வியாழன், 14 மே, 2015

அரசு விளம்பரங்களில் மாநில தலைவர்களின் படங்கள் கூடாது ! உச்சாநீதிமன்றம் தீர்ப்பு! மாநில உரிமைக்கு???

உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மாநில உரிமைகளுக்கு எதிரானது!: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை: ’’ நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்; முதலமைச்சர் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியின் படங்களையும், குடியரசுத் தலைவரின் படங்களையும் வெளியிடலாம், மாநில முதலமைச் சர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயலாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கும், மாநில முதல் அமைச்சர்களுக்கும் சமமான அந்தஸ்து தான். இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களிலே பிரதமரை விட அந்தந்த மாநில முதல் அமைச்சர்களுக்குத் தான் பொது மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். பிரதமரும் பெரும்பான்மை அரசியல் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுவர் தான். அதைப் போலவே குடியரசுத் தலைவரும் அரசியல் கட்சியின் ஆதரவைப் பெற்றவர் தான். மாநிலங்களில் பெரும்பான்மை அரசியல் கட்சியின் ஆதரவோடு தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசு தலைவர் படங்கள் இடம்பெறுவதற்கு என்ன அடிப்படைக் காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் மாநில முதல்வரின் படம் இடம் பெற வேண்டும் என்பதற்கும் உண்டு. கல்வியறிவு படைத்த மக்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாட்டில், பக்கம் பக்கமாக வார்த்தைகளைக்கொட்டி விளக்குவதைக் காட்டிலும் உருவப் படம் ஒன்றை வெளியிட்டு, சுருக்கமான வாசகங்களை வெளியிடுவதன் வாயிலாகவே விளம்பரத்தின் நோக்கத்தினை மக்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்திய ஜன நாயகத்தில் மத்திய நிர்வாகத்தின் உருவகமாக பிரதமரையும், மாநில நிர்வாகத்தின் உருவகமாக முதல்வரையும் முன்னிலைப் படுத்துவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவது மட்டுமல்லாமல், இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும். எனவே அரசு விளம்பரங்களில் அந்தந்த மாநில முதல மைச்சர்களின் படங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்பது தான் என்னுடைய கருத்தாகும்.’’ nakkheeran,in

கருத்துகள் இல்லை: