வியாழன், 2 ஜனவரி, 2014

ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவின் துயரம்! சாதாரணனின் அசாதாரண சாதனை

அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியின் முதல்வர் ஆவது குறித்து எனக்குப் பெருத்த மகிழ்ச்சி. கட்சி ஆரம்பித்து ஒராண்டிலேயே ஒரு மாநிலத்தின் தேர்தலில் நின்று, இரு முனைப் போட்டியை உடைத்து, மூன்றாவது அணியை மாற்றாக முன்வைத்து, இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியது என்பது சந்தேகமே இல்லாமல் மாபெரும் சாதனை
இதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என்றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.


உண்மையில் கெஜ்ரிவால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்திருக்கவேண்டும். ‘என் பிள்ளைகளின்மீது சத்தியம்’ என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்து பேசியிருந்திருக்கக்கூடாது. ஆனால் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் ஒருவரின் அதீத ஆர்வக்கோளாறு என்று இதனை மன்னித்துவிடலாம்.

கட்சி அமைப்பது, ஆட்சியைப் பிடிப்பது இரண்டுமே, அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கே. சிறுபான்மை எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்தாலும் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம். அந்த மாற்றங்கள் நீடித்து நிலைப்பவையாக இருக்கலாம். உதாரணமாக லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் (கெஜ்ரிவால் ‘அண்ணாவின் ஜன் லோக்பால்’ என்றே சொல்லிவருகிறார்) நீடித்த ஒரு மாற்றத்தை தில்லியில் நிறுவலாம். தனக்கும் பிற அமைச்சர்களுக்கும் பந்தோபஸ்து, பந்தா ஆகியவற்றை விலக்குவதன்மூலம் காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகளின் வெறியாட்டத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்; குறைந்தபட்சம் அவர்களில் ஒரு சிலரையேனும் வெட்கப்படச் செய்யலாம். (பாஜகவின் டாக்டர் ஹர்ஷவர்தன் எளிமையானவராகத்தான் தோற்றமளிக்கிறார்.) ஊழல் எளிதில் புகுந்துவிடாமல் இருக்க சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரலாம். மின்சாரமோ, தண்ணீரோ, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவற்றைத் தர முயற்சி செய்யலாம். கடந்த 15 ஆண்டுகளில் ஷீலா தீக்ஷித் இவை அனைத்திலும் தோற்றுள்ளார் என்பது மக்களின் கோபத்திலிருந்து தெரிகிறது.

ஆனால் தில்லியின் பிரச்னைகள் இவற்றுக்கெல்லாம் மேலானவை. அங்கே இந்தியாவெங்கிலிருந்து ஏழை மக்கள் சாரி சாரியாகப் படையெடுத்துச் சென்று தங்கள் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கும் அளவுக்கு தொழில் நிறுவனங்கள் அங்கில்லை. தில்லியின் அண்மைய மாநிலங்கள் உத்தரப் பிரதேசமும் ஹரியானாவும் விளை நிலங்களையெல்லாம் கூறு கட்டி வசிப்பிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. வேலையில்லா, திறனில்லா, படிப்பில்லா இளைஞர்கள் தெருவில் உலா வருகிறார்கள். பெண்களைக் கொலைவெறியுடன் அணுகி அழிக்கிறார்கள். இதனை வெறும் சட்டம் ஒழுங்கு மட்டும் கொண்டு அடக்கிவிட முடியாது. தில்லியின் ஏற்றத்தாழ்வு அளவுக்கு வேறு எந்த நகரிலும் இருக்காது என்று நினைக்கிறேன். எண்ணற்ற சேரிகள் இருக்கும் அதே நகரில்தான் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வளைத்து தில்லியில் நடுவில் பங்களாக்களும் உள்ளன. இன்றைய இந்திய சொத்துரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நிலங்களையெல்லாம் கைப்பற்றி அனைத்து மக்களும் வாழக்கூடியதற்கான இருப்பிடங்களை எளிதில் கட்டிவிட முடியாது. ஆனால் எங்கோ ஆரம்பிக்கவேண்டியிருக்கும்.

அடுத்து தில்லியின் ஸ்டேடஸ். தில்லி ஒரு யூனியன் பிரதேசமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓரிடமாக உள்ளது. தில்லியின் காவல்துறை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதனைத் தன் கையில் எடுத்துக்கொள்ளாமல் தில்லி அரசால் சட்டம் ஒழுங்கைச் சரியாகக் காக்க முடியாது. இது மாறவேண்டும் என்றால் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். தில்லி யூனியன் பிரதேசத்தை முழுமையான மாநிலமாக மாற்றினால் என்னென்ன சிக்கல்கள், என்னென்ன நன்மைகள் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. அதுகுறித்து யோசிக்கத் தேவையான அடிப்படைத் தரவுகள்கூட என்னிடம் கிடையாது. ஆனால் அந்தத் தேவை குறித்து தேர்தல் அறிக்கைகளில் வரத்தொடங்கியிருப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். இது ஒரு விவாதத்தை ஏற்படுத்தும்.

ஆம் ஆத்மி கட்சி எதற்கெடுத்தாலும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதைப் பலர் கேலி செய்கிறார்கள். இது புதுமாதிரியான அரசியல் என்பதால் இப்படித் தோன்றுகிறது. ஆனால் ஆம் ஆத்மியின் வழிமுறைகள் உண்மையிலேயே மிகவும் ஜனநாயகமானவை. தெருவில் போகிறவன் வருகிறவன் என்று பொதுமக்களை கேலி செய்வது அசிங்கமானது. அவர்கள் வாக்களித்துவிட்டுப் போய்விடவேண்டும், பிறகு முடிவுகளையெல்லாம் தாங்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அரசியல்வாதிகள் கருதினால் அதற்கான மரண அடி இப்போது கொடுக்கப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மி தெருவெங்கும் சென்று மக்களை அரசியல்படுத்தும் முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாஜகவும் காங்கிரஸும் இதனைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வழிமுறைகளைக் கேலி செய்தால் நாளை இவர்களே கேலிக்கு உள்ளாகவேண்டிவரும். மக்களுக்கான எந்தத் திட்டமுமே மக்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படுவதுதான். அதனை ஆம் ஆத்மி கட்சி மாற்றினால் அக்கட்சிக்கு என் முழு ஆதரவும் உண்டு.

ஆம் ஆத்மி எல்லாம் தில்லியில் மட்டும்தான் சரிப்படும்; பிற மாநிலங்களில் உள்ளூர் விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்தென்ன; ஈழப் பிரச்னை குறித்து, கூடங்குளம் குறித்து அவர்கள் கருத்தென்ன என்று அடுத்து தமிழ்நாட்டு அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயமெல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்துவிடுவதா; அதுவும்கூட பெரியார், அண்ணா(துரை)யிடமிருந்து வந்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்பது அவர்கள் கருத்துபோலும். ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் தில்லியின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குகளை சேகரித்தனர். தமிழகத்தில் தமிழகத்தின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்கு சேகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து மோதி vs கெஜ்ரிவால். அர்விந்த் கேஜ்ரிவாலை நான் ஆதரித்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆதரவு நரேந்திர மோதிக்குத்தான். மத்தியில் கெஜ்ரிவாலால் எந்தப் பெரிய மாறுதலையும் ஒப்போதைக்குச் செய்துவிட முடியாது என்பது ஒன்று. இரண்டாவது, கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாய்வு இந்தியப் பொருளாதாரத்துக்கு உகந்ததல்ல என்பது. ஆனால் மாநில அரசியலில் கெஜ்ரிவால் அல்லது அவர்போன்ற மக்கள் சார்ந்த, பெரும் குழாமை அரசியல்மயப்படுத்தும் இயக்கத்துக்கான தேவை மிக வலுவாக உள்ளது. ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த தில்லி மக்களே, நாடாளுமன்றத் தேர்தலில் மோதிக்குத்தான் வாக்கு என்று சொல்லியிருப்பதாக exit polls சொல்கின்றன. கெஜ்ரிவால் வரவால் மோதிக்கு ஆதரவு குறைந்துவிட்டது, மோதி அலை என்று ஒன்று இல்லவே இல்லை, அல்லது அந்த பலூன் வெடித்துவிட்டது என்று நினைப்பவர்கள் கருத்து முழுமையாகத் தவறு என்று நான் நினைக்கிறேன்.

மோதிக்கான ஆதரவும் கெஜ்ரிவாலுக்கான ஆதரவும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியிலிருந்துதான் தோன்றுகின்றன: காங்கிரஸின் ஊழல் ஆட்சியும், பொறுப்பற்ற தன்மையும், மக்களை மதிக்காத அரசியலும். அதற்கான அடிப்படை அந்தக் கட்சியின் குடும்ப அரசியலில் உள்ளது. அதன் அலட்சியப் போக்கில் உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும் தங்கள் மகனும் மகளும்தான் கட்சியின் அடுத்த வாரிசுகள் என்று கட்சியினர் அனைவரையும் பேசவைப்பதில் உள்ளது.

கெஜ்ரிவால், மோதி இருவருமே அதற்கான மாற்றை முன்வைப்பவர்கள். மக்கள் சார்ந்த, கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள். மோதி மக்களுக்குப் பல நல மாற்றங்களைச் செய்துகொடுத்திருக்கிறார். அவருடைய டிராக் ரெகார்ட் வலுவானது. குஜராத்துக்கு வெளியே இருப்போரும் மோதியால் தங்களுக்கும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

கெஜ்ரிவால் ஒரு நம்பிக்கையை முன்வைக்கிறார். மக்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கமுடியும் என்றும் அவர்களிடம் ஆலோசனைகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கப்படும் என்றும்  சொல்வதன்மூலம் மக்கள் தங்கள்மீதான தன்னம்பிக்கையை, சுயமரியாதையை அதிகப்படுத்துக்கொள்ள அவர் ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

அதனால்தான் இருவரும் மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். இருவருக்கும் அதனாலாயே மக்கள் மனங்களைப் பிடிக்கப் போட்டி இருக்கும். ஆனால் இருவரும் இப்போதைக்கு இயங்கும் தளங்கள் வேறு வேறு. இருவரும் நேரிடையாக மோதிக்கொள்ளப்போவதில்லை. அந்தமாதிரியான ஒரு மோதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டுதான் பாஜக ஆதரவாளர்கள் தேவையின்றி கெஜ்ரிவாலைச் சிறுமைப்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை ட்விட்டரில் செய்துவருகின்றனர்.

இப்போதைக்கு ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருமே கெஜ்ரிவாலின் முன்னேற்றத்தை, ஆம் ஆத்மியின் வளர்ச்சியை, அது மக்களிடம் தொடர்ந்து உரையாடுவதை ஆரவாரத்துடன் வரவேற்கவேண்டும். கெஜ்ரிவால் தில்லியை ஆட்சி செய்வதில், நல்ல நிர்வாகத்தைத் தருவதில் தடுமாறலாம்; சில தவறுகளைச் செய்யலாம். ஆனால் அவர் தொடர்ந்து மக்களிடம் பேசிவந்தாரென்றால் அவரது தவறுகள் மன்னிக்கப்பட்டு, அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அப்போது வேறு வழியில்லாமல் பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிவரும். அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அதுதான் சாமானியனின் வெற்றி.

கருத்துகள் இல்லை: