ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மைனா கும்கி கயலை விட பிரபு சாலமன் இயேசு அழைக்கிறார் எடுக்கலாம்

கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து.. இந்திரனின் பொம்பள பொறுக்கித் தனத்தினால், அவனைக் கவுதம முனி, ‘உடலெல்லாம் பெண்குறியாகப் போகட்டும்’ என்று சபித்தான். அதுபோல் தமிழ் சினிமாவை, ‘காலம் முழுவதும் காதலை மட்டும் தான் சொல்லித் தொலைக்க வேண்டும். வேறு எதையாவது சொன்னாலும் அதையும் காதல் வழியாகத்தான் சொல்லவேண்டும்’ என்று எந்த முனிவன் சபித்தானோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச் சினிமாக்கள் எவ்வளவோ மாற்றங்களைக் கடந்து மக்களின் அரசியல், எளிய மக்களின் வாழ்க்கை; காதலன் – காதலி, கணவன் – மனைவி, சகோதர-சகோதரிகள், தாய் – மகன் இப்படியாக ‘ஆண்-பெண்’ உறவில் சமூகம் மற்றும் பொருளாதராத்தை ஒட்டி எழுகிற பிரச்சினைகள், மனப் பிரச்சினைகள், சிக்கல்கள், தீர்வுகள் என்று பயணிக்கிறது; ஆனால், தமிழ் சினிமாக்காரர்களோ, ‘காதல் கோடு’ தாண்ட முடியாமல் தவிக்கிறார்கள். இதிகாசகாலத்திலேயே, ‘பத்தினி சீதை’ கூடத் தன் ‘அவதாரபுருஷன்’ போட்ட ‘கோட்’ டை தாண்டியிருக்கிறார். இந்த நவீன காலத்தில் இதிகாசகாலத்தை விடப் பிற்போக்காக இருக்கிறார்கள் நம்ம சினிமாக்காரர்கள விடலைத் தனமான ரசிகர்களின், காதல் குறித்த அறியாமையை நியாயப்படுத்தி,
அதை இன்னும் மலினப்படுத்திச் சில்லரை சேர்க்கிற முறைதான் தமிழ் சினிமாவின் ‘காதல்’ யுக்தியாக இருக்கிறது.
இது வெறும் வியாபாரமாக மட்டும் முடிந்து விடுவதில்லை. அப்படிக் காட்டப்படுகிற முறையில் காதலை அணுகுகிற இளைஞர்கள், தன்னை விரும்பாத பெண்ணைக் காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்வதும்,
அநாகரீகமான முறையில் நடந்து கொண்டவனிடம் அந்தப் பெண் தன் வெறுப்பை, எதிர்ப்பை காட்டினாலோ அல்லது அவள் தனக்குப் பிடித்த ஒருவனை விரும்பினாலோ, பதிலுக்கு அவன் ‘ஆசிட்’ வீசுகிற அளவிற்கு ‘அன்பானவனாக’ மாறிவிடுகிறான்.
பல நேரங்களில் இப்படித் தொடர்ந்து அணுகுகிற முறையைத் தனக்கான பெருமைக்குரிய அங்கிகாரமாகக் கருதி, தன்னை விட வயதில் ‘அதிகம்’ மூத்த ஆண்களை நம்பி சீரழிந்துப் போன சிறுமிகளும் இருக்கிறார்கள்.
‘கயல்’; மனிதப் பேரழிவை நிகழ்த்திய சுனாமியால் பாதிக்கப்பட்ட, மீனவ மக்களின் துயரங்களுடன் அல்லது பிரச்சினைகளுடன் சொல்லப்பட்ட காதல் கதை, என்று நம்பி போனேன். ‘கயல்’ வார்த்தை மீனவக் குறியீடு என்பதாகவும் நினைத்து.
‘புலி மார்க்’ சீக்காய்த் தூளுக்கும் ‘புலி’ க்கும் எந்தத் தொடர்பு இல்லாததைப் போலவே, ‘கயல்’ திரைப்படத்திற்கும் மீனவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மீன் சாப்பிடுவது போல் ஒரு ‘ஷாட்’ கூட இல்லை.
அதுகூடப் பரவாயில்லை, சுனாமி என்ற அந்தக் கொடூரம் கூடக் காதலின் பிரிவைச் சொல்லும் முறையாகத் தான் காட்டப் பட்டிருக்கிறது.
படத்தில் சுனாமி பாதிப்பலிருந்து உயிர் பிழைத்தவர்கள், காதலன் – காதலி, நண்பன் அப்புறம் இவர்களைப் படம் பிடித்த கேமரா மேன். இந்த நாலுபேர்தான்.
சுனாமிக்கு சில விநாடிகள் முன்புதான் காணாமல் போன தன் காதலியை, அல்லது தன் காதலனை கண்டுப்பிடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பரவச சூழலில் நாயகனின் நண்பன், சிலுவையில் முத்தமிட்டு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறான். நன்றி சொன்ன உடனே, ஆண்டவர் சுனாமியை பரிசாகத் தருகிறார்.
அந்தப் பேரழிவுக்குப் பிறகு, பிரிந்த மூவரும் ஒன்று சேருகிறார்கள். கடற்கரையில் இருந்தவர்கள், குழந்தைகள், தங்களைச் சேர்ப்பதற்குத் துணையாக இருந்த பெண்கள் எல்லோரும் ‘கர்த்தருக்குள் நித்திரையான’ பிறகு பிழைத்த இந்த மூவர் மட்டும் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறார்கள்;
2004 ஆம் ஆண்டின் சுனாமியின் போது நூற்றுக்கணக்காணப் பக்தர்கள், வேளாங்கன்னி மாத கோயில் சுவற்றில் மோதி சிதறி செத்தப் பிறகும் ‘மாதாவிற்கு மகிமை’ இருப்பதாக நம்புகிற பக்தர்களைப்போலவே.
விடலைத் தன உணர்வை ‘இடி, மின்னல், மழை, இருதயம், சிறுநீரகம், கல்லீரல்’ என்று காதலாக நாயகன் பேசுகிற வசனம்; ஒரு பொறுப்பில்லாத பாட்டி சிறுமிக்கு காதலின் சிறப்புக் குறித்துச் சொல்லுகிற அற்பத்தனமான வசனங்களையும், சிறுமியின் புலம்பல்களையும் கேட்கும்போதும், மூவரையும் ஓங்கி அறையலாம்போல எரிச்சல் வருகிறது.
முதல் பகுதி வசனங்களில் நகைச்சுவையில் தெரிந்த புத்திசாலித்தனம், பின் பகுதியில், காதலின் சிறப்புகளைச் சொல்லும்போது அறியாமை தான் முந்தி நிற்கிறது. ஒரே விசயம் பிற்பகுதி முழுவதும் நீண்டு இழு இழு என்று இழுக்கிறது.
அது மட்டுமல்ல, இப்போது வருகிற படங்களில் முதல் பகுதி என்பது தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது. இடைவேளை வரை சொல்லப்படுகிற கதை, அதன் பிறகு பிற்பகுதியில் பயனற்ற ஒன்றாகவே மாறிவிடுகிறது. திரைக்கதை என்ற ஒன்றே இல்லை. முதல் பகுதி வேறு ஒரு படத்தின் நீண்ட டிரைலர் போல.
‘ஒவ்வொரு காட்சிக்கும் மற்றக் காட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது’ என்கிற அளவிற்கு மிகச் சிறப்பான திரைக்கதை அமைப்பது எப்படி? என்பதை இப்போது வந்திருக்கிற ராஜ்குமார் ஹிராணியின் ‘PK’ படத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். பழைய, பாக்கியராஜ், பாண்டியராஜன் படங்களிலும் திரைக்கதை யுக்தி சிறப்பாகவே இருக்கும்.
இதுபோன்ற காதல் படங்களை விட, பக்தி படங்களே எவ்வளவோ பராவியல்லை.
‘மைனா’ ‘கும்கி’ ‘கயல்’ போன்ற படங்களை எடுப்பதைவிட இயக்குநர் பிரபு சாலமன் ‘இயேசு அழைக்கிறார்’ போன்ற படங்களை எடுப்பது நிச்சயம் முற்போக்கானது. அவருக்கும் கொள்கை சார்ந்த மன நிறைவை தருவதாகவும் இருக்கும். mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: