வெள்ளி, 26 ஜூன், 2015

Migrants? உலகமயமாக்கலின் மனித சந்தை! காபறேட்டுக்களுக்கு எல்லை இல்லை! மனிதர்களுக்கு?


சீனத் தொழிலாளிமூலதனம் சந்தையைக் கைப்பற்றக் கள்ளத்தோணி ஏறினால் அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர். உழைப்பு தன்னை சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்!  உன்னுடைய மாத வருமானம் ஆயிரம் ரூபாயா? அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அன்றாடம் பார்க்கிறாயா? அப்படியானால் நீ வலையில் சிக்குவதைத் தடுக்க முடியாது. ஒரு ஹாங்காங் கப்பல் முதலாளி கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு.சென் கான் திங் 20 வயது இளைஞன். அவனது மாத வருமானம் ஆயிரமல்ல, ஆறாயிரம் ரூபாய். சீனாவின் பியூஜியான் மாநிலத்திலுள்ள ஒரு சிற்றூரில் உணவு விடுதி நடத்தி வந்தான். மீன் மொத்த வியாபாரம் செய்து பணக்காரனாகி விடலாம் என்று முயன்று சேமித்த பணத்தைத் தோற்றான்.
எனினும் சோற்றுக்கே வழியில்லாமல் போய்விடவி்ல்லை. சொந்த வீடு, தொலைபேசியுடன் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. எனவே அந்தக் கப்பல் முதலாளி சொன்னதைப் போல ”வலையில்” விழுந்தான். எப்படியாவது அமெரிக்கா சென்று முன்னேறிவிட வேண்டும் என்ற வெறி அவனைப் பிடித்துக் கொண்டது.

சட்டபூர்வமான முறையில் தன்னை அமெரி்க்காவுக்கு ஏற்றுமதி செய்து கொள்வதற்கு அவன் ஒரு மருத்துவரோ, கணினி வல்லுனரோ அல்ல; சாதாரணத் தொழிலாளி. எனவே கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு செய்தான்.
பாஸ்போர்ட்டும் விசாவும் இல்லாமல் அமெரிக்க சொர்க்கத்திற்கு மனிதர்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் கைதேர்ந்தவர்களான ”பாம்புத் தலையர்கள்” (Snake heads) என்ற சீன மாஃபியாக் கும்பலை அணுகினான்.
17,000 கிலோ மீட்டர் கடல் பயணம், 18 லட்சம் ரூபாய் கட்டணம். அமெரிக்காவில் ஆள் இறங்கியவுடன் பணத்தை சீனாவில் தந்துவிட வேண்டும். இந்த அபாயகரமான பயணத்திற்குத் தன் தாய் சம்மதிக்க மாட்டாள் என்பதால் மகனும் தந்தையும் சேர்ந்து ரகசியத் திட்டம் தீட்டினர். ஒருநாள் இரவு கடையை மூடியவுடன் நேரே கடற்கரைக்குக் கம்பி நீட்டினான் சென்.
***
து ஒரு பழைய சண்டைக் கப்பல். அந்தக் கப்பலில் ஒரு சரக்குப் பெட்டகத்தை வாடகைக்குப் பேசியிருந்தார்கள் பாம்புத் தலையர்கள். 40 அடி நீள சரக்குப் பெட்டகத்தில் 100 பேர். அவர்கள் யாருக்கும் ஒருவரைரொருவர் அறிமுகம் கிடையாது. எனினும் அவர்களின் லட்சியம் ஒன்றே. அமெரிக்கா – பணம் – முன்னேற்றம். இந்த ‘லட்சியவாதிகளில்’ சில பெண்களும் ஒரு மூன்று வயதுக் குழந்தையும் அடக்கம்.
சரக்குப் பெட்டியில் பயணம்
சரக்குப் பெட்டியில் பயணம் (படம் விளக்கத்துக்கு மட்டும்)
சரக்குப் பெட்டிக்குச் சன்னல் கிடையாது. ஒரு மின்விசிறி மட்டும் உள்ளிருந்து காற்றை வெளியேற்றிக் கொண்டிருந்தது. இரண்டே கழிப்பறைகள். எக்காரணம் கொண்டும் பெட்டிக்கு வெளியே யாரும் வரக்கூடாது. ஒருவர் அடுக்கி வைத்தாற்போலத்தான் தூங்க முடியும். சில நாட்களுக்கு ஒருமுறை உணவுப் பொட்டலத்தையும் தண்ணீரையும் உள்ளே எறிவார்கள். வாரத்திற்கு ஒருமுறை மேல்தளத்திற்கு வந்து உப்புத் தண்ணீரில் குளித்துக் கொள்ளலாம்.
தினமும் இரவு நேரத்தில் இரண்டு பெண்களை மேல்தளத்திற்கு வரச் சொல்வார்கள் பாம்புத் தலையர்கள். காலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். என்ன நடந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அது தங்கள் இலட்சியத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை.
தாங்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகள் மனிதர்களாயிற்றே என்பதற்காக அந்த மாஃபியாக் கும்பல் இரக்கமெதுவும் காட்டவில்லை. மனைவி குழந்தையுடன் அமெரிக்க சொர்க்கத்திற்குப் பயணம் புறப்பட்ட கணவன் ஒருவன் வாந்தி பேதி கண்டு இறந்தான். அழுகிய தக்காளியைப் போலக் கடலில் வீசப்பட்டான். என்றாலும் என்ன? அநாதைகளான மனைவியும் குழந்தையும் சொர்க்கத்தை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தப் பயணம் முடியவே முடியாதோ என்ற அச்சம் சென்னுக்கு ஏற்பட்டது. புயலுக்கும், சூறாவளிக்கும் இடையில் மரணத்துடன் போராடியபடியே 35 நாட்கள் இடைவிடாத பயணம், இறுதியாக வட அமெரிக்கக் கண்டத்தின் தென் முனையில் உள்ள கவுதமாலா நாட்டின் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது கப்பல்.
மனிதர்கள் கடத்தல்
“இந்தப் பயணம் முடியவே முடியாதோ”
இடுப்பளவு தண்ணீரில் எல்லோரும் இறக்கி விடப்பட்டனர், நள்ளிரவில் நடுக் கடலில் குளிரில் விறைத்தபடியே படகுகள் வருவதற்காகக் காத்து நின்றனர். ஐந்து படகுகளில் அனைவரும் ஏற்றப்பட்டனர். படகுகளை அந்நாட்டின் கடற்காவல் படை துரத்தத் தொடங்கியது. ஒரு படகு கவிழ்ந்து 12 பேர் இறந்தனர். மற்றவர்களுக்கோ அவர்களைத் திரும்பி பார்க்கக்கூட நேரமில்லை. இன்னொரு படகு கரை சேர்ந்தவுடனே போலீசு 36 பேரை கைது செய்தது.
மீதமிருந்தவர்கள் ஒரு மாஃபியா தலைவரின் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிலவறையில் அடைக்கப்பட்டனர். போலீசு கெடுபிடி குறையும் வரை வெளியே வரமுடியாது என்பதால் ஒரு மாதம் சென்னுக்கும் மற்றவர்களுக்கும் அங்கே சிறைவாசம்.
சீன விவசாயிகளின் வாழ்க்கையைக் காட்டிலும் படுமோசமான, வறிய வாழ்க்கையை கவுதமாலா விவசாயிகள் அனுபவிப்பதை சென் அங்கே கண்டான். சீன விவசாயிகளைக் காட்டிலும் தனது ஊரில் சென் பெற்றிருந்த வசதிகள் எவ்வளவோ அதிகம். ஆனால் சோற்றைத் தேடியா அவன் அமெரிக்கா போகிறான்? சொர்க்கத்தைத் தேடியல்லவா இந்தப் பயணம்.
ஒரு மாதம் நிலவறையில் சிறைவாசம். பிறகு சென்னும் அவனுடன் 24 பேரும் ஒரு லாரிக்குள் திணிக்கப்பட்டனர். அது மெக்சிகோவுக்கு திராட்சைப் பழம் ஏற்றிச் செல்லும் லாரி. லாரி நிறைய சரக்கிருந்தது. அடியில் ஒரு அடி உயரத்தில் ஒரு ரகசியத் தளம். அதில் மல்லாந்து படுத்தபடியே 40 மணி நேரப் பயணம். தண்ணீர், உணவு எதுவும் கிடையாது. கை காலை அசைக்கவும் முடியாது. முகத்துக்கு இரண்டங்குலம் மேலே லாரியின் தளம். முதுகுக் கீழே கரடு முரடான சாலையால் பதம் பார்க்கப்படும் பலகைகள்.
ஆள் கடத்தல் மாஃபியா
மெக்சிகோ அமெரிக்கா எல்லையில் போலிசு கெடுபிடி அதிகமாகி இருந்தது.
சென்னுக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. நாட்டை விட்டுக் கிளம்பியதே தவறோ என்று தோன்றத் தொடங்கியது. ஒரு வேளை அமெரிக்கா போய்ச் சேர்ந்து விட்டால் மறுகணமே பயணத்தொகை 18 லட்சம் ரூபாயை வசூல் செய்ய பாம்புத் தலையர்கள் தன் பெற்றோரிடம் போய் நிற்பார்கள். வட்டிக்கு வாங்கி கொடுத்து விடுவதாக அப்பா சொல்லியிருந்தார். ஒருவேளை அவரால் பணம் தர முடியாவிட்டால்?
நினைக்கவே அவனுக்குக் குலை நடுங்கியது. பணம் தராதவர்களை போதை மருந்துக் கும்பலிடம் விற்று விடுவார்கள் பாம்புத் தலையர்கள். போதை மருந்துக் கும்பலிடம் சிக்கினால் மீட்சியே கிடையாது. கோஷ்டி மோதலில் சாகலாம்; போலிசில் சிக்கினால் 20, 30ஆண்டுகள் சிறை.
இல்லையென்றால் பணம் தராத பயணிகளை பாம்புத் தலையர்கள் சுட்டுக் கொன்று விடவும் வாய்ப்புண்டு. மூச்சுத் திணறி லாரியிலேயே சாகப் போகிறோமா, சுட்டுக் கொல்லப்படுவோமா என்ன வகையான மரணம் என்று அவனது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த போதே லாரி நடுக்காட்டில் ஓரிடத்தில் நின்றது.
சென்னும் மற்றவர்களும் மெக்சிகோவைச் சேர்ந்த மாஃபியாக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே கவுதமாலாவில் 12 பேர் இறந்து, 24 பேர் கைது செய்யப்பட்டிருந்ததால் மெக்சிகோ அமெரிக்கா எல்லையில் போலிசு கெடுபிடி அதிகமாகி இருந்தது. எனவே இரண்டு மாதங்கள் நடுக்காட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
முள்வேலிக்கு அப்பால் 'சொர்க்கம்'
முள்வேலிக்கு அப்பால் ‘சொர்க்கம்’
பின் திடீரென்று துவங்கியது பயணம். மெக்சிகோ பாலைவனத்தில் சனவரி மாதக் கடுங்குளிரில் கால்நடையாகவே பயணம். குளிர் உறைநிலைக்கும் கீழே போனது. எனினும் தீக்குச்சியைக் கொளுத்தவோ, சிகரெட் பிடிக்கவோகூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிளம்பும்போது அணிந்திருந்த பாண்ட் சட்டை தவிர யாரிடமும் வேறு உடையில்லை. குளிரைச் சமாளிக்க ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
ஆறு நாட்கள் நடந்து சேர்ந்த பின் அமெரி்க்க எல்லையின் முள்வேலி கண்ணில் பட்டது. கம்பியை வெட்டி 25 பேரையும் சொர்க்கத்திற்குள் தள்ளி விட்டார்கள் மெக்சிகோ மாஃபியாக்காரர்கள். கறுப்புநிற வேன் ஒன்று அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பறந்தது.
முதன்முதலாக அமெரி்க்க நகரமொன்றைப் பார்த்தான் சென். அது ஹூஸ்டன். அங்கிருந்து மறுநாள் லாஸ் ஏஞ்செல்ஸ் பயணம். லாஸ் ஏஞ்செல்ஸை அடைந்தவுடன் ஒரு அறைக்குள் அவனைச் சிறை வைத்தார்கள் பாம்புத் தலையர்கள். அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்ட செய்தியை தொலைபேசி மூலம் சீனாவில் உள்ள பெற்றோருக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.
மகனுடையே குரலைக் கேட்டவுடனே தொலைபேசியிலேயே கதறி அழத்தொடங்கினாள் அவன் தாய். கள்ளத் தோணியில் சென்ற 12 சீனர்கள் கவுதமாலா அருகே கடலில் மூழ்கி இறந்தனரென்று செய்தித்தாளில் படித்தது முதல்,தனது மகனும் இறந்திருப்பானோ என்று இரண்டு மாதங்களாக அழுது கொண்டிருந்த தாய்க்கு மகனின் குரல் ஒரு ஆறுதல். தந்தைக்கோ அச்சம்.
'கள்ளத் தோணி' தொழிலாளர்கள்
சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டுபிடித்து, ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலை.
பாம்புத் தலையர்களின் ஆட்கள் வருவார்கள். அமெரிக்காவில் ஆளைச் சேர்த்தவுடனே 18 லட்ச ரூபாய் தந்துவிட வேண்டும் என்பது பழைய ஒப்பந்தம். இப்போது தங்களது சரக்குகளில் 12 இறந்து போய்விட்டதாலும் 28 போலீசில் பிடிபட்டு விட்டதாலும் கட்டணத்தைக் கூட்டிவிட்டார்கள் பாம்புத் தலையர்கள். 25 லட்சம் ரூபாய் தரவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சென்னுக்கு ஆபத்து.
அலைந்து திரிந்து கந்து வட்டிக்குக் கடன் வாங்கி 25 லட்சம் ரூபாயைக் கொடுப்பதற்கு அவருக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டது. அதுவரை லாஸ் ஏஞ்செல்சில் சிறை வைக்கப்பட்டிருந்த சென், பணம் கைமாறியவுடனே நியூயார்க்கில் கொண்டு விடப்பட்டான்.
நகரம் முழுவதும் அலைந்து திரிந்து சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டுபிடித்து, ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலைக்கும் சேர்ந்து விட்டான். பாத்திரம் கழுவ வேண்டும். காய்கறி நறுக்க வேண்டும். ஒருநாளைக்கு 13 மணி நேரம் வேலை, மாதம் 1400 டாலர் (ரூ 70,000) சம்பளம்.
chinese-workersவாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி கடன் அடைக்க பெற்றோருக்கு பணம் அனுப்புகிறான். 25 லட்சம் ரூபாய் கடனும் வட்டியும் எப்போது அடையும்? மிக வேகமாக அடைத்தாலும் 8, 10 ஆண்டுகள் ஆகலாம்.
அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அவன் ஒரு கள்ளத்தோணி. பிடிபட்டால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். என்ன கொடுமை நடந்தாலும் கடை முதலாளியை எதிர்த்துப் பேச முடியாது. எதிர்த்தால் அவன் போலீசுக்கு காட்டிக் கொடுத்து விடுவான்.
எனினும் சென்னுக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை. அந்தச் சிறிய கடையில் அவனுடன் வேலை செய்யும் 17 சீனர்கள், 5 வங்காள தேசத்துக்காரர்கள், ஒரு இந்தியன் எல்லோரும் ‘கள்ளத்தோணிகள்’ தான் என்பதில் அவனுக்கு ஒரு ஆறுதல்.
நினைத்துப் பார்த்தால் நாம்தான் இந்தச் சாகசத்தைச் செய்தோமா என்று அவனுக்கே சந்தேகம் வருகிறது. 14,000 கிலோ மீட்டர் கடல் பயணம், கவுதமாலாவில் சிறை, மெக்சிகோ காட்டில் இரண்டு மாதம், பாலைவனத்தில் நடைபயணம், கடைசியில் மொழி தெரியாத பண்பாட்டால் வேறுபட்ட அறிமுகமான மனிதர்களே இல்லாத இந்த நாட்டில், அமெரிக்காவில் ஒரு வேலை!
இனி வாழ்க்கை எப்படிச் செல்லும்? குடியுரிமை கிடைக்குமா, திருமணம் உண்டா, குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களை என்ன செய்வது, வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை தாய்நாடு செல்ல முடியுமா, பெற்றோர்களைப் பார்க்க முடியுமா… தெரியாது. இந்தக் கேள்விகள் எதற்கும் அவனுக்கு விடை தெரியாது.
இப்போதைக்கு அவனுக்கு தெரிவது ஒன்று மட்டும்தான். அவன் வெற்றிகரமாக வந்து சேர்ந்து விட்டான். டாலரைத் தொட்டுப் பார்த்து விட்டான்.
***
ரு வகையில் சென் அதிருஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். அதே பியூஜியான் மாநிலத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்ட 18 வயது ஜின் சிகாய் ஒரு ‘துரதிருஷ்டசாலி’
தொலைபேசி மெக்கானிக்கான ஜின் தரைவழியே இங்கிலாந்து செல்ல பாம்புத் தலையர்களிடம் 15 லட்ச ரூபாய் கொடுத்திருந்தான். பீகிங்கிலிருந்து ரயிலில் மாஸ்கோ; அங்கிருந்து லாரி, குதிரை வண்டியில் செக்கோஸ்லோவாகியா, அங்கிருந்து அப்படியே ஜெர்மனி, ஹாலந்து வழியாகச் செல்ல தேவையான போலி ஆவணங்களைத் தயாரித்திருந்தார்கள் பாம்புத் தலையர்கள்.
dead-in-containerகைச் செலவுக்குப் பணம் அனுப்புமாறு ஜூன் 10-ம் தேதி ஹாலந்திலிருந்து வீட்டுக்குப் போன் செய்தான் ஜின். ”தொண்ணூறு சதவீதம் பயணம் முடிந்து விட்டது. ஹாலந்திலிருந்து பெல்ஜியம், பிறகு இடையிலிருப்பது ஆங்கிலக் கால்வாய். அதைக் கடந்தால் இங்கிலாந்துதான்.” பெற்றோர்களுக்குப் பெரு மகிழ்ச்சி.
ஆனால் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்திலிருந்து வெளியான செய்தி சீனாவையே அதிர்ச்சியிலாழ்த்தியது.
பெல்ஜியத்திலிருந்து தக்காளி ஏற்றிவந்த சரக்குப் பெட்டகத்தைச் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்டார்கள் பிரிட்டிஷ் சுங்க இலாகா அதிகாரிகள். தக்காளிகளை நகர்த்திவிட்டுப் பார்த்தால் ஒன்றன்பின் ஒன்றாக 54 மனித உடல்கள். அனைவரும் சீனர்கள்.
பெட்டகத்திலிருந்த ஒரேயொரு சன்னலும் வெளிப்புறமாக மூடிக் கொண்டு விட்டதால், மூச்சுத் திணறி, பெட்டகத்தின் சன்னலை மோதித் திறக்க முயன்று தோற்று, உடலில் நீர்வற்றி அதைச் சமாளிக்க தக்காளிகளைக் கடித்து உறிஞ்சி அதுவும் பயனின்றி மூச்சுத் திணறி துவண்டு செத்திருக்கிறார்கள்.
செத்தவர்கள் பெயரென்ன ஊரென்ன இந்தப் பெட்டகத்தை யார் யாருக்கு அனுப்பினார்கள் என்று எந்த விவரமும் தெரியாது. பிணங்களின் புகைப்படத்தைப் பார்த்துத்தான் தன் மகனின் மரணத்தை உறுதி செய்து கொண்டார்கள் ஜின்னின் பெற்றோர்கள்.
இது ஒரு துரதிருஷ்டசாலியின் கதை.
***
பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள கிராமம் சான்கேட். ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஜரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் புனிதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் போல அந்தக் கிராமத்தில் குழுமியிருக்கிறார்கள். ஒரே கூரையின் கீழ் உலகின் அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும் உயிருடன் காணக் கிடைக்கும் அருங்காட்சியகம் அது. உண்மையான உலக கிராமம்.
கடவுச்சீட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கும், அங்கிருந்து அமெரிக்காவுக்கும் செல்லச் காத்திருக்கும் அந்தப் பயணிகளுக்காக செஞ்சிலுவை சங்கம் ஒரு மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பெட்டகச் சாவுகளைப் பார்த்த பிறகும் இத்தகைய அபாயகரமான பயணம் குறித்து அவர்கள் அஞ்சவில்லையா?
இந்த மரணங்கள் மரத்துவிட்டன. எல்லைக் காவற்படையிடமிருந்து தப்பிப்பதற்காகப் படகின் உறைபனி நீரில் வீசியெறியப்பட்டு விரைத்துச் சாவோர் ஒவ்வொரு ஆண்டும் பலநூறு பேர். இவை கணக்கில் வராத சாவுகள். இத்தாலியின் கடற்பரப்பில் மட்டும் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 180 பேர்.
டோவர் நகரின் இந்தப் பெட்டகச் சாவு நடப்பதற்கு நான்கு நாட்கள் முன் ஒரு டச்சு அமைப்பு ‘ஜரோப்பாவில் நுழைய முயன்று இறந்தோர் இதுவரை 2000 பேர் என்று புள்ளி விவரம் வெளியிட்டிருந்தது. டோவர் சாவுடன் சேர்த்து 2054
”இது ஒரு வகையான ‘சி.என்.என் விளைவு (C.N.N-அமெரிக்கத் தொலைக் காட்சி). தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கக் கண்ணாடியின் வழியே பார்க்கப் பழகிவிட்டதன் விளைவு” என்று விமர்சிக்கிறார் சானகேட் நகரிலுள்ள செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி.
”வயது இருபதாகப் போகிறது இன்னும் ஏன் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய். அமெரிக்கா போக வேண்டிதுதானே” என்று அறிவுரை கூறுவது சீனாவின் பியூஜியான் மாநிலத்தில் சகஜமாகிவிட்டது என்கிறார் ஒரு சீனப் பேராசிரியர்.
அமெரிக்க மோகம் பிடித்தவர்களை இந்தச் சாவுகள் அச்சுறுத்துவதில்லை. ‘சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புபவன் சாவுக்கு அஞ்சக் கூடாது’ என்று எண்ணுகிறார்கள் போலும்!ஜரோப்பவிலோ இச்சாவுகள் அப்போதைக்கு ஒரு பரபரப்புச் செய்தி. திருவிழாவில் கூழ் ஊற்றும் பண்ணையாரின் பேரப் பிள்ளைகள். கூலுக்கு அடித்துக் கொள்ளும் ஏழைகளை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படிப் பார்ப்பதற்குத்தான் அமெரிக்க, ஜரோப்பிய மக்களைப் பழக்கியிருக்கின்றன தகவல் தொடர்பு சாதனங்கள்.
”உலகத்தில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் நாங்கள் உயிர் காக்கும் படகாக முடியாது” என்று சலித்துக் கொள்கிறார் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் உழைப்பையும் இயற்கை வளங்களையும் இரண்டு நூற்றாண்டுக் காலம் சூறையாடிச் சேர்த்த சொத்தின் மீது அமர்ந்து கொண்டு இவ்வாறு பேசுவதற்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்? உலகத்தையோ பரிபாலனம் செய்யும் பெரும் பொறுப்பைக் கடுகளவும் விருப்பமில்லாமல் தன் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் ஏகாதிபத்தியவாதியின் கருத்து இது.
18,19-ம் நூற்றாண்டுகளில் ஆசிய ஆப்பிரிக்க அடிமைகளை வைத்துத்தான் தம் புதிய சாம்ராச்சியத்தை உருவாக்கிக் கொண்டன அமெரிக்காவும் பிரிட்டனும். இருபதாம் நூற்றாண்டில் கடினமான, ‘தரம் தாழ்ந்த’ வேலைகளைச் செய்ய கறுப்பு, பழுப்பு நிற மக்கள் இறக்குமதி செய்யப் பட்டனர்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் காலனி நாட்டு மக்கள் விடுதலைக்குப் போராடத் துவங்கிய பின், குடியேற்றத்தைத் தடுத்து ஜரோப்பா, சமமான குடிமக்களாக ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் தம்முடன் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு அடிமைகள் மட்டுமே தேவைப்பட்டனர்.
***
ப்போதோ மறுகாலனியாக்கக் காலம். தமே விரும்பி மனமுவந்து வருகிறார்கள் அடிமைகள். ‘வேறு வழியின்றி’ ஏற்றுக் கொள்வது போலப் பாசாங்கு செய்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள்.
கள்ளத் தோணிகளிலும், சரக்குப் பெட்டிகளிலும் பயணம் செய்து சட்டவிரோதமாகத் தங்கள் நாட்டில் நுழையும் ஏழை நாட்டு உழைப்பாளர்களை அவர்கள் தடுக்கவில்லை. கள்ளச் சாராயத்தைப் பிடிக்கும் போலீசைப் போல அந்தப் பக்கம் திரும்பிக் கொள்கிறார்கள். அவ்வப்போது கணக்குக்கு ‘கேஸ்’பிடிக்கிறார்கள். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தாங்கள் விரும்பாததைப் போல நடிக்கிறார்கள்.
ஈராக்கின் குழந்தைகளுக்கு ஒரு பால் பவுடர் டப்பாவோ, ஒரு மாத்திரையோ கூட செல்லவிடாமல் தடுத்து ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற அமெரிக்கா, சதாம் உசேனின் மாளிகையை விண்ணிலிருந்தே வேவு பார்த்து குண்டு வீசும் தொழில்நுட்ப ஆற்றல் பெற்ற அமெரிக்கா, சீனா, ரசியா போன்ற நாடுகளிலிருந்து ஒரு நபரோ ஒரு பத்திரிகையோ கூடத் தன் நாட்டில் நுழைந்துவிடாமல் இரும்புத்திரை போட்டு வைத்திருந்த அமெரிக்கா, இந்தக் கள்ளத் தோணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது எத்தகைய பித்தலாட்டம்?
”சொல்லப் போனால் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றத்தால் அவர்களது பொருளாதாரத்திற்கு லாபம்தான். அவர்களுக்கு மலிவான கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். எதற்காக இந்த பிரிட்டிஷ்காரர்கள் சும்மா அலட்டுகிறார்கள்?” என்று சர்வ சாதாரணமாக குட்டை உடைக்கிறார் சான்கேட் கிராமத்தில் காவல் இருக்கும் ஒரு போலீசுக்காரர்.
ஏழை நாடுகளின் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு வேலைவாங்க முடியுமென்பதால் அங்கெல்லாம் மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்; தம் சொந்த நாட்டில் குறைந்த கூலிக்கு எடுபிடி வேலை செய்வதற்காக ஏழை நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதியும் செய்கின்றன.
சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசுகளோ, தம் மக்கள் கள்ளத் தோணியேறி திரைகடலோடி திரவியம் தேடுவதையே விரும்புகின்றனர். அந்தியச் செலவாணி பற்றாக்குறையை ஈடுகட்ட அவர்களுக்கு டாலர் தேவை. கள்ளத் தோணியேறி அமெரிக்கா செல்லும் சீனர்கள், பியூஜியான் மாகாணத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர்.
ஏகாதிபத்தியச் சுரண்டலால் ஏற்படும் அந்நியச் செலாவணி நெருக்கடியைக் சமாளிக்க இன்னும் கொடூரமான ஏகாதிபத்தியச் சுரண்டலால் கிடைக்கும் டாலர் பயன்படுகிறது. கந்துவட்டி கட்டமுடியாதவன் பெண்டாட்டியை அடமானம் வைத்த கதை இது.
என்ரான், போர்டு, மைக்ரோ சாப்ட் முதலாளிகள் எல்லை கடந்து எந்த நாட்டிற்குள்ளும் நுழையலாம். தொழில் தொடங்கலாம். ஆனால் தொழிலாளர்கள் எல்லையைக் கடக்கக் கூடாது. இதுதான் உலகமயமாக்கக் கொள்கையின் நீதி.
மூலதனத்திற்கு தேசம் இல்லை, அரசு இல்லை. உழைப்புக்குத் தேசம் உண்டு சுரண்டுவதற்கு; அரசு உண்டு அடக்குவதற்கு.
மூலதனம் சந்தையைக் கைப்பற்றக் கள்ளத்தோணி ஏறினால் அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர். உழைப்பு தன்னை சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்!
குற்றவாளிகளை உள்ளூர் போலீஸ்காரன் நேசிப்பதைப் போலவே உலகப் போலீஸ்காரனும் நேசிக்கிறான். அவர்கள் அளிக்கும் இலஞ்சம் மலிவான உழைப்பு.
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.
– சூரியன்
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2000  வினவு.com

கருத்துகள் இல்லை: