வெள்ளி, 15 மே, 2015

கனிமொழி : நாடாளுமன்ற வளாகத்திலேயே பெண் பணியாளருக்கு பாதுகாப்பில்லை

திமுக எம்.பி. கனிமொழி (இடது) | நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு (வலது).
திமுக எம்.பி. கனிமொழி (இடது) | நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு (வலது).
நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் துப்புரவு பணிப்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய புகார் தொடர்பாக, தனக்கு உரிய தகவல் அளிக்குமாறு மக்களவைச் செயலரிடம் வெங்கய்ய நாயுடு கோரியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் துப்புரவு பணியாற்றி வரும் பெண்ணை அவரது கண்காணிப்பாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ள சம்பவம் குறித்து நேற்று இரு அவைகளிலும் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக இது குறித்த செய்தியை 'தி இந்து' (ஆங்கில நாளிதழ்- 13.05.2015 பதிப்பு) பிரத்யேகமாக பதவி செய்திருந்தது. 'தி இந்து'வுக்கு அந்தப் பெண் அளித்த பேட்டியில் தனது கண்காணிப்பாளர் தன்னை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததாகவும், இது குறித்த தனது புகார் மக்களவை உள்விவகார குழுவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
அதேபோல், தான் எந்த தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் நாடாளுமன்ற வளாகத்தில் பணியமர்த்தப்பட்டாரோ அந்த நிறுவனமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார். | விரிவாக படிக்க - நாடாளுமன்றம் கேட்கத் தவறிய ஒரு பெண்ணின் அழுகுரல் |
இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி, "நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்கு தீர்வு காண எவ்வித உதவியும் பெறமுடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை" என்றார்.
கனிமொழி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் டி.என்.சீமா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். சீதாராம் யெச்சூரி துப்புரவுப் பணியாளர் செய்தி வெளியாகியிருந்த 'தி இந்து' செய்தித்தாளை உயர்த்திக்காட்டினார்.
இப்பிரச்சினைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார்.
இதேபோல், இப்பிரச்சினை மக்களவையிலும் எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. ஏ.சம்பத் பேசும்போது, "இத்தகைய சம்பவங்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு உகந்தது அல்ல" என்றார்.
இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்ற பணியாற்றும் துப்புரவு பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய புகார் தொடர்பாக மக்களவை செயலர் தகவல் அளிக்க வேண்டும்" என்றார்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: