திங்கள், 11 மே, 2015

ஆச்சர்யா :4 பேரும் குற்றவாளிகள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன:

எங்களைப் பொறுத்தவரை 4 பேரும் குற்றவாளிகள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: ஆச்சர்யா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி 11.05.2015 திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளீர்களா என்று நீதிபதி குமாரசாமி, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை நோக்கி கேட்டார். இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று ஆச்சார்யா தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சார்யா, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் எதிராக போதுமான ஆதாரங்களை அரசுத் தரப்பு அளித்துள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களாகவே உள்ளன. அவற்றை ஆய்வு செய்து சரியென ஒப்புக்கொண்டே விசாரணை நீதிமன்ற நீதிபதி 4 பேருக்கும் தண்டனை வழங்கினார்.
அப்படி இருக்கையில் அந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்பது தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகே தெரிய வரும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை 4 பேரும் குற்றவாளிகள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது சரியானது. மேல்முறையீடு மனு மீது கர்நாடக அரசு வாதிட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பவானி சிங் நியமனம் செல்லாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம் அரசு தரப்புக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்தது சரியானது அல்ல. அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடரக் கூடாது என அறிவித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே அவகாசம் வழங்கியது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சுமார் 2 மாதங்கள் வாதிட்டுள்ளனர். அதற்கு எதிராக சட்டப்படி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞரின் வாதம் இடம்பெறவே இல்லை. ஏப்ரல் 27ஆம் தேதிதான் என்னை நியமித்தார்கள். ஒரே நாளில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஒரு நாள் என்பது நேரில் வாதிடக் கூட போதாது. அப்படி இருக்கையில் எழுத்துப்பூர்வ வாதத்தை எப்படி முழுமையாகத் தயாரிக்க முடியும். அதனால் ஒரு நாளில் என்ன முடியுமோ அதனை செய்தேன். இந்த வழக்கில் 259 சாட்சிகள், 2 ஆயிரத்து அதிகமான ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்தின் 900க்கும் அதிமான பக்க தீர்ப்பு போன்ற அனைத்தையும் ஒரே நாளில் படித்து பார்த்து எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துவிட முடியாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், பவானி சிங் நியமனம் செல்லாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி முன் சில நாட்கள் மட்டுமாவது வாதிட அனுமதி வழங்கியிருக்க வேண்டும். தீர்ப்பு நகலை முழுமையாக ஆய்வு செய்த பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அரசுக்கு அறிக்கை அளிக்க இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை: