டெல்லி : ஆட்டுக்கறி வறுவல் - ரூ.20, கோழிக்கறி ரோஸ்ட்-ரூ.29, அவிச்ச
முட்டை, மசாலா தோசை - ரூ.6.. இதெல்லாம் எந்த ஹோட்டலில் கிடைக்கிறது என்று
கேட்கும் அப்பாவி ஏழை மக்களுக்கு, நாடாளுமன்றத்தில் பல கோடி ரூபாய் மானியத்
தொகையுடன் இயங்கும் கேன்டீனில் தான் இவ்வளவு "சீப்" என்பது தான் பதில்.
இவ்வளவு விலை குறைவா?
எந்த நாடுகளுக்குப் போய் பார்த்தாலும், இவ்வளவு விலை குறைவான உணவுப்
பொருட்கள் வேறு எங்காவது கிடைக்கிறதா என்று கேட்டால் ம்ஹூம்ம்ம்..
என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
மானியத்தை குறைக்க பாடுபடும் எம்.பி.க்கள்
எரிவாயு மானியம், ரேஷன் பொருள் மானியம், மின்சார மானியங்களைக் குறைக்க
சட்டம் இயற்ற பாடுபடும் எம்.பி.க்களுக்காக இயக்கப்படும் இந்த கேன்டீனுக்கு
மட்டும் 2013-2014ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மானியம் எவ்வளவு தெரியுமா? .14
கோடி ரூபாய்..
ஆச்சர்யப்படுத்தும் "அம்மா" உணவகங்கள்
தமிழகத்தில் அம்மா உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கப்படுவதையே
மற்ற மாநிலங்கள் ஆச்சர்யமாக பார்க்கும் இன்றைய விலைவாசி நிலவரத்தில்
மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் எம்.பி.க்கள் அங்குள்ள
கேண்டீனில் 60 முதல் 150% மானிய விலையில் உணவுப் பொருட்களை உண்டு கொழுத்து
வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலப்பொருட்களை விட உணவு விலை குறைவு
சூப் உட்பட ஒரு சைவ சாப்பாட்டுக்கான காய்கறி உள்ளிட்ட பொருட்களின்
கொள்முதல் செலவினங்கள் ரூ.41.25 ஆக இருக்கும்பட்சத்தில் 90% மானியத்துடன்
வெறும் 4 ரூபாய்க்கு நம் எம்.பி.க்களுக்கு சைவ உணவு பரிமாறப்படுகின்றது.
இதேபோல், ஒரு அசைவ சாப்பாட்டுக்கு தேவையான மூலப்பொருட்களின் கொள்முதல்
செலவினங்கள் ரூ.99.05 ஆக இருக்கும்பட்சத்தில் 66% மானியத்துடன் வெறும் 33
ரூபாய்க்கு இவர்களுக்கு அசைவ உணவும் பரிமாறப்படுகின்றது.
மீன் வறுவல் வெறும் ரூ.25 தான்!
மீன் வறுவல் 63% மானியத்துடன் 25 ரூபாய்க்கும், மட்டன் கட்லெட் 65%
மானியத்துடன் 18 ரூபாய்க்கும், எண்ணையில் பொறித்த காய்கறிகள் 83%
மானியத்துடன் 5 ரூபாய்க்கும், எலும்புகளுடன் கூடிய மட்டன் குருமா 67%
மானியத்துடன் 20 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன.
76 உணவுகள் மானிய விலையில்..
இப்படி, சாதாரண அவித்த முட்டையில் இருந்து, நாவில் நீர் ஊற வைக்கும்
சிக்கன் உணவு வகைகள் வரை சுமார் 76 வகை உணவுகள், 63 முதல் 150% வரையிலான
மானிய விலையில் நமது எம்.பி.க்களுக்கு விற்கப்படுகின்றன.
"ஏழை" எம்.பி.க்களுக்காக மத்திய அரசு மானியம்
பயணப்படி, வீட்டு வாடகைப்படி உள்பட பல்வேறு அலவன்சுகளுடன் மாதம் தோறும்
சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியம் வாங்கும் இந்த 'வறுமைக் கோட்டுக்கு கீழே
வாழும் பரம ஏழை' எம்.பி.க்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் இந்த கேண்டீன்களில்
மானிய விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய
அரசு 60 கோடியே 70 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியுள்ளது, தற்போது தெரிய
வந்துள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்பு 2 முறை தான் விலையேற்றம்
மாதம் தோறும், கையை கடிக்காமல் பொது மக்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்யும்
போதே, அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் இரு மடங்கு, நான்கு மடங்கு என
உயர்ந்து வரும் நிலையில், நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு டெல்லியில் இயங்கும்
நான்கு கேன்டீன்களில், நாம் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இரண்டே இரண்டு
முறை மட்டுமே பெயரளவிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பதுதான் ஏழைகளின்
வயிற்றெரிச்சலிலும் கேட்கக் கூடாத செய்தி.
இவை அனைத்தும் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்
மனு செய்து பெற்ற பதிலின் மூலம் தெரியவந்துள்ளது.
அட விடுங்க.. எம்.பி. ஆவதற்கெல்லாம் மச்சம் வேணுமுங்க...
Read more tamil.oneindia.com/
Read more tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக