சனி, 4 ஜனவரி, 2014

வைகோவின் லேட்டஸ்ட் அரிதாரம்: சமூக நீதிக்கு எதிராக ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம் !

ஜெயலலிதா அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கு என்று மதிமுக பொதுச் செயலளார் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு (Multi Speciality Hospital) மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பதிவாளர் போன்ற 83 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டிசம்பர் 27 ஆம் தேதி, மருத்துவ பணி நியமனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும், அவசர அவசரமாக ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருப்பதன் மர்மம் என்ன? முன்கூட்டியே குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்துவிட்டு, கண்துடைப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இங்கு பணி நியமனம் பெறும் மருத்துவப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் ஒன்றரை இலட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இதே தகுதி வாய்ந்த பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 70 ஆயிரம், உதவிப் பேராசிரியர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம். ஆனால், சிறப்பு மருத்துவமனையில் நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு அதிக அளவில் ஊதிய விகிதம் நிர்ணயித்து இருப்பது, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களை புண்படுத்தும் நடவடிக்கை ஆகும். அதோடன்றி, ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை.
மேலும், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது, ஜெயலலிதா அரசின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. சமூக நீதிக்கு அரண் அமைத்த பெரியாரும்,  அண்ணாவும் உலவிய திராவிட இயக்க மண்ணில், 1928 ஆம் ஆண்டில், முத்தையா முதலியார் முதன் முதலில் பிறப்பித்த வகுப்புரிமை ஆணை முதற்கொண்டு, இன்றளவும் இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கையில் இந்திய நாட்டுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு திகழ்கிறது. தற்போது, சமூக நீதி கோட்டிபாட்டின் ஆணிவேரையே வெட்டி வீழ்த்திடத் துடிக்கும் ஜெயலலிதா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு வெளியிட்டுள்ள பணி நியமான அறிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், முறையான இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு, சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: