வியாழன், 1 ஜனவரி, 2015

2014 அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நீதித்துறையை ஏப்பம் விட்ட ஆண்டு! குன்ஹா மட்டுமே நீதித்துறையின் ஆக்சிஜன்!

ஜெயலலிதாவுக்காக இந்திய பத்திரிகைகளும் டிவிக்களும் (ஜாதி ஜாதி ) எவ்வளவு தூரம் அடிமை சேவகம் செய்கின்றன என்பதை காட்ட இந்த சவுக்கு கட்டுரை ஒரு நல்ல Flashback ஆகும் 
நேற்றைக்கு முன்தினம், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை முடிந்து, செப்டம்பர் 20 அன்று தீர்ப்பு என்று அறிவித்தார்,  சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.  தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் முக்கிய வழக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் அல்ல.  தமிழகத்தின் முதல்வர்.    தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இந்தச் செய்தி. ஆனால், தமிழகத்தில் உள்ள அத்தனை அச்சு ஊடகங்களும் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்தன அல்லது முழுமையாக புறக்கணித்தன. இந்து நாளேடு, 7வது பக்கத்தில் இரண்டு காலத்தில் சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியாவும் இந்த செய்தியை ஏழாவது பக்கத்தில் வெளியிட்டிருந்தது.  டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு இது செய்தியே அல்ல.

ஏழாம் பக்க இந்து செய்தி
தமிழ் நாளேடுகளும் எந்த விதத்திலும் குறைவில்லை.    ஏழு அல்லது எட்டாம் பக்கத்தில் இந்த செய்தியை புதைத்திருந்தன.  ஜெயலலிதாவின் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை இரண்டாவது பக்கத்திலும், மூன்றாவது பக்கத்தில் இறந்த எஸ்.ஐ மனைவிக்கு 5 லட்சம் உதவித் தொகை அளித்ததையும், ஏழாவது முறை பொதுச் செயலாளராக ஆகும் ஜெயலலிதா குறித்து ஏழாவது பக்கத்திலும், வெளியிட்ட தினமணி, 11வது பக்கத்தில் ஜெயலலிதா வழக்கு குறித்த செய்தியை புதைத்துள்ளது.    மற்ற தமிழ் ஊடகங்கள் வேறுபாடு இல்லாமல் செய்தியை புதைத்திருந்தன.  தினகரன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.  ஆனால், கேடி சகோதரர்கள் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்ததை மட்டும் ஒரு வரி கூட செய்தியாகப் போடவில்லை. 
11ம் பக்க தினமணி செய்தி
சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதான வழக்கு என்பது மட்டுமல்ல, பல்வேறு வகைகளில் இது ஒரு வரலாற்றுப் பாடம்.    
இந்தியாவில் வேறு எந்த வழக்கும் இது போல இழுத்தடிக்கப்பட்டதேயில்லை.  சட்டத்தில் உள்ள அத்தனை துளைகள் வழியாகவும் நுழைந்து வெளியேறினார் ஜெயலலிதா.   நீதிமன்றத்தோடு மோதினார்.  நீதிமன்றத்தை வளைத்தார்.  நீதிமன்றத்தை எள்ளி நகையாடினார்.  நீதிமன்றத்தை அவமதித்தார்.  ஒரு வழக்கை 18 ஆண்டுகளாக எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியும் என்பதற்கு இந்தியாவில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஜெயலலிதா ஒரு பாடமாகத் திகழ்கிறார். 
இப்படி ஒரு வழக்கு இந்தியாவில் நடந்ததே கிடையாது.   சிறப்பு நீதிமன்றம் செல்லாது என்றார் ஜெயலலிதா. சிறப்பு நீதிமன்றம் செல்லும் என்றது உச்சநீதிமன்றம்.  1500 பக்க குற்றப்பத்திரிக்கையை தமிழில் வேண்டும் என்றார் சசிகலா.   தமிழில் தருகிறோம் என்றது லஞ்ச ஒழிப்புத் துறை.    இன்னின்ன தகுதிகள் உள்ள நபர்கள் மொழிபெயர்த்தால்தான் மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்றார்கள்.   நீதிமன்றத்தால், தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  அந்த நியமனம் அத்தனையும் தற்காலிக நியமனங்கள்.   மொழிபெயர்ப்பு முடிந்தது.  மொழிபெயர்ப்பு செய்தவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று அடுத்த மனுவை தாக்கல் செய்தார் சமூக நீதி காத்த வீராங்கனையின் ஆருயிர்த் தோழி.  இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் மட்டுமே.  இது போல பல்வேறு எண்ணிலடங்கா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்தனை தடைகளையும் மீறி வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது 
2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தலைகீழாகியது வழக்கு. 
 அது வரை விசாரித்து முடிக்கப்பட்ட சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.    திமுக ஆட்சியில் உண்மையை பேசிய சாட்சிகள் அதிமுக ஆட்சியில் பல்டி அடித்தனர்.   நாங்கள் இப்படி சொல்லவேயில்லை என்றனர்.   சாட்சிகள் மிரட்டப்பட்டனர்.   ஜெயலலிதா சார்பாக சாட்சி சொல்லவில்லையென்றால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்று உயிர் பயம் காண்பிக்கப்பட்டது.  
இந்த பிறழ் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞர் ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.  இந்த அவலத்தையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய நீதிபதியோ, அதிமுக அடிமை போல தலையாட்டிக் கொண்டிருந்தார்.  இந்த அயோக்கியத்தனத்தின் உச்சமாக, வழக்கின் புலனாய்வு அதிகாரி நல்லமா நாயுடுவை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து அதிமுக வழக்கறிஞர்களும், அரசு வழக்கறிஞர்களும் அவமானப்படுத்தினர்.  மிரட்டினர், எள்ளி நகையாடினர்.  
ஜெயலலிதா ஆட்சிக்கு 2001ல் வந்ததும் ஏற்கனவே திமுக அரசால் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை மாற்றி அமைத்தார்.   இதனால் வழக்கு விசாரணை நின்று போனது.   நவம்பர் 2002ல் மீண்டும் விசாரணை தொடங்கியது.  
தகவல் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பிரிவு அலுவலர் தனது முந்தைய சாட்சியத்தில் 31.05.2000 அன்று சாட்சியம் அளிக்கையில், சசிகலாவின் கணவர் நடராஜன்  சமூக நலத்துறையில் விளம்பர உதவியாளராக 1970ம் ஆண்டு சேர்ந்தார் என்றும் 1976 வரை பணியில் இருந்தார் என்றும் அந்த பதவி 1976ல் ரத்து செய்யப்பட்டது என்றும், 1980ம் ஆண்டில் நடராஜன் மீண்டும் அதே பணியில் சேர்ந்து 1988ம் ஆண்டு துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார் என்றும் சாட்சியம் அளித்தார்.  நடராஜன் ஸ்கூட்டர் முன்பணம் பெற்றார் என்றும், பின்னர் கார் லோன் பெற்றார் என்றும் பின்னர் வீட்டுக் கடனாக 1.84 லட்சம் என்றும் சாட்சியம் அளித்திருந்தார்.  இவரின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்தது.   ஏனென்றால், சசிகலா ஒரு ஸ்கூட்டர் வாங்கக் கூட வக்கற்று இருந்தவரின் மனைவி என்பதுதான் இதன் சாராம்சம். இதே கிருஷ்ணமூர்த்தியை 07.11.2002 அன்று மீண்டும் விசாரித்தனர்.   அப்போது மீண்டும் அவர் குறுக்கு விசாரணை  செய்யப்படுகிறார். நடராஜன் ஸ்கூட்டர் லோன் வாங்கியதோ, வீட்டுக் கடன் வாங்கியதோ தனக்கு தெரியவே தெரியாதென்றார்.  வளர்ப்பு மகன் சுதாரகனுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்த மன்சூர் அகமது தனது இரண்டாவது சாட்சியத்தின்போது, நான் ஆடைகள் தைத்துக் கொடுக்கவே இல்லை என்றார்.  
ஜனவரி 2003ல் சாட்சியம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், தனது முந்தைய சாட்சியம், திமுக அரசு அளித்த நெருக்கடியால் கொடுக்கப்பட்டது என்றார்.  அப்போதும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர் மீது எந்த துறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   இதை விட சிறப்பு என்ன தெரியுமா.  ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்த ஒரு ஆடிட்டர் மீண்டும் சாட்சியம் அளித்தார். அவர் தனது இரண்டாவது சாட்சியத்தில் புரட்சித் தலைவி அம்மாவிடம் 1991 முதல் 1996 வரை ஏராளமான பணம் இருந்தது என்றார். எப்படி இவ்வளவு பணம் என்றால் பணம் இருந்தது என்றால் இருந்தது. அவ்வளவுதான் என்று சாட்சியம் அளித்தார்.  இதையும் நீதிபதி பதிவு செய்தார்.     
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 76 சாட்சிகள் மீண்டும் வரவழைக்கப்பட்டு மீண்டும் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, பிறழ் சாட்சிகளாக மாறுகிறார்கள்.    
நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஜெயலலிதா மற்றும் சசிகலா
விசாரணைகள் வேக வேகமாக முடிக்கப்பட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ் கேள்வி கேட்கப்பட வேண்டும்.  இந்தக் கேள்வி கேட்கப்படும் சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதிலிருந்து விலக்கு அளிக்கவே முடியாது.  
ஆனால் 24.02.2003 அன்று ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். தூததுக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருப்பதாகவும், மிகவும் களைப்பாக இருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போல இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாகவும், தற்போது நீதிமன்றம் வந்து கேள்விக்கு பதில் சொன்னால் உடல்நிலை மேலும் மோசமாக மாறி விடும் என்றும், அதனால் நேரில் வராமல், வழக்கறிஞர் மூலமாக கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்றும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.  
அதே நாளில் அந்த மங்குணி நீதிபதி, இந்த மனுவை அனுமதித்து, ஜெயலலிதா நேரில் வர வேண்டியதில்லை என்று உத்தரவிடுகிறார்.   
முக்கிய சாட்சிகள் அத்தனையும் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டு, வழக்கு தீர்ப்பை நோக்கி வெகு விரைவாக சென்று கொண்டிருந்த நிலையில்தான் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தை அணுகினார்.  உச்சநீதிமன்றம் 2003ம் ஆண்டு, 18 நவம்பர் 2003 அன்று இந்த வழக்கை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறது.  
அதன் பிறகு, அந்த வழக்கில் அரசு நியமித்த அரசு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா மிக மிக திறமையான முறையில் இந்த வழக்கை நடத்தினார்.  அந்த ஆச்சார்யாவுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு தொந்தரவுகளை கொடுத்து, ஆச்சார்யாவை பதவியை ராஜினாமா செய்ய வைத்து ஓட வைத்தார் ஜெயலலிதா.  இவருக்கு ஏற்ற வழக்கறிஞரான பவானி சிங்கை நியமிக்க வைத்தார்.  அப்போது கர்நாடக அரசு, இந்த நியமனத்தை எதிர்த்தபோது, ஜெயலலிதாவின் உதவிக்கு வந்தவர், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்.   அப்போது ஓய்வு பெற இருந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு அளித்து, அவரேதான் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.  
ஒரு குற்றவாளி, ஒரு வழக்கில் யார் அரசு வழக்கறிஞர், யார் நீதிபதி என்று முடிவுசெய்யும் ஒரு அவலமான சூழலில், அந்த மனுக்களையும் விசாரணைக்கு ஏற்று உத்தரவு பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம்.  ஜெயலலிதாவின் கைப்பாவையாக செயல்பட்ட பவானி சிங், தன் பங்குக்கு இந்த வழக்கை தாமதப்படுத்த, எனக்கு உடல் நிலை சரியில்லை, ஐ யம் சஃப்பரிங் ஃப்ரம் பீவர் என்று அவர் வழக்கை தாமதப்படுத்த, சிறப்பு நீதிபதி மைக்கேல், பவானி சிங்கின் ஊதியத்தை அபராதமாக விதித்தார்.   அப்போதும் சளைக்காமல் உச்சநீதிமன்றம் சென்றார் பவானி சிங்.   அப்போதும் உதவிக்கு வந்த சதாசிவம், பவானி சிங்கின் உடல் நிலை குணமாகும் வரை, நான்கு வாரத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க உதவி செய்தார்.
உச்சநீதிமன்றத்தை பீடித்திருந்த சதாசிவம் என்ற பீடை ஒழிந்த பிறகே, சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.  இப்படி 18 ஆண்டுகளாக பல்வேறு தடைகளையெல்லாம் தாண்டி, ஒரு வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருந்தால், அதுவும் தமிழக முதல்வர் குற்றவாளியாக உள்ள வழக்கில் எவ்வளவு பெரிய தலைப்பு செய்தி இது ?  எட்டாம் பக்கத்திலும், ஒன்பதாம் பக்கத்திலும் போட வேண்டிய செய்தியா இது ?
சரி.  இதே ஊடகங்கள் எல்லா ஊழல் வழக்கிலும் இதே அளவுகோலை பின்பற்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.  கனிமொழி கைதானபோது, இந்த ஊடகங்கள், கனிமொழியின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை, தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன. ஆ.ராசா ராஜினாமா செய்தபோது, தினமணி ராசாநாமா என்று முதல் பக்க செய்தி வெளியிட்டது.  ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் ஒரு நியாயம் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் வேறு நியாயம் ?
தலைப்பு செய்தியாக வெளியிட்டால், ஜெயலலிதா கழுத்தை சீவி விடுவாரா ? இல்லை கோபித்துக் கொள்வாரா ?
ஜெயலலிதாவின் மனம் புண்பட்டு விடக் கூடாதாம்.  காலையில் அவர் செய்தித்தாளைப் பார்க்கையில், முதல் பக்கத்தில் இந்த செய்தியைப் பார்த்தால் கோபம் வந்து விடுமாம்.   அதனால்தான் உள் பக்கங்களில்.  
இந்த ஊமை ஊடகங்களின் நாடகத்தைப் பார்த்தால், ஜெயலலிதா வீசும் விளம்பர எலும்புத்துண்டுகளுக்காக தங்கள் ஆன்மாவை விற்கத் தயங்காத ஊடகங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.   

கருத்துகள் இல்லை: