வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஆயுத கொள்வனவில் ரஷ்யாவுக்கு டாட்டா ! அமெரிக்காவுக்கு செங்கம்பளம் ! இதுதாண்டா மோடி !

ஒபாமா, மோடி
லகின் ஒற்றைத் துருவ அமெரிக்க வல்லரசு, நாளைய ‘வல்லரசு’ கனவில் மிதக்கும் மோடியின் இந்திய அரசை துரத்தி துரத்தி தனது காதல் வலையை வீசிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு பதவியேற்ற பிறகான கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர். கடந்த இரண்டரை மாதங்களில் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் 13 பேர் புது தில்லிக்கு வந்து புதிய அரசை சீராட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.
அதுவும் ஜூலை 31 முதலான 8 நாட்களில் பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவு என ஒபாமாவின் மூன்று மூத்த அமைச்சர்கள் இந்தியாவுக்கு அணி வகுத்து வந்திருக்கின்றனர். இவர்களில் கடைசியாக வந்தவர் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தலைமையிலான அதிகாரிகள் குழு என்பது தற்செயலானது இல்லை.

ஹேகலுக்கு முன்பு ஜூலை 31 முதல் மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கரும் பெருவாரியான அதிகாரிகள் பட்டாளத்துடன் டெல்லி வந்திருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கும் இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை மேலும் முடுக்கி விடுவது, சுங்க நடைமுறைகளை தளர்த்துவதற்கான உலக வர்த்தகக் கழகத்தின் சமீபத்திய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க வேண்டியதன் அவசியம் பற்றி பேசி விட்டு போனார்கள்.
மோடி பிரதமராவது உறுதியானதும், மோடிக்கு விசா மறுத்து எரிச்சலூட்டிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை உடனடியாக மூட்டை கட்டி அனுப்பினார்கள். 10 ஆண்டுகளாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருந்த மோடி இந்திய பிரதமர் ஆனதும், அதிபர் ஒபாமா அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மோடி அரசு பதவி ஏற்ற 10 நாட்களுக்குள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இந்தியா வந்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அவரது தஜ்கிஸ்தான், சீனா பயணங்களுக்கு மத்தியில், வரலாறு காணாத வகையில் இந்துத்துவ பிரதமராக பதவியேற்றிருந்த மோடியின் புத்தம் புதிய அரசை எடை போட்டு பார்க்க டெல்லிக்கும் ஒரு நடை வந்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் தொரைசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்திச் சென்றார்.
Rajnath_Singh_US_Deputy_Secy_State_William_Burns
சுதேசி ராஜ்நாத்சிங் விதேசி வில்லியம் பர்ன்சுடன்
அமெரிக்க வெளியுறவுத் துறையில் நிஷா பிஸ்வாலுக்கு மூத்தவரான துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் ஜூலை 2-வது வாரம் டெல்லிக்கு நேரில் வந்தார். மோடியை செப்டம்பர் மாதம் அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமாவின் அழைப்பை தனிப்பட்ட முறையில் கையளித்தார். இதன் மூலம் ஜூலை இறுதியில் வரவிருந்த ஜான் கெர்ரியின் ராணுவ நட்புறவு பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் ஏற்படுத்தினார். பெரும் விலைக்கு விற்கப்படும் தனது ராணுவ நட்புறவை இந்தியா மீது மேலும் சுமத்துவதற்காக அமெரிக்காவின் இந்திய படையெடுப்பு தொடர்ந்தது.
ஜூலை மாத இறுதியில் இந்தியா வந்து சேர்ந்த ஜான் கெர்ரி, பென்னி பிரிட்ஸ்கர் குழுவினர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து அமெரிக்க – இந்திய பாதுகாப்பு நட்புறவு உரையாடல் கூட்டத்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், “இந்தியர்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று சுஸ்மா சுவராஜ் கூறியதாக தலைப்புச் செய்திகள் வெளியாகின. அதைக் கூட பெருந்தன்மையாக சகித்துக் கொண்டு அனுமதித்தது அமெரிக்கத் தரப்பு. பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இந்த காமெடி செய்திகள்தானா பிரச்சனை?
ஜான் கெர்ரி நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியுடனும் பிரிட்ஸ்கர் வர்த்தத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்தித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது குறித்து விளக்கினார் கெர்ரி. இறுதியாக பிரதமர் மோடியை சந்தித்தார். தன்னை சந்திக்க மோடி கடைசி நேரத்தில்தான் ஒத்துக் கொண்டது கெர்ரியை வருத்தமடைய செய்தது என்று பெரியண்ணனையே நம்ம அண்ணன் காக்க வைத்து விட்டார் என்று பூரித்தன இந்திய ஊடகங்கள்.
ஜான் கெர்ரி
ஜான் கெர்ரி – பல பில்லியன் டாலர் ஆயுத விற்பனை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது காமெடி செய்திகள்தானா பிரச்சனை?
மேலும், உலக வர்த்தகக் கழகத்தின் புதிய ஒப்பந்தமான, சுங்க விதிகளை தளர்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று மறுத்து, இந்திய மக்களின் நலன்களை பாதுகாப்பது தன்னைப் போன்ற உறுதியான தலைவரால்தான் முடியுமென மோடி நிரூபித்ததாக அவரது அடிப்பொடிகள் போற்றி மகிழ்ந்தனர்.
‘காசா முதல் உக்ரைன் வரை, சீனா முதல் ஆஸ்திரேலியா வரை அமெரிக்க அரசுக்கு உலகை பரிபாலிக்கும் ஆயிரம் பொறுப்புகள் இருக்கும் போது அமெரிக்கா இப்படி முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவை பாராட்ட வைத்த உறுதியான தலைவர் மோடி. இந்தியா உறுதியாக இருந்தால்தான் உலகம் நம்மை மதிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது’வென மோடி பக்தர்கள் உள்ளம் பூரித்து போகின்றனர். ஆனால், போதுமான தேவைகள் இல்லாமல் அமெரிக்க அங்கிளின் தொப்பி ஒரு பக்கமாக சரிவதில்லை.
அமெரிக்க நிறுவனங்கள் மலிவு விலையில் உற்பத்தித் தளம் அமைத்துக் கொள்ளவும், மூலதனமிட்டு லாபம், வட்டி, உரிமத் தொகை என்று அள்ளிச் செல்லவும் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் காரணங்களோடு, 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளிலேயே அதிக அளவு ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்பதுதான் அமெரிக்க காதல் சீராட்டலின் அடிப்படை.
குடியரசு தின பேரணி
டெல்லியில் பேரணியில் விடப்படும் ஆயுதங்கள்
ஒவ்வொரு ஆண்டும் உலகின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 10% இந்தியாவுக்கு வந்து சேருகிறது. இவ்வளவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதன் மூலம் இந்தியா ராணுவ வல்லரசாகப் போகிறது என்று இந்துத்துவவாதிகள் கதை கட்டலாம். ஆனால், இந்தியாவின் ஆயுத ஒப்பந்தங்கள் இடைத்தரகர்கள் பல நூறு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கும், ஆயுத விற்பனை செய்யும் நாடுகளின் விருப்பத்திற்கும் ஏற்றபடிதான் போடப்படுகின்றன. அப்படி வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்ற நாட்டை சார்ந்தே இந்திய ஆளும் வர்க்கங்கள் இருக்க வேண்டியிருக்கிறது. அடுக்கி வைத்து ஆளும் வர்க்கங்கள் அழகு பார்க்கவும், டெல்லியில் பேரணி நடத்தவும் மட்டுமே இந்த ஆயுதங்கள் பயன்படும். இது இன்னொரு கோணத்திலும் உண்மையாக உள்ளது.
“இந்தியாவுக்கு அமெரிக்கா தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே விற்கிறது, முன்பு ரசியாவிடம் வாங்கியது போல தாக்குதல் ஆயுதங்களை விற்பதில்லை” என்கிறார் பாதுகாப்புத் துறை வல்லுனர் பிரம்மா செல்லானி. “மேலும், இந்தியாவுடன் 2009 முதல் பாதுகாப்பு நட்புறவு உரையாடல் நடத்தி வரும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் 2004 முதல் பாதுகாப்பு உடன்பாடும், 2006 முதல் ராணுவ நட்புறவு உரையாடலும் நடத்தி வருகிறது. சீனாவுடன் 1997 முதல் ஆக்கபூர்வமான நட்புறவு உரையாடலை பராமரித்து வருகிறது”. இப்படி அனைத்து தரப்புகளுக்கும் ஆயுதம் விற்பதுதான் அமெரிக்க ராணுவ தந்திரம்.
ரசியாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் திரும்பியது அமெரிக்க ஆயுதத் துறைக்கு புதிய போனஸ் ஆக இருந்தது. 1970-களில் எகிப்திய அரசு, ரசிய வாடிக்கையாளராக இருந்ததை மாற்றி அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்ததற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது இது என்கிறார் பிரம்மா செல்லானி. எகிப்து அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கு கூட அமெரிக்க அரசு தானே நிதி உதவி அளிக்க வேண்டியிருந்தது. ஆனால், ‘உப்பு போட்டு தின்னும்’ இந்திய ஆளும் வர்க்கமோ, இந்திய மக்களின் பணத்தை ரொக்கமாகவே கொடுத்து அமெரிக்க ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன. எனவே, இந்தியாவுக்கு விற்பது அமெரிக்காவுக்கு வணிக ரீதியில் மேலும் விருப்பமானதாக இருக்கிறது.
கலாம், புஷ், மன்மோகன்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுத விற்பனையாளர்களில் ரசியாவையும் இசுரேலையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆயுத விற்பனையாளர்களில் ரசியாவையும் இசுரேலையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்திருக்கிறது. அணுஉலைகளை விற்பது குறிப்பிடத்தக்க அளவு நடக்கவிட்டாலும் 2005-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பான வாக்குறுதியாக சேர்க்கப்பட்டிருந்த ஆயுத விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
10 ஆண்டுகளுக்கு $10 கோடியாக (ரூ 6,00 கோடி) இருந்த அமெரிக்காவின் ஆயுத விற்பனை இப்போது பல நூறு கோடி டாலர்கள் மதிப்பை தாண்டியிருக்கிறது.
சென்ற ஆண்டு செப்டம்பரில் இந்திய – அமெரிக்க உறவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக சித்தரிக்கப்பட்ட தேவயானி கோப்ரகடே விவகாரம் சூடுபறந்து கொண்டிருந்த போது, அமெரிக்க அரசை எதிர்த்து இந்திய ‘தேசமே’ வீரச்சவடால்கள் அடித்துக் கொண்டிருந்த போது மன்மோகன் அரசு $101 கோடி (சுமார் ரூ 6,000 கோடி) சி-130ஜே ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தத்தை ஒபாமா அரசுக்கு பரிசாக வழங்கியது. முன்னதாக, செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமாவை சந்தித்த போது கொண்டு போன பரிசுப் பொருட்களில் $500 கோடி (சுமார் ரூ 30,000 கோடி) மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கும் ஒப்பந்தமும் இருந்தது.
சென்ற ஆண்டு  இந்திய அரசின் இணைய பாதுகாப்புத் துறை அமெரிக்காவிலிருந்து $190 கோடி மதிப்பிலான தளவாடங்களை இறக்குமதி செய்து அமெரிக்க ஆயுதங்களை வாங்கிய மிகப்பெரிய வெளிநாட்டு வாடிக்கையாளர் என்ற பெருமையை சாதித்திருந்தது.
சக் ஹேகல்
“இந்தியா அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதில் சட்ட, நிர்வாக நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது”
தேவயானி விவகாரம், மோடியின் உரசப்பட்ட தன்மானம், மன்மோகன் போன்று ஒரு தொலைபேசி அழைப்பில் அமெரிக்க தேவைகளை சாதிக்க முடியாத மோடியின் இந்துத்துவ உறுதி, மன்மோகன் அரசை விட பல மடங்கு மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை வாரி வழங்கத் தயாராக இருக்கும் மோடி பாணி ‘வளர்ச்சி’ இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும் அமெரிக்க அரசு தனது கவரும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
இருதரப்பு உறவுகளில் இருந்த இத்தகைய முணுமுணுப்புகளை வர்த்தகத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரிகள வந்து சீர் செய்த பிறகு, வந்து இறங்கியது பீரங்கி வண்டி. மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல், “இந்தியா அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவதில் சட்ட, நிர்வாக நடைமுறைகள் தடையாக இருக்கக் கூடாது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் கூறுவதை வரை காத்திருக்காமல், பாதுகாப்புத் துறையில் 49% வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மோடி அமைச்சரவை ஏற்கனவே எடுத்திருந்தது. “அந்த முடிவு இந்திய – அமெரிக்க ராணுவ உறவு முழு பரிமாணத்தை எட்ட உதவும்” என்று சக் ஹேகல் மோடி அரசின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.
ஈராக் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும் நெருக்கடியான சூழலில் இந்தியாவில் இருந்த சக் ஹேகல், நடுவில் அமெரிக்க உயர் மட்ட குழு கூட்டத்தில் தொலை தொடர்பு மூலம் கலந்து கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு இந்தியப் பயணம் அமெரிக்க ஆயுதத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இவ்வளவு சிரமத்துக்கிடையே இந்தியா வந்திருந்த அவர், “இந்திய அமெரிக்கக் கூட்டுறவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், தொட்டறியத்தக்க பலன்களை தருவதாகவும், குறிப்பிடத்தக்க சாதனைகளை நோக்கியும் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதாவது, இந்தியா அப்பச்சே மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனங்களுக்கு $140 கோடி (சுமார் ரூ 8,400 கோடி) வருமானத்தை ஈட்டித் தரும் தொட்டறியத்தக்க பலனாக இருக்கும்.
குறிப்பான பலனளிக்க காத்திருக்கும் இன்னொரு சாதனை அடுத்த தலைமுறை ஜாவ்லின் பீரங்கி வண்டி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வாங்கும் ஒப்பந்தங்களை மோடி அரசு நிறைவேற்றி கொடுப்பது. அது குறித்தும் சக் ஹேகல் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, தெற்காசியாவில் இந்தியாவை அமெரிக்க அடியாளாக உறுதி செய்து விட்டு, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு நட்புறவு உரையாடல் நடத்த போயிருக்கிறார் சக் ஹேகல்.
மோடி தர்பார்
மோடி சுல்தானின் தர்பாரில் அமெரிக்க பாதுஷாவின் பிரதிநிதிகள்
மேலும் மேலும் தாகத்துடன் புதுப் புது ஆயுதச் சந்தைகளை தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்திய ஆளும் அதிகார தரகர்கள் தலையில் மேலும் மேலும் அதிக விலையிலான பளபளப்பான ஆயுதங்களை திணித்து இந்திய மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் செல்ல ஆர்வமாக உள்ளது. இதை சாதிப்பதற்கு மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவுடன் அதிக எண்ணிக்கையிலான கூட்டு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நடத்துகிறது. அதன் மூலம் அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு சாதகமான அரசியல் மற்றும் தொழில்நுட்ப சூழலை உருவாக்கித் தருகிறது.
இந்தியா அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் பெருமளவுக்கு போட்டியில்லாமல் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் மூலம் முடிக்கப்படுகின்றன என்கிறார் செல்லானி. 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போட்டி விற்பனை முறையில் அழைக்கப்பட்ட போது அமெரிக்க நிறுவனங்கள் ஒன்று கூட தகுதி பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அவர். இதிலிருந்தே அமெரிக்க நிறுவனங்கள் இந்திய அரசை எவ்வளவு மொட்டை அடிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களின் மதிப்பு, அமெரிக்கா இசுரேலைத் தவிர்த்த எந்த ஒரு நாட்டுக்கும் வழங்கும் மானிய உதவியை விட அதிகமானதாகும். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மானியமாக ஆயுதங்களை தருகிறது. அதன் மூலம் இந்தியாவை கூடுதல் ஆயுதங்களை வாங்கத் தூண்டுவதோடு, பாகிஸ்தான் போன்ற சர்வ மானிய ஆயுத வழங்கல்களுக்கான செலவுகளையும் இந்தியா போன்ற போலி வல்லரசு கனவு நாடுகளிடம் வசூலித்துக் கொள்கிறது.
இந்திய ஆளும் வர்க்கங்களோ தேச வேறி, போர் வெறி என்று சவடால் அடித்து மக்கள் பணத்தை ஆயுத பேரங்களில் அள்ளி விடுகின்றனர்.
இந்தியாவில் கூட்டு உற்பத்தி சாலைகளை அமைப்பதன் மூலம் ஆயுத உற்பத்தியில் தற்சார்பை எட்டுவோம் என்று மோடி சவடால் அடிக்கிறார். ஆனால், கொடுப்பவன் மனம் வைத்தால்தானே எடுப்பவன் பெற்றுக் கொள்ள முடியும். அமெரிக்காவோ, ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை போன்ற சாதாரண ரகங்களுக்கான கூட்டு உற்பத்தியை காரட்டாக தொங்க விட்டு, இன்னும் பெரிய தொகையிலான ஆயுத தளவாடங்களை  இந்தியாவின் தலையில் கட்ட திட்டம் தீட்டி வருகிறது.
அடுத்த மாதம் மோடி அமெரிக்கா போகும் போது, இந்திய நலன்களை அமெரிக்காவிடம் மேலும் விற்பதற்கான உச்சகட்ட உடன்பாடுகளுக்கான தயாரிப்புகள் அமெரிக்க அதிகாரிகளால் கடந்த சில வாரங்களில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன
தேசம் விலை போய்க் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
- பண்பரசுvinavu.com 

கருத்துகள் இல்லை: