எங்க
பார்த்தாலும் ஒரே கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு, இவன் பொண்டாட்டிய
அவன் கூட்டிட்டுப் போய்ட்டான், அவன் பொண்டாட்டிய எவனோ கூட்டிட்டுப்
போய்ட்டான், என்ன சார் உலகம் இது, கம்முனு சாமியாராப் போயிரலாம் போல
இருக்குது சார் என்று நம்மிடம் புலம்பும் மனிதர்களை நீங்கள் தினம்
சந்திக்கலாம், அது போன்ற மனிதர்களுக்கு பாஜகவின் ஆல் இன் ஆல் அழகுராஜா
மருந்துக்கடையில் இருந்து புதிதாக பரிந்துரைக்கப்படும் மருந்து யோகா, இது
ஒரு சர்வலோக நிவாரணி. இது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மட்டும்
அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் நிலத்தை இழந்தவன், பங்குச் சந்தையில்
கண்ட நாய்களின் பேச்சைக் கேட்டு பணத்தை போட்டு போண்டியானவன், தொழிலை நடத்த
முடியாமல் தொழிற்சாலையை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்றுவிட்டு
ஆண்டியானவன், லட்சக்கணக்கில் பணம்கொட்டி படித்தும் வேலையில்லாமல் லோ லோ
என்று நாடு முழுவதும் சுற்றும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளைஞிகள்
இன்னும் இத்தியாதி இத்தியாதி பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது
மிகச் சிறந்த மருந்து.
இந்த யோகவை
நீங்கள் தொடர்ச்சியாகச் செய்யும் போது வித்தியாசத்தை நன்றாக உணர்வீர்கள்.
உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை போன்ற கெட்ட குணங்கள் இருந்தால்
இப்போது அது எல்லாம் புல் மேல் விழுந்த பனியாக யோக ஒளியில் விலகும்.
உதாரணத்துக்கு உங்கள் முகத்தில் யாராவது காரித் துப்பிவிட்டார்கள் என்று
வைத்துக் கொள்வோம். நீங்கள் மட்டும் பழைய பன்னீர்செல்வமாக இருந்தால் பளார்
என்று கன்னத்தில் வைத்திருப்பீர்கள், ஆனால் இப்போது நீங்கள் என்ன
செய்வீர்கள் தெரியுமா? “சார் காரித் துப்பிவிட்டோம் என்று நீங்கள் எதுவும்
வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லிவிட்டு முகத்தை துடைத்து, பின்னால்
தேய்த்துவிட்டு பாட்ஷா படத்தில் ஆனந்தராஜிடம் அடி வாங்கும் ரஜினியைப்போல்
சிரித்துக்கொண்டே செல்வீர்கள். இதைத்தான் மோடி உங்களிடம் இருந்து
எதிர்பார்க்கின்றார். மேலும் மிஸ்டுகாலுக்கு தப்பிய மிஸ்டுகால்கள் எல்லாம்
கண்டிப்பாக இந்த யோகாவலையில் நிச்சயம் விழுந்துவிடுவார்கள்.
நம்மில்
பல பேருக்கு யோகா என்பது ஏதோ உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக
பண்டைய கால ரிஷிகள் மற்றும் முனிவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து
என்றும், அது இந்து மதத்தின் ஒரு அங்கம் என்றும் புரிந்து
கொண்டிருக்கின்றோம். அதனால் அதைப்பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
இந்தியாவில்
தோன்றிய முக்கிய தத்துவங்களில் மீமாம்சம், சாங்கியம், சாருவாகம்,
உலகாயதம், சமணம், புத்தம், நியாய வைசேடிகம் ஆகியவற்றைப் போலவே யோகமும்
ஒன்று. மற்ற தத்துவங்கள் எல்லாம் தனிப்பட்ட நபர்களால் நிறுவப்பட்டவை. ஆனால்
யோகம் என்பது பதஞ்சலி முனிவரால் தொகுக்கப்பட்ட நூலே ஆகும். ஏனெனில் யோகம்
என்பது பதஞ்சலி காலத்திற்கு முன்பே இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
இந்த யோகம் என்பது அடிப்படையில் பொருள்முதல்வாத(நாத்திக) தன்மை
கொண்டதாகும். பழங்கால காட்டுமிராண்டி மனிதர்கள் வேட்டைக்குப் போகும்போது
செய்யும் மந்திரவித்தைகளே (அதாவது அந்த விலங்குகளைப் போலவே செய்து
பார்த்தல்) இந்த யோகம் ஆகும். இதிலே குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால்
எந்த இடத்திலும் இதற்கு கடவுள் தேவைப்படவில்லை என்பதே. ஆனால்
பிற்காலத்தில் தோன்றிய பதஞ்சலி என்ற ‘நல்ல மனிதர்’ யோகவை சாங்கிய
தத்துவத்துடன் இணைத்தார். அதுமட்டும் அல்லாமல் படைப்பவன் அதாவது கடவுளையும்
உள்ளே திணித்து, அதனுடன் பல சித்துவேலைகளையும் சேர்த்து அதை ஆன்மீகம்
சார்ந்ததாக மாற்றியமைத்தார். ஆனால் நம்முடைய நீதிபதி குமராசாமியைப் போலவே
கேவலமான கூட்டல் கணக்கை போட்டு விட்டார் பதஞ்சலி. அப்பட்டமான நாத்திக
தத்துவமான சாங்கியத்தில் யோகத்தை இணைத்ததன் மூலம் அந்தத் தவறை செய்தார்
பதஞ்சலி. இன்று வரையில் தண்ணீரும் எண்ணெயும் போல அது ஒட்டாமலேயே
காணப்படுகின்றது.
காலப்போக்கில்
சமணம், பெளத்தம் போன்ற நாத்திக தத்துவங்களும் யோகத்தை எடுத்துக்கொண்டன.
ஆழ்ந்த தியானத்தின் மூலம் மனிதன் பேரானந்த நிலையை (பரவச நிலை) அடைந்து
இயற்கைக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வின் மூலம் இறுதி உண்மையை அடைய முடியும்
என்ற கருத்து பரப்பப்பட்டது. மிகவும் புகழ்பெற்ற இதிகாச கவிஞரான வியாசர்
குருஷேத்திரம் போர் நடைபெறுவதற்கு முன்பே மகாபாரதத்தினை எழுதிவிட்டார்
என்று கூறப்பட்டது. அதற்கு காரணம் யோக சக்திதான் என்று சொல்லப்பட்டது.
அதுமட்டும் அல்லாமல் யோக நிலையில் ஒருவன் புவி ஈர்ப்பு விசையின் பாதிப்பு
இன்றி தரைக்கு மேலாக உயரமுடியும் என்றும் கருதப்பட்டது. இதற்கான எதிர்ப்பு
என்பது அன்றே இந்திய தத்துவவாதிகள் மத்தியில் தொடங்கிவிட்டது. குமாரிலர்
என்ற மீமாம்சகர் சொல்கின்றார் “யோக நிலை உண்மை என்று கூறினால் அது அவனது
தனி அனுபவம் தவிர இதனை நிரூபிக்க அவனிடம் வேறு எந்த சாதனமும் இல்லை.
மிகவும் கடுமையான முறையில் மற்ற தத்துவ தரிசனங்களின் பிரதிநிதிகள் அவர்களது
யோகிகளை உருவாக்க முடியும் என்றும், இவர்கள் தான் சார்ந்த தத்துவ
தரிசனங்களின் கருத்து சரியென்று யோக நிலையில் உணர்ந்து வேதாந்தம்
தவறென்றும் கூறுவார்கள்” எவ்வளவு அருமையான சிந்தனை பார்த்தீர்களா! அதாவது
ஒருவன் பெரியாரின் கருத்துக்களும் அம்பேத்கரின் கருத்துகளும் சரியானது
என்று யோக நிலையில் உணர்ந்து புராண இதிகாசங்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற
உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் என்று ஒருவன் சொல்லலாம் என்றும்
பொருள்படுமாறு குமாரிலர் சொல்கின்றார்.
யோகா
பயிற்சிகள் அவற்றால் கிடைக்கும் பலன்களை பதஞ்சலி கூறுகின்றார். 64 சிறு
சித்திகளையும், 8 சிறப்பு சித்திகளையும்( அஷ்ட சித்திகள்) ஒருவன்
அடையமுடியும். அவை
- அணிமா:தான் விரும்பும் சிற்றுரு எடுக்கும் திறன்.
- மகிமா: தான் விரும்பும் பேருரு எடுக்கும் திறன்.
- லகிமா: தான் விரும்பும் அளவுக்கு எடையை குறைவாக ஆகும் திறன்.
- கரிமா: தான் விரும்பும் அளவு எடை மிகுந்தவராக ஆகும் திறன்.
- பிராப்தி: எவ்வளவு தொலைவில் இருக்கும் பொருளையும் இருக்குமிடத்தில் இருந்து எட்டிப்பிடித்து விடும் திறன்.
- பிராகாமியம்: ஒரு பொருளைத் தான் விரும்பும் காலம் வரை தன்னிடம் வைத்திருக்கும் திறன்.
- இசித்துவம்: பொருள்களை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய திறன்.
- வசித்துவம்: எல்லாரையும், எல்லாவற்றையும், மரணத்தையும் கூடவென்று கீழ்ப்படுத்தும் திறன்.
யோகாவை அறிவியல் என்று சொல்லும் கூமுட்டைகள் எல்லாம் மேலே உள்ள எட்டில் எதையாவது ஒன்றை உண்மையென்று நிரூபிப்பார்களா?
யோகாவிலே
குண்டலினி யோகம் என்ற ஒன்று உண்டு. இது காம சக்தியை எழுப்பும் முறையைச்
சொல்கின்றது. எப்படி சிவமும் சக்தியும் கூடுவது நிகழ்கின்றதோ அதே போல
கடவுளுடன் ஒன்றாகும் விதத்தை அது விளக்குகின்றது. இந்த யோகத்தின்போது ஓம்
என்ற சொல் தொடர்ச்சியாக சொல்லப்படுகின்றது. இப்படியே
சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றுமே நடக்காது என்பதுவே உண்மை. நீர் உருவாக
வேண்டும் என்றால் இரண்டுபங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்சிஜனும் இணைய
வேண்டும். வாயாலேயே தண்ணீர் தண்ணீர் என்று சொன்னால் ஒரு சொட்டு தண்ணீர்கூட
உருவாகாது. மேலும் பதஞ்சலி சொல்லும் நிர்விகல்ப யோகாவை செய்பவர்கள் மரணத்தை
வென்றுவிட முடியும் என்று சொல்கின்றார்கள். ஆனால் அதைச் செய்த அத்தனை
பேரும் பின்நாட்களில் செத்துதான் போனார்கள். யோகதத்துவத்தை தொகுத்த பதஞ்சலி
தொடங்கி குண்டலினி சக்தியை சகஸ்ராரத்துக்கு ஏற்றியதாகச் சொல்லிக்கொண்ட
சீரடி சாய்பாபா, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, ரமண மகரிஷி,
ராஜ்னீசு உட்பட அத்தனை பேரும் கடைசியில் இறந்துதான் போனார்கள். அதுவும்
சாதாரணமாக அல்ல கடுமையான நோய்வாய்ப்பட்டு, துன்பப்பட்டு இறந்து போனார்கள்.
இன்று
இந்த யோகா என்பது மிகப்பெரிய சந்தைப்பொருளாக மாற்றப்பட்டிருக்கின்றது.
மூலைக்கு மூலை புதுப்புது யோகா சாமியார்கள் உருவாகிக்கொண்டு
இருக்கின்றார்கள். தங்களை கடவுளின் அருள்பெற்றவர்கள் என்றும் அனைத்துவித
நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் தன்னிடம் உள்ளதாகவும் கூறி மக்களை
ஏய்க்கின்றனர். ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, ரவிசங்கர், அமிர்தானந்த
மாயி, கல்கி சாமியார், ராம்தேவ், ஆஸாரம் பாபு என்று ஒரு பெரிய பட்டியலே
இருக்கின்றது. இதுலே கெட்ட சாமியர், நல்ல சாமியர் என்றெல்லாம் எவனும்
கிடையாது. மாட்டிக்கொண்டவன், மாட்டிக்கொள்ளாதவன் என்ற இரண்டுபேர்தான்
உள்ளனர்.
புதிய பொருளாதாரக் கொள்கைகள்
புகுத்தப்பட்ட பின்பு மிகப்பெரிய வாழ்வியல் நெருக்கடியை சந்தித்துவரும்
இந்திய மக்களை கருத்தியல் தளத்தில் காயடிக்க இந்த யோகா, ஆளும்
வர்க்கங்களால் திட்டமிட்ட முறையில் கடைவிரிக்கப் படுகின்றது. குறைவான
கூலியைக் கொடுத்து உழைப்பாளர்களை ஒட்ட சுரண்டும் தொழிற்சாலைகள், அதிகமான
சம்பளம் கொடுத்து காலம், நேரம் பார்க்காமல் தொழிலாளர்களை கசக்கிப் பிழியும்
மென்பொருள் நிறுவனங்கள், பல லட்சங்களைப் பிடுங்கிக்கொண்டு வேலை வாய்ப்பை
வழங்காமல் மாணவர்களையும், மாணவிகளையும் நடுத்தெருவில் விடும் கல்வி
நிலையங்கள் என அனைத்தும் இது போன்ற யோகா நிகழ்ச்சிகளை தங்களது
நிறுவனங்களில் அடிக்கடி நடத்துகின்றன. இதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு
எதிரான எதிர்ப்புணர்வு மட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த யோகா சாமியார்கள்
சீரழிந்துபோன இந்த சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வாக
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கோடிக்கணக்கான
ரூபாய்களை கல்லா கட்டும் இந்த கார்ப்ரேட் சாமியார்கள் இந்திய அரசியலின்
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியிருக்கின்றார்கள். ஒவ்வொரு
சாமியாரும் சில லட்சம் ஓட்டுக்களை தன்வசம் வைத்துள்ளார்கள். தேர்தலின் போது
இந்த சாமியார்கள் யாருக்கு ஓட்டு போடச் சொல்கின்றார்களோ அந்த நபர்களுக்கே
அவர்களின் அடிமைகள் ஓட்டு போடுகின்றார்கள். இதனால் தான் எல்லா அரசியல்
கட்சித் தலைவர்களும் சாமியார்களின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக
விழுகின்றார்கள்.
மோடி போன்ற
கிரிமினல் பேர்வழிகளை தங்கள் நாட்டிற்குள் வரத் தடைவிதித்த நாடுகள் கூட
யோகாவை ஆதரித்து இருக்கின்றன. ஐநா சபை ஜீன் 21 தேதியை சர்வதேச யோகா தினமாக
அறிவித்து இருக்கின்றது. இந்தியா முழுவதும் இதை பிரமாண்டமான முறையில்
நடத்தியுள்ளது. நீங்கள் இந்தியனாக இருந்தால் கண்டிப்பாக யோகாவை செய்ய
வேண்டும்; இல்லை என்றால் வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டும்; அதுவும் இல்லை
என்றால் கடலில் குதித்து சாகவேண்டும் என்று வேறு கிரிராஜ் என்ற பாராளுமன்ற
உறுப்பினர் சொல்லிவிட்டார். இதன் மூலம் மோடி அரசுக்கு பல நன்மைகள் காத்துக்
கிடக்கின்றது. தான் செயல்படுத்தும் தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்கள்
மூலம் எழும் மக்கள் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தலாம், இந்துமத எதிர்ப்பு
கொண்டவர்கள், பகுத்தறிவாதிகள், முற்போக்குவாதிகள் போன்றவர்களை அவர்களுக்கே
தெரியாமல் காவிக்கூட்டத்துடன் சேர்க்கலாம். என்ன ஒரு தந்திரம்
பார்த்தீர்களா!
ஏற்கெனவே கார்ப்ரேட்
சாமியார்களுடன் மோடிக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் உள்ள தொடர்பு
உலகத்துக்கே தெரியும். நாம் யோகாவை ஆதரிப்பதன் மூலம் மோடியையும் அவரது
அயோக்கியத்தனமான சதித்திட்டத்தையும் ஆதரிக்கப் போகின்றோம்.
யோகா
என்பது ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்கும் இடமல்ல; அது
பிழைப்புவாதிகளையும், புல்லுருவிகளையும், மதவெறியர்களையும்,
முட்டாள்களையும் உருவாக்கும் இடம். நீங்கள் கராத்தே, குங்பூ சொல்லிக்
கொடுப்பவர்களை கடவுளாகப் பார்ப்பீர்களா? இல்லை என்றால் யோகா சொல்லிக்
கொடுக்கும் நபர்களை மட்டும் ஏன் அவ்வாறு பார்க்கின்றீர்கள்? இலை அமைதியை
விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பார் மாவோ. ஒரு சமூகமே நம்
கண்முன்னால் அழிந்து செத்துக்கொண்டு இருக்கும்போது கண்ணை மூடிக்கொண்டு
எப்படி உங்களால் தியானிக்க முடிகின்றது? முடியும் என்றால் நீங்கள் இருப்பதை
விட அழிந்து போவதே நல்லது.
உதவிய நூல்கள்:
- இந்தியத் தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.
- இந்திய நாத்திகம்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.
- உலகாயதம்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.
- பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்-எஸ்.ஜி. சர்தேசாய்.
- அறிவியலா? அருஞ்செயலா?- பி.பிரேமானந்து
- செ.கார்கி keetru.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக