வெள்ளி, 4 ஜூலை, 2014

அடடே இந்த ஆளை இந்த அளவு நம்புனமா ?

மோடி மாயை 1

தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெருங்கூட்டம் இணைய வெளியில் மோடி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால், எதிர்ப் படுபவர்களில் பாதிபேர் ஏதோ ஒரு மல்டிலெவல் மார்கெட்டிங்கில் சேர்ந்து, நம்மையும் அந்தப் படுகுழிக்கு இழுக்க முயன்றதைப்போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் மோடிக்காக ஒரு பெரும் ஆள் சேர்ப்பு நடந்தது. “நீங்கள் இன்னுமா மோடியை ஆதரிக்க மறுக்கிறீர்கள்?” என மிடில் கிளாஸ் தேசபக்தர்கள் கேள்வியெழுப்பினார்கள். மோடியை ஆதரிக்காமல் இருப்பது தேசவிரோதம் எனுமளவுக்கு திமிர்வாதம் புரிந்தார்கள் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள்.

அம்பிகள், அம்பானிகள் மற்றும் அமித் ஷா கூட்டணியானது, தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெருவெற்றி பெற்றுவிட்டது. ஆனால் அதனை கொண்டாடித் தீர்க்க வேண்டிய தேசபக்தர்களோ, கள்ளக்காதலி வீட்டில் கடிகாரத்தை தொலைத்தவனைப்போல சொல்ல இயலாத சங்கடத்தில் தவிக்கிறார்கள். கெட்ட நண்பர்களில் சகவாசத்தால் இளமையில் தவறான வழிக்கு சென்று மோடியை முக்கி முக்கி ஆதரித்த ஃபேஸ்புக் பிரச்சாரகர்கள் பலர், மோடிஜியின் ஒருமாத கசப்பு மருந்திலேயே கலங்கி நிற்கிறார்கள்.
இத்தனைக்கும் “இந்தியாவின் சூப்பர்மேன், தெற்காசியாவின் டோரிமான், அகில உலக சோட்டாபீம்” மோடி அவர்கள் இன்னும் தனது டிரீட்மெண்டை ஆரம்பிக்கவே இல்லை. குனிய வைத்ததற்கே தினத்தந்தி வாசகர்களில் 61 சதவிகிதம்பேர் அரசின்மீது அதிருப்தி கொண்டுவிட்டார்களாம். கும்பிபாகத்துக்குப் பிறகு இவர்கள் என்ன கதியாவார்கள் என நினைக்கும்போதே நம் நெஞ்சம் நடுங்குகிறது.
“அளவுக்கு மீறி ஆதரித்து விட்டோமோ” எனும் கவலையில் இருக்கும் பலர் “ஃபேக் ஐடி ஆரம்பித்து மோடியை எதிர்க்கலாமா?” எனும் யோசனையில் இருப்பதாகக் கேள்வி. ஃபேக் ஐடிக்களால் ஆராதிக்கப்பட்ட மோடி, அதே ஃபேக் ஐடிக்களால் கழுவி ஊற்றப்படவேண்டுமென அந்த இறைவன் விரும்பினால் அதை யாரால் மாற்ற முடியும்? ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுள் மெம்பர் ரங்கராஜ் பாண்டேவும் மோடியின் தாசானு தாசர் வைத்தி மாமாவும் ஒரு மாதத்துக்குள் மோடி அரசாங்கத்துக்கு எதிராக பேசவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமக்கு வருமென கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
மோடி பிரதமரானால், பொருளாதார வல்லுனர்களுக்கே தண்ணி காட்டும் பணவீக்கப் பிரச்சனைமுதல் மூத்திரசந்துகளில் ஒட்டப்படும் விரைவீக்க பிரச்சனை வரை சகலமும் தீர்ந்து விடும் என சத்தியம் செய்த வல்லுனர்கள் அத்தனை பேருமே, சொல்லி வைத்தாற் போல “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்கள்.
மோடி மாயை 2
அல்லேலுயா கூட்டங்களுக்கும் மோடி வாலாக்களின் கூட்டங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை!
வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, ஆட்சிக்கு வந்த உடனே தன் வார்த்தையை காப்பாற்றும் முயற்சியை ஆரம்பித்துவிட்டது. கார்பரேட்டுக்கள் வளர்ச்சிக்கு இருந்த சிறிய அளவு முட்டுக்கட்டைகளும் நீக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்ப ஒழிக்கப்பட இருப்பதற்கான சமிக்ஞைகள் வந்துவிட்டன. இராணுவ உற்பத்தி உள்ளிட்டு, சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் அன்னிய மூலதனத்தை கொண்டுவருவோம் என அரசு தெளிவுபட சொல்லிவிட்டது. யார் கண்டது? ஐந்தாண்டு முடிவதற்குள் குடிமக்களின் படுக்கையறைகூட கார்பரேட்டுக்கள் வசம் ஒப்படைக்கப்படலாம். “எனது முப்பதுநாள் அனுபவங்கள்” எனும் மோடியின் கட்டுரை வளர்ச்சி வளர்ச்சி என பேசுகிறதே ஒழிய அதனால் எந்த மக்கள் பயனடையப் போகிறார்கள் என சொல்லவில்லை.
ஆனால் அந்தப் பக்கமோ ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகள் அமுலுக்கு வர ஆரம்பித்து விட்டன. மகராஷ்டிராவில் முதல் கலவரம் ஆரம்பமாகி ஒரு முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். ஹிந்தியே இனி அலுவல்மொழி என டெல்லி பல்கலைக் கழகம் அறிவிக்கிறது. ஹிந்தியே இனி தொடர்பு மொழி என அரசு அறிவித்து விட்டு லேசாக பின்வாங்கியிருக்கிறது. கேட்டால் “வெள்ளைக்காரன் அவன் வசதிக்கு பயன்படுத்திய ஆங்கிலத்தை இன்னும் பயன்படுத்துவது அடிமைத்தனம்” என்கிறார் பாஜக ராகவன். அப்படிப்பார்த்தால் ஜட்டிகூட வெள்ளைக்காரன் அவன் வசதிக்கு உருவாக்கியதுதான். அடுத்தது அதையும் உருவிவிட்டு வலுக்கட்டாயமாக கோவணத்தை மாட்டிவிடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. மாட்டுச்சாணி சாம்பலில் பல்தேய்ப்பது மாட்டு மூத்திரம் குடிப்பது ஆகியவையும் ஆர்.எஸ்.எஸ்சின் புனிதக்கடமைகள் பட்டியலில் இருப்பதால் அச்சம் இன்னும் அதிகரிக்கிறது.
மோடியின் குறைந்தபட்ச செயல்திட்டமும் சிறப்பாக நிறைவேற ஆரம்பித்துவிட்டது. பெண்ணை வேவுபார்த்த விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை கைவிடப்பட்டுவிட்டது. அமித் ஷாவை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டுவிட்டார். மீதமிருக்கும் வழக்குகளுக்கு எள்ளும் தண்ணியும் தெளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. போதும் போதாததற்கு கோபால் சுப்ரமணியம் போன்ற ஆகாத ஆட்களை அவமானப்படுத்தும் காரியங்களும் ஜரூராக நடக்கின்றன.
மோடி மாயை 3
முதலாளிகளின் தேவைக்காக மோடியின் கலவர இமேஜை அழிக்க பெரு முயற்சி நடைபெற்றது.
இதில் அதிகம் ஏமாற்றமடைந்தது இந்திய நடுத்தர வர்க்க மக்கள்தான். அதுவும் மிடில்கிளாஸ் இந்துக்கள், கிருஸ்துவர்கள் தேர்தலுக்கு முன்பே தங்கள் மனதை ஓரளவுக்கு தயார்படுத்திக் கொண்டார்கள். முஸ்லீம்களுக்கு மோடி வந்துதான் நெருக்கடி வரவேண்டும் என்ற நிலை இல்லை. ஏறத்தாழ இந்தியாவின் எல்லா அரசுகளும், போலீசும், புலனாய்வு நிறுவனங்களும் முஸ்லீம் விரோத சிந்தனை கொண்டவையே என்பதால் அவர்கள் எல்லா ஆட்சியிலும் அச்சுறுத்தலுடனேயே வாழ்கிறார்கள். ஆனால் மிடில் கிளாஸ் இந்துக்களோ, ஒரு பக்கம் கலவரம் வந்தாலும் மறுபக்கம் வளர்ச்சியும் அமோகமாய் இருக்கும் என நம்பினார்கள். நட்டம் எனக்கில்லை லாபம் வந்தால் அது நமக்கு மட்டுமே எனும் குருட்டு நம்பிக்கை அவர்கள் வசம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து வைத்த முதல் ஆப்பு இவர்களுக்குத்தான்.
மோடிக்கு ஓட்டு போட்ட ஒரு நண்பர் ரயில் கட்டண உயர்வுக்குப் பிறகு குழப்பத்துடன் கேட்டார் “எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க?”. மோடிக்கு ஓட்டு போட்டவரே இத்தனை பெரிய மெஜாரிட்டியை எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படி நாடெங்கும் மக்கள் ஒரே மாதிரி ஏமாந்தார்கள் எனும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. பவர் ஸ்டாரிடமே ஏமாறத்த யாராயிருக்கும் நாடு, பத்தாயிரம் கோடி செலவு செய்பவனிடம் ஏமாறுவதில் என்ன அதிசயம்?
அது ஒன்றும் கடினமான நுட்பமில்லை. ஏற்கனவே செவன் ஸ்டார் (திருப்பூர்), அனுபவ், சுசி ஈமு ஃபார்ம் போன்ற வெற்று விளம்பரங்கள் வாயிலாகவே தங்களை பிரபலமாக்கிக் கொண்டும் ஊரை ஏமாற்றினார்கள்.
“பிள்ளையார் பால் குடிக்கிறார்” என்ற வெறும் செய்தி பரப்பப்பட்டபோது அது எப்படி சாத்தியம் என அறிவுபூர்வமாக கேட்டவர்கள் அதிகமா? “எதுக்கும் பால் கொடுத்து பார்ப்போமே” என யோசித்தவர்கள் அதிகமா? “என்னைப்பார் யோகம் வரும்” எனும் கழுதைப் படத்தை கடையில் மாட்டியவர்களில், அதன் பலன் குறித்த தரவுகள் அடிப்படையில் படத்தை வாங்கியவர்கள் எத்துணை பேர்? ஒருவேளை யோகம் வந்தால் நல்லதுதானே எனும் நப்பாசையில் வாங்கியவர்கள் எத்தனை பேர்? கிட்டத்தட்ட இதே தொழில்நுட்பத்தின் அப்டேட்டட் வெர்ஷன்தான் மோடி விளம்பரங்களும். அது எப்படி சாத்தியமாக்கப்பட்டது என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
மோடி மாயை 4
ஹிட்லரின் சீடர் காந்தியின் வேடம் தரித்ததை நம்புவதற்கு கூட இந்த நாட்டில் ஆட்கள் இருந்தார்கள்
டெக்னிக் 1: நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் முடிவெடுக்கிறோம். அதற்கான காரணங்களை பிறகுதான் தேடுகிறோம். ஏனென்றால் முடிவெடுப்பதற்கான மூளை பாகம் வேறு, காரணங்களை ஆராய்வதற்கான மூளைப் பகுதி வேறு.. முடிவெடுப்பதற்கான மூளைப் பகுதியே வலுவானது என்பதால் விளம்பரங்கள் நம்மை முடிவெடுக்க தூண்டுகின்றன. எடுத்த முடிவை நியாயப்படுத்தும் செயலை பிறகு செய்கிறீர்கள். கேட்டரிங் கல்லூரி விளம்பரத்துக்கு சினேகா வருவது இந்த காரணத்தினால்தான். ரஜினியைக் காட்டிலும் வடிவேலு நிஜத்தில் வலுவானவராக இருக்கலாம். ஆனால் ரஜினி 100 பேரை அடித்தாலும் அதனை ரசிக்கும் நீங்கள் அதையே வடிவேலு செய்யும்போது சிரிக்கிறீர்கள். காரணம் ரஜினி ஒரு ஹீரோ எனும் உங்களது முடிவு. அதேபோல மோடியும் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்தான். ஸ்டிரெய்ட்டாக ஹீரோவாக அறிமுகமானார், அவரது பஞ்ச் டயலாக்குகளுக்கு நீங்கள் கைதட்டினீர்கள். ஹீரோவை தலைவராக்கும் இயல்பு நமக்கு பாரம்பர்யமாக இருப்பதால் மோடிக்கு பிரதமராவதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.
டெக்னிக் 2 : நீங்கள் மிகவும் பரிச்சயமான மற்றும் எளிய பெயருடைய வாய்ப்புக்களையே தெரிவு செய்கிறீர்கள். கடினமான மற்றும் புதிய ஐஸ்கிரீம் பெயர்களைத் தவிர்த்துவிட்டு அனேகம்பேர் வெனிலாவை தெரிவு செய்வது இதனால்தான். இதற்காகத்தான் மோடியின் பெயரை பிரபலப்படுத்த மட்டும் பல்லாயிரம் கோடிகளை இறைக்கப்பட்டன. மோடி குனிந்தார், நிமிர்ந்தார், கொட்டாவி விட்டார் என அவர் அசைவுகள் யாவையும் செய்தியாக்கப்பட்டன.
டெக்னிக் 3 : கிளுகிளுப்பான மனோ நிலையில் தரப்படும் வாய்ப்புக்களை நீங்கள் அதிகம் யோசிக்காமல் தெரிவு செய்கிறீர்கள். டேட்டிங் துணையை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட உளவியல் ஆய்வொன்றில் இது நிரூபணம் செய்யப்பட்டது. ஒரே தகுதியுடைய இரண்டு குழுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முதல் குழு வாசிக்க, பாலியல் ரீதியாக தூண்டும் புத்தகங்கள் தரப்பட்டன. இரண்டாவது குழுவுக்கு அவை தரப்படவில்லை. பிறகு துணையாக தெரிவு செய்ய தரப்பட்ட  பெண்ணின் புகைப்படத்தை முதல் குழுவினர் உடனடியாக தெரிவு செய்தார்கள். இரண்டாம் குழுவினர் அப்படி செய்யவில்லை. அவர்கள் தெரிவு செய்ய இன்னும் கூடுதலான பெண்களது படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் கோரினார்கள். இரண்டு குழுவினருக்கும் ஒரேயொரு பெண்ணின் புகைப்படம் மட்டுமே தரப்பட்டது என்பது நம் கவனத்துக்குரியது.
மோடியை ஆதரவு மனக்கிளர்ச்சியை உருவாக்கவும் இப்படியான கவர்ச்சிகரமான முன் தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு அறிக்கை கொடுக்க வைக்கப்பட்டார்கள். குஜராத் செப்டிக் டேங்குகளில்கூட செண்ட் வாசம் அடிப்பதாக செய்திகள் பரப்பப்பட்டது. முடவர்கள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் எனும் அல்லேலூயா பாணி பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது.
ரஜினி, விஜய் என சாத்தியப்பட்ட எல்லா பிரபலங்களையும் சந்தித்தார் மோடி. மேக்னா படேல் சாத்தியப்பட்டவரைக்கும் ஆடைகளை துறந்து ஆதரவு கேட்டார். வளர்ச்சி மோகம், வல்லரசு கனவு, சினிமா கவர்ச்சி போன்றவை தூண்டப்பட்டு மோடியின் முகம் காட்டப்பட்டது. உணர்ச்சி வேகத்தில் அறிவு வேலை செய்யாது எனும் நிரூபணமான தத்துவம் மீண்டும் உண்மையானது. (விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2013 இல் குஜராத் வந்தபோது அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள மோடி கடும் முயற்சி எடுத்தார். குஜராத் அரசு அதிகாரிகள் அவரை மோடியுடன் பேசவைப்பதற்காக அவர் பயணித்த இடங்களிலெல்லாம் விரட்டினார்கள். ஹரேன் பாண்டியாவின் குடும்பத்தை சந்தித்த சுனிதா, மோடியை சந்திக்க மறுத்தார் என்ற செய்தியை இங்கே நினைவ கூர்க)
டெக்னிக் 4 : பெரும்பான்மையானவர்களின் முடிவை பின்பற்றுவது எளிதானது மற்றும் பாதுகாப்பானது என நீங்கள் கருதுகிறீர்கள். கூட்டத்தின் முடிவோடு ஒத்து போவது உங்களது முடிவெடுக்கும் வேலையை குறையும், முடிவு தவறானால் அதனை எதிர்கொள்ளும் கட்டாயம் அந்த கூட்டம் முழுமைக்கும் ஏற்படும் என்பதால் தனிப்பட்ட முறையில் தனக்கான ஆபத்து குறைவதாக மனித மூளை கருதுகிறது. ஆகவே நம்மில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையோரது முடிவோடு ஒத்துப்போவதற்கே விரும்புகிறோம். கூட்டமே இல்லாத மற்றும் அதிக கூட்டமிருக்கிற என இரண்டு மாட்டுக்கறிக் கடைகள்!!! அருகருகே இருந்தால் நாம் அதிக கூட்டமிருக்கிற கடையையே தெரிவு செய்வோம் இல்லையா, அதுபோலத்தான்.
மோடி மாயை 5
தேர்தலுக்கு முன்பேயே மோடிதான் பிரதமர் என்று அறிவித்து விடும் அளவுக்கு ஊடக பிரச்சாரம்
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் அடுத்த பிரதமர் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. மோடிக்கு ஓட்டுபோடுங்கள் என்றுகூட விளம்பரம் வரவில்லை மோடியை கொண்டுவரப் போகிறோம் என்றுதான் அனேக விளம்பரங்கள் வந்தன. சில சந்தர்பங்களில் காங்கிரஸ் பேச்சாளர்களே வருங்கால பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட சம்பவங்களும் நடந்தது. தொழிற்சாலை வைத்து உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான ஃபேக் ஐடிக்களும் கோடிகளைக் கொட்டி நாடெங்கும் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கூட்டங்களும் மோடிக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதான தோற்றத்தை உருவாக்கின. அதை நம்பிய மக்கள் இல்லாத கும்பலோடு கோவிந்தா போட ஆரம்பித்தார்கள். கோயிந்தா சத்தம் மெஜாரிட்டியாகிவிட்டது.
டெக்னிக் 5 : பிழைக்க வழியற்ற சூழலில் எத்தகைய அடிமுட்டாள்தனமான வாய்ப்பையும் மனிதர்கள் பரீட்சித்துப் பார்க்க முற்படுவார்கள்.
ஆஸ்திரேலியா சென்று சேரும் சாத்தியம் ஏறத்தாழ பூஜ்ஜியம் என்ற நிலையிலும் ஈழ அகதிகள் சாதரண மீன்பிடி படகுகளில் பயணம் போகக் காரணம் இதுதான். தமிழக அகதி முகாமிலும் இலங்கையிலும் வாழ்வு விவரிக்க இயலாத அளவு துயரமானதாக இருக்கையில் ஏதோ ஒருவழியில் அவர்கள் அதிலிருந்து மீள விரும்புகிறார்கள், அது எத்தகைய அபாயகரமான வழியாக இருந்தாலும். காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் பெரும்பாலான பாமர மக்களிடம் உயிர் மட்டுமே மிச்சமிருந்தது. விலையேற்றம் வேலை உறுதியின்மை என ஏதேனும் ஒரு பெரிய நெருக்கடியிலேயே மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு காட்டப்பட்ட ஒரே மாற்று மோடிதான். அது அபாயகரமானது என தெரிந்தாலும் அவர்களுக்கு இந்த அமைப்பில் வேறு மாற்று தெரிந்திருந்திருக்கவில்லை.
டெக்னிக் 6: அதீத அச்சத்தின்போது நீங்கள் அபாயத்தை வலிந்து ஏற்றுக்கொள்ள முற்படுவீர்கள். ஏனென்றால் சிலசமயங்களில் தண்டனை பற்றிய சஸ்பென்ஸ் தண்டனையைவிட மோசமானது. தமிழகத்தில் ஒரு தூக்குதண்டனைக் கைதி தானே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கருணை மனு மீதான முடிவு வராத நிலையில் தனது தண்டணைக்கு முதல்நாள் மாலை அவர் தற்கொலை செய்துகொண்டார் (விவரங்கள்: தூக்குமர நிழலில் நூலில், எழுதியவர் சி.ஏ பாலன்). மோடி வந்தால் நாடு என்னவாகுமோ எனும் அச்சம் ஒருவருக்கு அதிகரிக்கையில் அவரது மனம் அதை சரிசெய்ய ”மோடி வந்து அதோட பலனை இந்த ஜனம் அனுபவிக்கட்டும்… அப்பத்தான் இவர்கள் திருந்துவார்கள்” எனும் எண்ணத்தை உருவாக்குகிறது. மனநிலையை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கை இது (டிஃபென்ஸ் மெக்கானிசம்). அத்தகைய சந்தர்பங்களில் மோடியே வந்து தொலைக்கட்டும் எனும் சமாதானத்துக்கு சிலர் வர வாய்ப்பிருக்கிறது. மோடிக்கு எதிரான மனோநிலை கொண்டவர்களில் ஒரு பகுதியினர் அமைதியானதற்கு இதுவும் ஒரு காரணம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டு போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நாம் நீண்ட  அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகவே தேர்தலை ஒரு ஆள் மாற்றி விளையாடும் பொழுதுபோக்காக நாம் கையாளத் துவங்கிவிட்டோம். ஆகப் பெரும்பாலானவர்கள் ஜோடி நம்பர் ஒன் போட்டியில் ஓட்டுபோட மெனக்கெடும் அளவுக்குக்கூட பொதுத்தேர்தலின்போது அலட்டிக்கொள்வதில்லை. இந்த மனோபாவத்தை அதிகாரவர்க்கம் விரும்புகிறது, அதனை ஊடகங்கள் பெருமளவு ஊக்குவிக்கின்றன. கட்சிகளில் எம்.பி சீட்டுக்கான தகுதியாக பணபலம் மாறியிருப்பது ஒரு அவலமாக அல்லாமல் சுவாரஸ்யமான செய்தியாக பத்திரிக்கைகளால் பரிமாறப்படுகிறது. இந்த விளையாட்டு மனோபாவம் இந்த சுரண்டல் அரசு எந்திரத்தை நமது கோபத்தில் இருந்து காப்பாற்றுகிறது.
நண்பர்களே,
இது பெரிய திட்டங்களோடு விரிக்கப்பட்ட வலை. ஒருவேளை உங்களது தேர்வு மோடியாக இருந்திருக்கும் பட்சத்தில் அதுகுறித்து நீங்கள் இப்போது குற்ற உணர்வுகொள்ள அவசியமில்லை. முதலாளித்துவமானது மத அடிப்படைவாதிகளையும் ஃபாசிஸ்டுகளையும் உற்பத்தி செய்வதன் வாயிலாகவே ஜீவித்திருக்கிறது. இது கார்ப்பரேட்டுக்களுக்கு தாரைவார்க்கப்பட்ட ஒரு தேசம். இங்கே தேர்தல் என்பது நம்மை கழுவிலேற்றுபவனை நாமே தெரிவுசெய்யும் நடைமுறை. அரசு அதிகாரிகள், மதத்தீவிரவாதிகள், பொருளாதார வல்லுனர்கள், என்.ஜி.ஓக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகிய அனைத்து தரப்புமே கார்பரேட்டுக்களின் கூலிப்படைதான். ஒரு இடத்தில் வேலை செய்யவேண்டியது ஆர்.எஸ்.எஸ்ஸா  அல்லது என்.ஜி.ஓவா என்பதை பெருமுதலாளிகளின் தேவைதான் தீர்மானிக்கிறது. நாட்டை ஆளவேண்டியது மன்மோகனா அல்லது மோடியா என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.
எழுபத்தைந்து சதவிகித முதலாளிகள் மோடியே பிரதமராக வரவேண்டுமென விரும்பினார்கள். இந்த நாடு அவர்களுக்கான ஒரு பெரிய ஆலை நிலம், ஒரு கொத்தடிமைச் சந்தை. பல்லாயிரம் கோடி முதலீடு போட்டு தாங்கள் விரும்பியவரை தங்களுக்கான ஒரு மேலாளராக நியமனம் செய்திருக்கிறார்கள், இது முன்பிருந்த மேலாளருக்கு செய்யப்பட்ட செலவைக் காட்டிலும் மிக அதிகம்.  போட்ட முதலீட்டுக்கான லாபத்தை அவர்கள் எடுத்தாக வேண்டும்.
மன்மோகன் ஆட்சியில் நாம் எதிர்கொண்ட துயரங்கள் இனி இன்னும் தீவிரமாகும். விவசாயிகள் தற்கொலை, விலையுயர்வு, வேலையிழப்பு என சகலமும் முன்னைக்காட்டிலும் தீவிரமாகும். ஆனால் சிலகாலத்துக்கு அவை “வளர்ச்சிக்கான தற்கொலை, வளர்ச்சிக்கான விலையுயர்வு” என ஊடகங்களால் விளக்கப்படும். கூடுதலாக மோடி நல்லவர் வல்லவர் எனும் தனிமனித துதிபாடல் ஒரு பக்கமாக நடக்கும் (ரயில் பயணத்தின்போது மோடி டீ வாங்கிக்கொடுத்தார், பெண்களுக்கு இடம்கொடுத்தார் என ஒரு கட்டுரையும், மோடியின் இளமைகால சாகசங்கள் என் ஒரு கட்டுரையும் தற்போதைக்கு தமிழ் இந்துவில் வந்திருக்கின்றன)
பிறகு மக்கள் அதிருப்தி அதிகமாகும் போதெல்லாம் பாஜகவின் வழக்கமான உத்தியான தீவிரவாத அச்சுறுத்தல் எனும் பீதி கிளம்பும். அதுவும் காலாவதியாகி, மோடியும் வேலைக்காகாதவர் என முதலாளிகள் முடிவு செய்யும் பட்சத்தில், அவரை அனுப்பிவிட்டு அடுத்த ஆப்ஷனை நமக்கு அம்பானியும் டாடாவும் அருளுவார்கள். தனக்கு கிடைத்த மிகக் கேவலமான தோல்வியைகூட ஒரு வழக்கமான பணி ஓய்வைப்போல மன்மோகன் “பக்குவத்துடன்” எதிர்கொண்டதற்குக் காரணம், அவர் இந்த ஆட்டத்தை நன்கறிந்தவர் என்பதுதான்.
முதலாளித்துவத்தின் லாபவெறி வரம்பற்றது. அதன் இறுதி இலக்கு நம்மை வீதிக்கு விரட்டுவதுதான். இதனை எதிர்கொள்ள இரண்டு உபாயங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று இந்த அமைப்பை எதிர்த்து போராடும் வீரனாக நாம் வீதிக்கு வருவது. அல்லது முதலாளித்துவத்தால் நாம் வீதிக்கு விரட்டப்படும்வரை ஒரு ஏதிலியைப்போல மௌனமாக காத்திருப்பது.
-          வில்லவன்.

கருத்துகள் இல்லை: