று நான் எழுதிய செய்திக்காகவே, நான் நாடு
கடத்தப்பட்டேன். 5 மணி நேர நோட்டீஸ்தான் கொடுக்கப்பட்டது. அதற்குள்
அதிகாரிகள் வந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்து சென்றுவிட்டுவிட்டனர்.
அதிகாரிகள் சிக்கினர்
அதேநேரம், எனது டைரியில் இருந்த இந்திய அதிகாரிகள் ‘வட்டாரங்கள்’
பெயரை வைத்து, அந்த அதிகாரிகளை சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பிறகுதான்,
அதிகாரிகள் பெயர்களை எழுதி வைக்க கூடாது என்ற படிப்பினை எனக்கு கிடைத்தது.
இவ்வாறு அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். எமெர்ஜென்சி
பிறப்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்த
பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக