ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது ஏன்?

தமிழகத்தில் பிளஸ் 2விற்குப் பின்னர் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்வி கற்கவே அதிக ஆர்வம் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இளம் இன்ஜினியர்களை உருவாக்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கும் அளவிற்கு இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ளன.தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்வி முடித்த பல்லாயிரம் பேர் இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் வேலை வாய்ப்பு பெற்று பணியாற்றி வருகின்றனர். இக்கல்விக்கு கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிலை தலைகீழாக மாறிவருகிறது.குறிப்பாக அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக கல்வித்தரம், ரிசல்ட், ரேங்க் போன்றவற்றில் சிறந்த சாதனை படைக்கும் தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு மட்டுமே கடும் கிராக்கி நீடிக்கிறது. ரிசல்ட் குறையும் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு மாணவர்கள் சேர்வது குறையத்தொடங்கி உள்ளது.


தமிழகத்தின் எந்த நெடுஞ்சாலையில் சென்றாலும் சாலை ஓரங்களில் மரங்கள் இருக்கின்றனவோ இல்லையோ குறிப்பிட்ட தூர இடைவெளியில் பிரமாண்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் கண்களுக்கு தென்படும் அளவிற்கு அதிகரித்துள்ளன. புற்றீசல் போல் இன்ஜினியரிங் கல்லூரிகள் தோன்றினாலும் கல்வித்தரம் மிக்க கல்லூரிகளுக்கு மட்டுமே கிராக்கி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு இது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.பொறியியல் கல்வி பயில மாணவர்களிடம் உண்மையிலேயே ஆர்வம் குறைந்திருக்கிறதா என்பது குறித்து தென்மண்டல தனியார் சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்க தலைவர் முகம்மது ஜலில் கூறியதாவது:சில சிறந்த கல்லூரிகளில் கடந்த ஆண்டைவிட மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு சில கல்லூரிகளில் எண்ணிக்கை குறைவாக உள்ளது உண்மைதான். இதற்கான காரணங்கள் குறித்து நிர்வாகங்கள் ஆலோசனை நடத்துகிறோம்.

குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பெரிய அளவில் தொழில் களை தமிழகத்தில் உருவாக்கித்தரவில்லை. மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்து புதிய தொழில் கொள்கைகளை உருவாக்கும் போது இன்ஜினியரிங் மாணவர்களுக்குத்தான் முதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் தொழில்கள் தொடங்க எல்லா விதத்திலும் வசதிகள் உள்ளன.தற்போது புதிய மத்திய அரசு தொழில்களை தொடங்குவதில் நிச்சயம் ஆர்வம் காட்டும் என நம்புகிறோம். இதன் பலன் அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்கும். எனவே இப்போது புதிதாக இன்ஜினியரிங் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிக்கும் போது அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்ததாக வங்கிகள் கல்விக் கடன் வழங்க தயங்குகின்றன. தொழில் அதிபர்களுக்கு ரூ.30 லட்சம் கோடிவரை கடன் வழங்கும் வங்கிகள் மாணவர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க தயங்குகின்றன. சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்ற நிலையை மேம்படுத்த உயர்கல்வியில் பொறியியல் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகளை அரசுகள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: