ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அரவிந்தரே உயிர்த்து வந்தாலும் கழுவ முடியாத பாவம் சூழ்ந்த அரவிந்தர் ஆஸ்ரம்?

- வா.மணிகண்டன் (எழுத்தாளர் )

லைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு செய்தி கடந்த சில நாட்களாக சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது,  அரவிந்தர் ஆசிரமத்தின் பிரச்னைகள்.
1926-ம் ஆண்டு அரவிந்தரால் புதுச்சேரியில் அமைக்கப்பட்ட ஆசிரமம், இப்பொழுதுதான் இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குகிறது. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் இளைய பெண்ணான ஹேமலதா கர்ப்பம் அடைந்ததுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என்று ஆசிரம நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த கிருஷ்ண பெல்லியப்பா என்பவருடன் ஹேமலதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், இது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், எல்லா செய்திகளுக்கும் இன்னொரு தரப்பு இருப்பதைப்போல, ஹேமலதாவின் குடும்பத்தினருக்கும் ஒரு தரப்பு இருக்கிறது. அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். நிர்வாகிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். உள்ளூர் அரசாங்கத்திலிருந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெண்கள் கமிஷன் என்ற எந்த இடத்திலும் அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. அவர்கள் முறையிட்ட ஒவ்வோர் இடமும், ‘நீங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்றே கெடு வைத்து உத்தரவிடுகிறார்கள்.  ஆசிரமம், பணம், அரசியல் சப்போர்ட், பாலியல் வக்கிரம், கொலை ! இந்த மாபியா கும்பலுக்கு அதிகார வர்க்கம் பாத பூஜை செய்திருக்கும் என்பதை யூகிக்க யாரும் ஒரு ஐன்ஸ்டீனாக இருக்க வேண்டியதில்லை ! பேசாம இழுத்து மூடுங்கப்பா உள்ளே போடுங்கப்பா


கெடு முடிந்தும் வெளியேற மறுக்கவே, போலீஸ் உதவியுடன் ஆசிரமம் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற, ஒரு பெண் உயரமான கட்டடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார். இதற்கெல்லாம் அசையாத ஆசிரமும் போலீஸாரும் நைஸாக பேசி, மடக்கி கைது செய்கிறார்கள். இதையடுத்து, இன்னும் இரு சகோதரிகள் தற்கொலைக்கு முயல அவர்களையும் காப்பாற்றுகிறார்கள். பிறகு, நடந்த பேச்சுவார்த்தையில்... ஆசிரமத்தைவிட்டே  பெற்றோருடன் வெளியேறுகிறார்கள் சகோதரிகள் ஐவரும். அன்றைய இரவே, குடும்பத்தோடு கடலில் குதித்துவிட்டார்கள்.

தவறு அந்தக் குடும்பத்தின் மீதாகவே இருக்கட்டும். ஆனால், வேறு துணை எதுவுமில்லாத ஒரு குடும்பத்தை வெளியேற்றும்போது அதற்கேற்ப அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டுமல்லவா? அந்தப் பெண்கள் ஆசிரமத்தைவிட்டு வெளியேறாமல் தற்கொலைக்கு முயற்சித்தபோதே அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ‘இவ்வளவு காலமாக தங்கியிருந்த ஒரு இடத்தை விட்டு வெளியேறச் சொன்னால் எங்கே போவது?’ என்கிற எமோஷனலான மனநிலையில்தான் இந்தத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

என்.ரங்கசாமியின் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதுதான் கேள்வி. புதுச்சேரியின் மிக முக்கியமான கலாச்சார மையமான அரவிந்தர் ஆசிரமத்தில் பிரச்னை எனும்போதே, யாரேனும் ஒரு சிறப்பு அதிகாரி அல்லது அமைச்சரின் வழியாக சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். பதினான்கு ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு பிரச்னை, இறுதிக்கட்டத்துக்கு வரும்போது சிறப்பு கவனத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். இரு தரப்புக்கும் என்ன பிரச்னை என்பதை சற்றேனும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் இதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

அநியாயமாக மூன்று பெண்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். மற்றவர்கள் தப்பியுள்ளனர். தப்பியவர்களில் ஒரு பெண்ணுக்கு, இன்னும் ஒரு கொடுமை நடந்திருக்கிறது. கடலில் குதித்து, அலையில் அடித்துவரப்பட்டு அதிகாலையில் கடலோரத்தில் அலங்கோலமாக ஒதுங்கிக் கிடந்த பெண்ணை, இரண்டு பேர் வன்புணர்ந்திருக்கிறார்கள். அந்தப் பெண் மயக்கத்தில் கிடந்திருப்பாள் போலிருக்கிறது. அந்த நேரத்தில் குடிபோதையில் வந்த இருவர், அந்தப் பெண் "தண்ணீர்... தண்ணீர்..!" என்று முணங்கியதைக் கேட்டு, இவர்கள் கையோடு எடுத்துச் சென்ற, சாராயத்தை வாயில் ஊற்றியிருக்கின்றனர். அதையடுத்து இருவரும் அந்தப் பெண்ணை நாசமாக்கியிருக்கிறார்கள்.

ஆக, ஒரு குடும்பத்தையே கந்தல் துணியாக்கி, வீசியிருக்கிறது இந்தச் சமூகம்.

புதுச்சேரியின் காவல்துறையில் பணியாற்றும் ஒரு நண்பரிடம் பேசினேன். ‘இவர்கள் பதினைந்து வருடங்களாக ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இதுவும் அப்படியான ஸ்டண்ட் என நினைத்துவிட்டோம்’ என்று அவர் சொன்னபோது படுஅதிர்ச்சியாக இருந்தது. நமது அரசாங்கமும் அதிகாரமட்டமும் இப்படித்தான் இருக்கின்றன. எல்லாவற்றிலும் முன்முடிவுகளோடுதான் செயல்படுகிறார்கள். ‘இவர்கள் இப்படித்தான்’ என்று முடிவு செய்துவிட்டுத்தான் பிரச்னையையே அணுகுகிறார்கள்.


அந்தக் குடும்பத்துக்குக் குறைந்தபட்சம் ஒரு கவுன்சலிங் கொடுத்திருக்கலாம் அப்படி கொடுக்காவிட்டிருந்தாலும் பரவாயில்லை. நிர்க்கதியான அந்தக் குடும்பத்தை அரசு காப்பகத்தில் ஓரிரண்டு வாரங்கள் தங்க அனுமதி கொடுத்திருக்கலாம். எதையுமே செய்யாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இனி காலத்துக்கும் இங்கேயே தங்கிவிடலாம் என்று குடும்பத்தோடு தங்கியிருந்தவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று அரசுத்தரப்பில், போலீஸ் தரப்பில் யாராவது ஒருவராவது சற்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா?

நாட்டில் பட்டப்பகலிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஓடும் ரயிலிலும், பேருந்திலும், சாலையிலும் சிதறடிக்கப்படுகிறார்கள். பட்டப்பகலில் பட்டாக்கத்தியைக் காட்டி, கழுத்திலும் காதிலும் இருக்கும் நகையை பறித்துச் செல்கிறார்கள். மத்தியான நேரத்தில் ஏ.டி.எம்-முக்குள் புகுந்து பெண்ணிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஐந்து மகள்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை எப்படி கருணையே இல்லாமல் வெளியேற்றினார்கள்?

ஆசிரம நிர்வாகிகளுக்கும் அந்த குடும்பத்துக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கட்டும். அரசு ஏன் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது? நிர்வாகிகளுக்கு ஜால்ரா தட்டுகிறார்களா... நிர்வாகிகள் சொல்வதுதான் சரி என்று தலையை ஆட்டுகிறார்களா?

‘அந்தக் குடும்பத்தின் மீது பரிதாபப்பட வேண்டாம். பதினான்கு ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்று கேஸ் நடத்தியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? அந்தக் குடும்பத்திடம் பணமும் இருக்கிறது; ஆள்பலமும் இருக்கிறது’ என்று ஆசிரமத்தின் ஒரு தரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கிறது. இப்படி ஒரே கோணத்தில் இருந்து பார்ப்பதுதான் சிக்கல். அரசாங்கமும்கூட இப்படியேதான் நினைத்திருக்கக் கூடும். வழக்கை இந்தக் குடும்பத்தினர்தான் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. ஆசிரமத்தின் தற்போதைய நிர்வாகத்துக்கான எதிர்தரப்பு, இவர்களைப் பகடைக் காயாகக்கூட பயன்படுத்தியிருக்கலாம். வழக்கின் செலவுக்கு தேவையான பணத்தை தாங்கள் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கலாம் அல்லது இந்தக் குடும்பம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில்- பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட- உண்மை இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை வெளிக் கொண்டுவருவதற்கு யாராவது பின்னணியிலிருந்து உதவியிருக்கலாம்.

எதுவாக இருந்தாலும், அரசு நினைத்திருந்தால் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றியிருக்க முடியுமே என்பதுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது. இந்த நாட்டின் அரசாங்கங்கள், வலியவர்களுக்கான அரசாங்கமாகவேதான் இருக்கின்றன. இங்கு எப்பொழுதுமே அதிகாரமும் பணமும் மிக்கவன் சொல்வதைத்தான் அரசாங்கமும் கேட்கும்; மக்களும் நம்புவார்கள். புதுச்சேரியின் இந்தச் சம்பவத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆசிரமத்துக்குள் அதிகாரப் போட்டி நடப்பதாகச் சொல்கிறார்கள். ஆசிரமத்தைக் கைப்பற்ற இரண்டு தரப்புகள் தீவிரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதில் ஒரு தரப்பு ஆசிரம நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டைச் சுமத்தச் சொல்லி, இந்தக் குடும்பத்தைத் தூண்டிவிடுவதாக இன்னொரு தரப்பு புகார் தெரிவிக்கிறது. இப்படி இரண்டு மலைகள் மோதிக்கொள்ளும் இடத்தில் ஒரு குடும்பம் நாசமாகிவிட்டது. இந்தப் பெருந்தலைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு புதுச்சேரியின் அரசாங்கமும் காவல்துறையும் சேற்றை தங்களின் கைகளில் பூசியிருக்கிறார்கள்.

ஆன்மிகத்தின் பெயரால் ஒரு குடும்பத்தை நிர்கதியாக்கியிருக்கிறார்கள். மூன்று பெண்களின் உயிரை எடுத்திருக்கிறார்கள். ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியிருக்கிறார்கள். இனி என்னதான் நடவடிக்கை எடுத்தாலும்- அது ஆசிரம் நிர்வாகிகள் மீதாக இருக்கட்டும், வன்புணர்ந்தவர்களின் மீதாக இருக்கட்டும்-. நூற்றாண்டு காணவிருக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரமத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கறை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை!.  news.vikatan.com

கருத்துகள் இல்லை: