செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தெலங்கானாவில் சடுதியாக குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு ? மக்கள் திகைப்பு ! ஊருக்கு படையெடுப்பு !


மும்பை : தெலங்கானாவில் நடைபெறவுள்ள “தீவிர குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு“ பணி வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது பெயர் பதிவு செய்தால் மட்டுமே அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியும் என்பதால், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தெலங்கானா மக்கள், சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.சமீபத்தில் உருவான தெலங்கானா மாநிலத்தில் “தீவிர குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு“ வரும் 19¢ தேதி நடைபெறும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்தார்.“வரும் 19ம் தேதி வீடு வாரியாக, கணக்கெடுப்பு நடைபெறும். இதில், தங்களை பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முடியும். அவர்களுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் மாநில அரசு செயல்படுத்தவுள்ள மானியங்கள், ரேஷன், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், கட்டண சலுகைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்“ என்று சந்திரசேகர ராவ் அறிவித்தார்.


இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வெளி மாநிலங்களில் பணிபுரியும், தற்போது வசித்து வரும் லட்சக்கணக்கான தெலங்கானா மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான தெலங்கானாவினர் உள்ளனர். மும்பை நகரில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தெலங்கானாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.வரும் 18ம் தேதிவரை, மும்பையிலிருந்து தெலங்கானா செல்லும் அனைத்து பஸ்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. கூடுதல் பேருந்துகளை இயக்க ஆம்னி பஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆந்திர அரசுப் பேருந்துகளிலும், இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து தெலங்கானா செல்லும் ரயில்களிலும், டிக்கெட்டுகள் இல்லை. இதனால், வெளிமாநிலங்களில் உள்ள முதியவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சிரமங்களை கருத்தில் கொண்டு, வரும் 18ம் தேதிவரை கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என, வெளி மாநிலங்களில் வசிக்கும் தெலங்கானாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கணக்கெடுப்பின்போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரோ அல்லது இருவரோ தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும். தங்களது குடும்பத்தின் மற்ற நபர்கள் குறித்த ஆவணங்களை அளித்து, அவர்களது பெயரையும் பதிவு செய்து கொள்ளலாம்.dinakaran.com 

கருத்துகள் இல்லை: