வெள்ளி, 20 ஜூன், 2014

கேரளா கல்லூரி மலரில் ஹிட்லரோடு மோடி படம் ?

ல்லூரி ஆண்டு மலரில், நரேந்திரமோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒருவராக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டமைக்காக அக்கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திரிசூர் அருகேயுள்ள குன்னங்குளம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு மலரில், “மனிதமுகங்களின் வழியே உலக வரலாற்றை கூறுவது” என்ற வகையில் ஆன்மீகம், இலக்கியம், உலக தலைவர்கள், எதிர்மறை ஆளுமைகள், விளையாட்டு என்று ஐந்து தலைப்புகளில் பலரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘எதிர்மறை முகங்கள்’ என்ற தலைப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒசாமா பின்லேடன், ஹிட்லர் ஆகியோர் படங்களுடன் மோடியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
சந்தன கடத்தல் வீரப்பன் இதில் அடக்கம்.
இதில் மோடியை சேர்த்தமைக்காக, கடந்த மாதம் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் குட்டி, ஆண்டுமலரின் மாணவ ஆசிரியர் பிரவீண், கல்லூரி தரப்பின் நிர்வாக ஆசிரியர் கோபி, ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் நிகில், சியாம், ஜேம்ஸ் அச்சக உரிமையாளர் ராஜீவ் உள்ளிட்ட ஏழு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120-B (கிரிமினல் சதி), 153 (கலவரத்தை தூண்டுதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) 34 (ஒரே நோக்கத்திற்காக பலர் இணைந்து கிரிமினல் குற்றம் செய்தல்), 500 (அவதூறு), 501 (அவதூறை பிரசுரித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர்.
கல்லூரியின் தற்போதைய முதல்வர் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஆயினும் கல்லூரியில் ‘அதிரடி’ சோதனை நடத்திய போலீஸ் ‘கிரிமினல் சதி’ மற்றும் ‘கலவரத்திற்கு’ பயன்பட்ட ‘அதிபயங்கர ஆயுதங்களான’ ஆண்டுமலர் பிரதிகள், DTP செய்த கணினி, வன்தகடு (ஹார்ட் டிஸ்க்) ஆகியவற்றை கைப்பற்றி சென்றுள்ளது.
இது தங்களின் கருத்துரிமையை பாதிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பத்திரிகையின் மாணவ ஆசிரியர் பிரவீன் ஆண்டுமலரை திரும்ப பெறும் கல்லூரியின் முடிவையும், அரசின் கைதையும் எதிர்த்துள்ளார். ”நாங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை. ஒரு இந்திய குடிமகனாக மோடியை விமர்சிக்க எங்களுக்கு உரிமையுள்ளது. நாட்டின் பிரதமரை அவமதிக்கும் நோக்கில் இதை செய்யவில்லை. மலரின் உள்ளடக்கம் கடந்த அக்டோபர் மாதமே ஆசிரியர்களுடன் விவாதித்து முடிவு செய்யப்பட்டு விட்டது. நாங்கள் கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து இதை வெளியிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
குன்னங்குளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்வர் மீதான நடவடிக்கையின் தொடர்ச்சியாக குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இதழில் மோடியை பற்றி ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறுக்கெழுத்து புதிர் பகுதியில் நாயையும் மோடியையும் இணைத்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. (நமோ என்பதை கண்டுபிடிக்க “நாயின்ட மோன்” என்று குறிப்பு கொடுத்திருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது).
குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட முசுலீம் மக்களை காரில் அடிபட்ட நாய்க்குட்டியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்க மோடிக்கு இருக்கும் சுதந்திரம் அவரை நாயின்ட மோன் என்று கூப்பிட மாணவர்களுக்கு கிடையாதா? அடுத்து குஜராத்தில் மோடி மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை ஒட்டித்தான் இம் மாணவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு?
குன்னங்குளம் அரசு பால்டெக்னிக் கல்லூரி ஆண்டு இதழ் அட்டைப் படம்
குன்னங்குளம் அரசு பால்டெக்னிக் கல்லூரி ஆண்டு இதழ் அட்டைப் படம்
அடுத்து மோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒன்றாக போட்ட விவகாரத்தை பார்ப்போம். ஹிட்லர், பின்லேடன், புஷ், வீரப்பன், பிரபாகரன் போன்றோருடன் மோடி படம் போடப்பட்டதில் இந்துமதவெறியர்களுக்கு என்ன சிக்கல்? இதில் ஹிட்லர், புஷ்ஷோடு போட்டதில் ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சினை ஒன்றும் இல்லை.
ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கோல்வால்கர்,  ஹிட்லரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியதை “ஞானகங்கை” நூலில் பார்க்கலாம். கோல்வால்கர் காலம் தொட்டு இன்று மோகன் பகவத் காலம் வரை அமெரிக்க அதிபர்கள் காலை தொட்டு நக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு புஷ் மீதும் பிரச்சினை இல்லை. அதாவது ஹிட்லர், புஷ் கூட மோடி படம் இருந்தால் அது இந்துமதவெறியர்களுக்கு கௌரவம். மகிழ்ச்சியடைவார்கள்.
மற்றவர்களை பார்ப்போம். பின்லேடன், வீரப்பன், பிரபாகரன் போன்றோரை  ஹிட்லர், புஷ் போன்ற உலக மேலாதிக்க பாசிஸ்டுகளின் கணக்கோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. மேலும் இவர்களின் தவறுகள், பிரச்சினைகளின் தன்மை வேறு.  குறிப்பான ஒடுக்குமுறை, சுரண்டல் அமைப்புக்கு எதிராக தோன்றி வளர்ந்தும், அது ஒடுக்கும் சக்திகளால் திசைதிருப்பப் பட்டும் போனதால் வந்த பிரச்சினைகள்தான் இவர்களது தவறுகள். இவர்களில் பிரபாகரனும், வீரப்பனும் ‘இந்துக்கள்’. பின்லேடன் மட்டும் முசுலீம் என்பதால் இவர் கூட மோடியா என்று இந்துமதவெறியர்கள் கோபம் கொண்டிருக்க கூடும். அதாவது தாம் ஒழிக்க விரும்பும் இசுலாமியர்களின் ‘தலைவனோடு’ நமது தலைவன் இடம் பெறுவதை சகிக்க முடியாது என்பதே அவர்களது எரிச்சல். மற்றபடி இதில் பாசிஸ்டுகளோடு ஜனநாயகத்தை கலக்கலாமா என்று அவர்கள் எழுப்பினால் அது யாராலும் சகிக்க முடியாத கருத்தாக மட்டுமே இருக்கும்.
ஆனால் அமெரிக்காவின் புஷ்ஷும், ஜெர்மனியின் ஹிட்லரும் முழு உலகை தமது ஆளுகைக்குள் கொண்டு வர முயன்றவர்கள். அதற்காக எண்ணிறந்த மக்களை கணக்கு வழக்கில்லாமல் கொன்றவர்கள். இத்தகைய வில்லன்களோடு மட்டும் மோடியின் படத்தை போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதே நமது கருத்து.
இரண்டு கல்லூரி மாணவர்களும் சி.பி.எம் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆயினும் இது வரை மாணவர்கள் கைதுக்கு எதிராக சி.பி.எம் போலிகள் போராடியதாக எந்த செய்தியும் இல்லை.
இந்துத்துவ பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள் இது போன்ற பல கைதுகள் நடந்து விட்டன. ஜனநாயகத்தின் வாசனை கூட மக்களுக்கு கிடையாது என்பதை இவர்களது நடவடிக்கைள் காட்டுகின்றன.
கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் மோடியை விமர்சித்து முகநூலில் எழுதியதற்காக கோவாவை சேர்ந்த ஜோடங்கர் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுத்தது கோவா பா.ஜ.க அரசு. இத்தனைக்கும் ஜோடங்கர் ஒரு பா.ஜ.க அனுதாபி. ஆனால் மோடியை கட்சி முன்னிறுத்துவதை பிடிக்காமல் மோடி  போன்ற கொலைகாரன் ஆட்சிக்கு வந்தால் கோவாவிலும் குஜராத்தை போன்ற இன அழிப்பு தொடரும் என்ற அபாயத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மீது  பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் பதியப்பட்டன. தங்கள் பங்கிற்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அவருக்கு முன்பிணை மறுத்தன.
அடுத்த சில நாட்களில் மோடியை கிண்டல் செய்து வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதற்காக கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்ட பல்கலைகழக எம்.பி.ஏ மாணவர் சையது வாக்கஸ் கைது செய்யப்பட்டார். இவை பத்திரிகைகளில் வெளிவந்த சில உதாரணங்கள் மட்டுமே.
பழைய அச்சு ஊடகம் முதல் நவீன வாட்ஸ்அப் வரை சொல்லிக் கொள்ளப்படும் கருத்து சுதந்திரம் எப்படி ‘கொடிகட்டி பறக்கிறது’ என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. அதிலும் ஜனநாயக மறுப்பையே தனது சித்தாந்தமாக கொண்ட பார்ப்பன பாசிச பா.ஜ.க ஆட்சியை பிடித்த பிறகு மக்களின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் முன்னைவிட அதிகரித்து வருகிறது.
முகநூலில் யாரோ ஒருவர், கொலைகாரன் பால்தாக்ரேவை விமர்சித்ததற்காக பூனே நகரில் கலவரம் செய்தது இந்துத்துவ கும்பல். தலையில் குல்லா அணிந்துவந்த ஒரே குற்றத்திற்காக இஸ்லாமியர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். அதை ‘முதல் விக்கெட் விழுந்துவிட்டது என்றும் தமிழகத்திலும் அப்படி செய்ய வேண்டும்’ என்று முகநூலில் இந்துத்துவ சில்லறைகள் கொண்டாடுகிறார்கள். ‘எங்கள் ஆட்சி வந்துவிட்டது’ என்ற அதிகார போதை உந்தித்தள்ள  ‘யாரும் கேள்விகேட்க முடியாது’ என்று வெறியில் ஊளையிடுகிறார்கள்.
Modi_Hitler
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிட்லரது கொள்கை மட்டுமல்ல நமஸ்கார முறைகளும் ஒன்றுதான்
பா.ஜ.க இதில் முன்னணியில் நின்றாலும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இந்துத்துவ பெரும்பான்மை அரசியலை பல்வேறு அளவுகளில் கடைப்பிடிக்கின்றன. மோடியை விமர்சித்தவர்களை கைது செய்த கர்நாடகா மற்றும் கேரளாவின் ஆட்சி பொறுப்பில் இருப்பது, காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியை சேர்ந்த மோடி விமர்சிக்கப்பட்டிருந்தாலும் ஆளும் வர்க்கம் என்ற வகையில், தங்கள் வர்க்கத்தின் அதிகாரம் சாதாரண மாணவர்களால் கேலிப்பொருளாக்கப்படுவது அவர்களையும் அச்சுறுத்துகிறது. மேலும் பாபர் மசூதி இடிப்பிலிருந்து குஜராத் கலவரம் வரை காங்கிரஸ், பா.ஜ.க.வின் கூட்டாளியாக தான் எப்பொழுதும் செயல்பட்டிருக்கிறது என்பதால் காங்கிரஸ் அரசின் கைது நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்றல்ல.
தங்களை தாராளவாதிகள் (லிபரல்கள்) என்று அழைத்துக்கொண்டு மோடியை ஆதரித்த முதலாளித்துவ ‘கருத்துரிமை காவலர்கள்’ எவரும் இதுவரை இந்த கைதுகள் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகளும் மோடியை அவமதித்து விட்டார்கள் என்ற கோணத்தில் தான் செய்தியை கொண்டு செல்கின்றன. தாங்கள் சொல்லிக்கொள்ளும் கருத்துரிமை, ஜனநாயகம் பறிபோகிறது என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
காவி இருள் கவ்வி வரும் சூழலில் இந்த கைதுகளை கண்டித்து உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. இல்லையேல் 2002 குஜராத்தில் கலவரமோ இனப்படுகொலையோ ஒன்றும் நடக்கவில்லை என்று கூட வரலாற்றை மாற்றுவார்கள். அதை மறுத்தால் மோடியை இழிவுபடுத்திவிட்டதாக நம் மீது வழக்கு போடுவார்கள்!
-    ரவி vinavu.com

கருத்துகள் இல்லை: