திங்கள், 30 டிசம்பர், 2013

கூட்டணித் தாயே! மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் ! கம்யுனிஸ்டுகள் ஒப்பாரி


g-ramakrishnan-jaya-tha-வே.மதிமாறன்

திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று இதுவரை சொல்லிவந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது திமுக வின் நெருக்கடியின் காரணமாக ‘அதிமுக இல்லாத அணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (17.12.2013) செய்தியாளர்களிடம்,எந்தக் காரணம் கொண்டும் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கிடையாது. ’ என்று திட்டவட்டமாக தீர்த்திருக்கிறார். 

‘காங்கிரசின் எல்லா மோசமான செயல்களுக்கும் திமுக விற்கு உடன்பாடு இருக்கிறது. வரலாறு காணாத ஊழல்.’ என்று அதற்கு அவர் காரணம் காட்டியிருக்கிறார்.
ஊழல் இல்லாத கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வேண்டுமென்றால், சி.பி.எம்., சி.பி.ஐ உடனோ, சி.பி.ஐ., சி.பி.எம் உடனோ கூட கூட்டணி வைக்க முடியாது.
ஆனால் இவர்கள் ஊழலுக்கு எதிராக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறார்களாம். இவர்களை பற்றி மிக கடுமையான விமர்சனத்தை இவர்களின் அரசியல் நிலைபாடே அம்பலப்படுத்தும்போது, நாம் அதை விட கடுமையாக என்ன சொல்லிவிட முடியும்?
‘அம்மா பெங்களுருக்கு தனி நீதிமன்றத்தில் ஓய்வெடுக்கவா போகிறார்கள்?’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்பார்கள் போலும்.
‘தனி நீதிமன்றத்திற்கு வருகைத் தரும் ஊழலை ஒழித்த தாயே.. வருக.. வருக..’ என்று கட்டவுட் வைப்பார்களோ?
அப்படியே கட்டவுட் வைத்தாலும் அம்மா இவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ‘சீட்டு’ கிடைக்கிறதுக்கு முன்னால போயஸ் தோட்டத்து ‘கேட்’ டையே தாண்ட முடியாது.
தேர்தல் நாட்கள் நெருங்கியாச்சு என்றால், பாவம் போயஸ் தோட்டத்தில் வாட்ச் மேனுக்கு வேலை போனாலும் போயிடும். அந்த வேலையை கூட்டணிக் கட்சி தலைவர்கள் பார்க்கும் போது, தேவையில்லாமல் எதுக்கு வாட்ச் மேன்?
அவுங்களுக்குத் தெரியாதது எதுவும் நமக்கு தெரியப்போறதில்லை.. அவுங்களுக்கு தெரிஞ்ச உலக விசயம் நமக்கு புரியப் போறதே இல்லை. அப்படிப்பட்ட திறமைசாலியான இவர்களுக்கு அதிமுகவிடம் மிகவும் பிடித்தது என்னவாக இருக்கும்?
சமச்சீர் கல்வியை தடுத்தாட் கொண்டதா? அதற்கு எதிராக போராடிய தங்களின் SFI., DYFI  மாணவர்களை ரவுண்டு கட்டி அடித்ததா? கல்வியை தனியார் மயமாக்குவதில் ஆர்வம் காட்டுவதா?
தமிழ்ப் புத்தாண்டை மாற்றி சமஸ்கிருத புத்தாண்டை மீட்டெடுத்ததா? ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று துணிந்து மத்திய அரசுக்கு எதிராக நின்றதா? இல்லை சிதம்பரம் உச்சிக்குடுமி தீட்சதர்களுக்கு ஆதரவாக தமிழுக்கும் தமிழனுக்கும் தடை போட்டதா?
அம்மாவின் எந்த அவதாரம் கம்யூனிஸ்ட்டுகளை ஆட்கொண்டிருக்கும்?
‘சரி அத விடுவோம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போல் மிக எளிமையானவர்கள் யாரும் கிடையாது. எங்க போனாலும் பஸ்லதான போவார்கள்.’
ஆமாம். ஆனால், பஸ்ல போறது முக்கியமில்லை. எங்க போறாங்க? அதுதான் முக்கியம்.
போயஸ் தோட்டத்துக்கு பஸ்ல போன என்ன? கார் ல போன என்ன? இல்ல அடிதண்டம் போட்டுக்கிட்டு போனதான் என்ன? அந்த எளிமையால் மக்களுக்கு என்ன பயன்?
ஆனாலும் தோழர் ஜி.ராமகிருஷ்ணனோட தைரியத்தை ஒருவகையில் நாம் பாராட்டிதான் ஆக வேண்டும். ‘அதிமுக வுடன் கூட்டணி’ என்று அவரே அறிவிக்கிறார். இது வெகுளித்தனமாக இருந்தாலும் இந்த துணிச்சல் பாராட்டப்படக் கூடியதுதான்.
ஏன் என்றால் இவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்பதற்கு முன், போயஸ் தோட்டத்திற்கு உள்ளே விடலாமா? என்பதை அம்மா தானே முடிவு செய்வார்.
குறிப்பு : இதில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகள் அனைத்தும் தோழர். தா. பாண்டியனுக்கும் பொருந்தும். ஜி.ராமகிருஷ்ணன் என்று வருகிற இடங்களில் தா. பாண்டியன் என்று மாற்றி படித்துப் பார்க்கவும். சரியாக இருக்கும்.
*
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ‘கருஞ்சட்டை தமிழன்’ இதழுக்கு 18.12.2013 அன்று எழுதியது.

கருத்துகள் இல்லை: