அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட்
மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:
" "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற புறநானூற்று வரிகளுக்கு செயல்வடிவம்
கொடுக்கும் வகையில், அறிவியல் யுகத்தில் அளப்பரிய வளர்ச்சியினை பெற்று
இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை
விரைந்து வழங்கி வருகின்ற எனது தலைமையிலான அரசு, அதனை மேலும்
மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுத்து வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் கீழ்க்காணும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த
அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற
மகிழ்ச்சிஅடைகிறேன்.
தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலையை உயர்த்த...
தமிழ்நாடு மாநில தரவு மையம் (Tamil Nadu State Data Centre) தற்போது
வணிகவரித் துறை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், சென்னை மாநகராட்சி,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட 15-க்கும்
மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களின் கணினி சார்ந்த தேவைகளை
வழங்கி வருகிறது.
இன்னும் பல அரசுத் துறைகள் தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை
அதிக அளவில் பொதுமக்களுக்கு அளித்திட முனைந்து வரும் இத்தருணத்தில்,
தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தற்போதுள்ள உட்கட்டமைப்புவசதிகள்
இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. அரசுத் துறைகளின்
அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, 5,000
சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் ஒன்று கட்டி, அதில் 40 அடுக்குகளை,
Racksஅமைத்து 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலை
உயர்த்தப்படும்.
ரூ.5 கோடியில் பேரிடர் தரவு மீட்பு மையம்
மின்ஆளுமைக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகளை தடையில்லாமல் வழங்குதல் அவசியமான
ஒன்றாகும். ஆனால், இயற்கை சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவை தரவு மைய
பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளன. எனவே, இச்சேவைகளுக்கான தரவுகளை பேரிடர்
மீட்பு மையம் தவிர மாநகரில் உள்ள வேறு ஒரு இடத்திலும் நகல் ஏற்றுவது
அவசியமாகும். அரசின் மின்னாளுமை சேவைகளுக்கான தரவுகளை, மாநில தரவு
மையத்திலிருந்து உடனுக்குடன் மற்றொரு இடத்தில் நகல் ஏற்றம் செய்யும்
பொருட்டு, 1,250 சதுர அடி பரப்பளவில் ஒரு பேரிடர் தரவு மீட்பு மையம்,
அதாவது Near Line Disaster Recovery Centre 5 கோடி ரூபாய் செலவில்
அமைக்கப்படும்.
ரூ.1 கோடியில் மின்னஞ்சல் தொகுப்பு
தமிழக அரசு "tn.gov.in" என்ற இணைய வரம்பில், Domain Name-ல் அலுவல்சார்
தொடர்புக்கான மின்அஞ்சல் முகவரிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணைய
பாதுகாப்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் அரசு துறை தகவல்களின் ரகசியத் தன்மை
ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசுத் துறைகள் மற்றும் அரசு துறை
அலுவலர்களின் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகளையும், மின்னஞ்சல்களையும்
நிர்வகிக்க ஒரு திடமான, கட்டுறுதியான மின்னஞ்சல் தொகுப்பினை தமிழ்நாடு
மாநில தரவு மையத்தில் செயல்படுத்துவது அவசியமாகிறது. சிறந்த, விரைவான,
பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட மின்னஞ்சல் தொடர்பினை பல்வேறு இயங்கு
தள உதவியுடன் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மின்னஞ்சல் தொகுப்பு
ஒன்று 1 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில்
செயல்படுத்தப்படும்.
இலவச மடிக்கணியை சிறந்த முறையில் பயன்படுத்த...
தமிழ்நாடு முழுவதும், இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள்
மாணவ, மாணவியருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இம்மடிக்கணினிகளை சிறந்த
முறையில் உபயோகப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப வளங்களை குறைந்த
கட்டணத்தில் வழங்குவது அவசியமாகிறது. இளைஞர்களின் தொழில் முனையும் திறனை
மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும்,
மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான மேகக் கணினி சார்ந்த
சேவைகள், அதாவது Cloud Services மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள், அதாவது
Web-hosting Services ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம் 50
லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
இணையவழி களஞ்சியம்
உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், வல்லுநர்கள், மாணவர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து இணைய வழி பங்காற்றி
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தமிழர், தமிழ் மொழி மற்றும் தமிழ்
இலக்கியத்தின் சாதனைகளை உள்ளடக்கிய தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டுக்கான
விரிவான இணையவழி களஞ்சியம் ஒன்று தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால்
உருவாக்கப்படும். முதற்கட்டமாக இதற்கு 20 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கப்படும்.
அரசு கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் சேவை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத
சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டி.வி.
ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள்,
அதாவது Broadband Services மற்றும் இதர இணையதள சேவைகள், அதாவது Internet
Services ஆகியவற்றையும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இனி
வழங்கும். அகண்ட அலைவரிசை உரிமங்கள் பெற்று உள்ளவர்களுடன் இணைந்து
வழங்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பத்தின்
கூடுதல் பயனை பொதுமக்களும், அரசுத் துறைகளும் அடைய வழிவகுக்கும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழ் .ஹிந்து .com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக