சனி, 21 டிசம்பர், 2013

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார வர்க்க மாநாடுகளிலும் அம்மா பஜனைதான் ! கலெக்டர் மகரபூஷணம் :அம்மாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன் !


ஜெயலலிதாஇந்தியா மேதகு பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியின் கீழ் இருந்த போது அவ்வப்போது இந்திய சமஸ்தான மகாராஜாக்களின் மாநாடு நடக்கும். அந்த தர்பாருக்கு தமது மகாராஜா தொப்பி, பளபளக்கும் உடைகள் அணிந்து, பாதாதி கேசம் வரை நகைகள் அணிந்து, முன் பக்கம் மேல் வளைந்த செருப்பு அணிந்து போய் பேரரசரின் பிரதிநிதிக்கு மரியாதை செலுத்துவார்கள் சமஸ்தான மகாராஜாக்கள்.
மேதகு பேரரசரின் இந்திய பிரதிநிதி வைஸ்ராயிடம் மண்டியிட்டோ, தண்டனிட்டோ, போற்றி பாடியோ தமது கீழ்ப்படிதலை தெரிவித்துக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த மாநாடு வரை தத்தமது சமஸ்தானங்களில், தத்தமது அரண்மனை வாழ்வில் திளைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். நிர்வாகத்தையும், ஆட்சியையும், மக்களை சுரண்டுவதையும் பிரிட்டிஷ் பிரதிநிதி கவனித்துக் கொள்வார். ஒரு megalomaniac ஆட்சி எப்படி இருக்கும் என்பதை பார்த்து பாடம் படியுங்கள் 


அது போல, ‘புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில்’ தமிழ்நாட்டின் மாவட்டங்களையும், நகரங்களையும் ஆளும் ஆட்சித் தலைவர்களையும், போலீஸ் அதிகாரிகளையும் ஆண்டுக்கொருமுறை ஒரே இடத்தில் கூட்டி தன் மீதான அவர்களது விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் “தாயினும் சாலச் சிறந்த அம்மா”.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு மூன்று நாட்கள் நடந்திருக்கின்றது. அந்த மாநாட்டின் இறுதியில் 322 அறிவிப்புகளை தனது திருவாயால் அருளியிருக்கிறார் அம்மா. அறிவிப்புகளின் கூட்டுத்தொகை ஏழு வருகிறது. முன்பெல்லாம் ஒன்பதாக வரும். தற்போது நியூமரலாஜி மாறிவிட்டதோ என்னமோ?
தி.மு.க ஆட்சி மாநாட்டில் உள்ளது போல அமைச்சர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல் அம்மா சிங்கிளாகவே அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டு முடித்து, அ.தி.மு.கவில் தன்னைத் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாமே சைபர்கள்தான் என்ற உலகறிந்த உண்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பேசாத அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தர்கள, அயர்ந்து தூங்கினார்களா என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகாரிகள் அம்மா என்று ஒவ்வொரு முறையும் கூப்பிடும் போது கைதட்டும் வேலையை இவர்களை விட யார் கச்சிதமாக செய்ய முடியும்?
அதிகார வர்க்க குறுநில மன்னர்கள் கீழ்ப்படிதலை காட்டுவதோடு தமது கோரிக்கைகளை முன் வைக்கவும், அவற்றை பரிசீலித்து அருள் பாலிக்கவும் அனுமதித்திருக்கிறார் அம்மா. உதாரணமாக, நீலகிரி எஸ்.பியான செந்தில் குமார், “நீலகிரியில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு நீல நிற கோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக நீல நிற கம்பளி உடை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையை அம்மாவின் திருச்செவிக்குள் போட, அம்மா உடனடியாக, “உடனே வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல… மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை” என்று அருள்பாலித்தார். பக்த கோடிகளின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
குளிருக்கு கம்பளி வேண்டும் என்று கேட்பதும், அதை தானம் செய்வதுமான அரசு நடைமுறைகள் இந்த பூவுலகில் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை. நீலகிரி போலீஸ்காரர்களுக்கு அம்மாவின் ராசியான நிறமாக பச்சை நிறத்தில் கம்பளி உடைகள் வழங்க வாய்ப்பில்லை என்ற குறை இருந்தாலும், மாநாட்டில் கலந்து கொண்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தனியாக கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகள் பச்சை நிறத்தில் இருந்தது. அடையாள அட்டை நிறத்தில் கூட அதிகார வர்க்கம் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறது. என்னா ஒரு அம்மா எஃபக்ட்டு!
விழுப்புரம், சேலம், நாமக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை கலெக்டர்களும், சேலம், கன்னியாகுமரி எஸ்.பிக்களும் முதல்வரை அம்மா என்றுதான் அழைத்திருக்கிறார்கள். அம்மாவின் தாயுள்ளம், அ.தி.மு.க தொண்டர்களையும், தண்டனிடும் அமைச்சர்களையும் தாண்டி அதிகாரிகளையும் ஆட்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக விளங்கியது.
நாம் மேலே கடன் வாங்கியிருக்கும், “தாயினும் சாலச் சிறந்த அம்மா” என்று தமிழ் மொழியை வளப்படுத்தும் வாக்கிற்கு சொந்தக்காரர் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரன்.
சேலம் கலெக்டர் மகரபூஷணம் “அம்மாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்” என்று தனது ஐ.ஏ.எஸ் ஆளுமையை அம்மாவின் காலில் சமர்ப்பித்திருக்கிறார்.
கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற அம்மா செயல்பட்டு வருகிறார்” என்று அன்னலட்சுமி தாயான அம்மாவின் தர்ம குணத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
விழுப்புரம் கலெக்டர் தனது ஐஏஎஸ் பயிற்சியையும், நவீன தொழில்நுட்பத்தையும் திறமையாக இணைத்து, அம்மா பல ஆண்டுகளாக கஜானாவில் சேர்த்து வைத்த பணத்தில் வாரி வழங்கிய சீருடைகள், ஸ்கூல் பேக், புத்தகங்கள், ஜாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், சத்துணவு, இலவச பஸ் பாஸ் இவற்றை எல்லாம் பெற்ற பள்ளி மாணவர்கள் உருகி பேசும் காட்சிகள் இடம் பெற்ற, குறும்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
“அம்மா.. உங்களால், எங்க வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர்,  ஃபேன், கறவை மாடுகள் எல்லாம் கிடைச்சுது. செலவே இல்லாமல் எங்களுக்கு கல்வியைக் கொடுத்திருக்கீங்க. நீங்கள் எப்ப பிரதமர் ஆகப் போறீங்கன்னு ஆவலாகக் காத்திருக்கிறோம்”. அம்மாவின் எதிர்கால கனவுக்கு அச்சாரம் சொன்ன வசனத்துக்கு கூடியிருந்து ஐபிஎஸ்களும், ஐஏஎஸ்களும் தட்டிய கைத்தட்டல் அடங்கவேயில்லையாம். அம்மாவின் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ஒளிர்ந்ததாம். பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கு குறித்து இதே முகம் எப்படி எதிர்கொள்ளும் என்ற குறுகுறுப்பு ஒரு நல்ல கற்பனை.
ஈரோடு கலெக்டர், தனது பரந்து விரிந்த உலக அறிவைக் கொண்டு ஆய்வு செய்து ஒரு முடிவை அறிவித்தார். “உலகத்துக்கே இந்தியா முன்னிலை வகிக்கப் போகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், பாரத தேசத்துக்கே முன்னிலை வகிக்கும் சாத்தியக் கூறுகள் தமிழகத்தில் தெரிகின்றன” என்று அம்மாவின் செங்கோல் ஆட்சியின் கீழ் தமிழகம் அடைந்துள்ள உன்னத நிலையை விளக்கியிருக்கிறார். “நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன” என்று சண்முகம் சொன்ன போது குறுக்கிட முதல்வர் அம்மா அவர்கள், “கால்கள் இருந்தால்தான் ஒருவர் நடமாட முடியும்” என்ற அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டு, சண்முகம் போன்ற ஆய்வாளர்களுக்கே தான் முன்னோடி என்பதை நிறுவினார். தொடர்ந்து, “அதனால், நடமாடும் என்று சொல்லக் கூடாது. நகரும் மருத்துவமனை என்று குறிப்பிடுங்கள்” என்று திருத்தினார். முச்சங்கம் கண்ட தமிழில் அம்மாவுக்கு இருக்கும் ஆழமான புலமையைக் கண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் வர்க்கங்கள் திகைத்துப் போயின.
சேலம் எஸ்.பியான சக்திவேல் அம்மாவின் ஆட்சியில் இடைத்தேர்தல்களில் கூட அம்மா வன்முறையை ஒழித்துக் கட்டி விட்டது குறித்து தனது வியப்பை வெளியிட்டார். “தி.மு.க. நிர்வாகி மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் கூட ஏற்காடு தேர்தலில் எந்த வன்முறையும் ஏற்படாத வகையில் அம்மாவின் ஆட்சி சட்டம் ஒழுங்கை கடைப்பிடித்தது” என்ற அவதானிப்பை பதிவு செய்த அவர், தேர்தலில் “அம்மா மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவுக்கே சாதனையை நிகழ்த்திக் காட்டினார்” என்று  தேர்தல் நடத்துபவரும் தானே, சட்ட ஒழுங்கை பராமரிப்பவரும் தானே, தேர்தலில் போட்டியிடுபவரும் தானே, வெற்றி பெற்றதும் தானே என்ற அம்மாவின் சர்வவியாபகத் திறனை உணர்ந்த உண்மையான பக்தனாக மிளிர்ந்தார்.
டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக, “எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் அகற்றச் சொல்லி விட்டேன். அதையும் மீறி அகற்றாமல் இருக்கும் பேனர்களை நீங்கள் எந்த தயவு தாட்சணியமும் பார்க்காமல் அகற்றலாம்” என்று  அந்த விஷயத்தில் அ.தி.மு.கவினரிடம் போலீஸ்காரர்கள் கறாராக நடந்து கொள்ளலாம்; ‘போலீஸ் என்றால் அவ்வப்போது விறைப்பு காட்டினால்தானே மதிப்பு, ஒரேயடியாக குழைந்து கொண்டே இருந்தால் காவல் துறையின் தன்னம்பிக்கை என்ன ஆகும்’ என்பதை உணர்ந்து கருணை பாலித்தார் அம்மா. ஆனால் விழா முடிந்த பிறகுதான் பேனர்களை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ள படியால் அவர் தொண்டர் அடிமைகளையும் கைவிடவில்லை, அதிகார அடிமைகளையும் கைவிடவில்லை என்பதை புரிந்து கொள்க.
திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன், “நான் உங்களோடு நிற்பேன்” என்று உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னரும், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனேயே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படையை இடிந்தகரைக்கு திருப்பி விட்டு மக்களைத் தாக்கிய அம்மாவினை டைனமிசத்தை உணர்ந்து, அவருக்கு டைனமிக் லீடர் என்று நாமம் சூட்டி மகிழ்ந்தார்.
கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கும், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ் யாதவும் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமான இந்துத்துவ நிகழ்வுகளைப் பற்றிய சாதனைகளை குறிப்பிட்டார்கள். திருச்சியில் மோடி வருகைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது, கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திக் கொடுத்தது என்று தொடரும் அம்மா அரசின் சாதனைகளை விளக்கினர்.
அம்மாவுக்கு பழைய லாட்டரி வியாபாரி மார்ட்டின் பற்றி நினைவு வந்து விட, கோவையில் சட்ட விரோத லாட்டரி வியாபாரம் நடக்கவில்லை என்று உறுதி செய்து அம்மாவை மகிழ்வித்தார் அர்ச்சனா.
“சி.பி.சி.ஐ.டி.யின் நரேந்திரபால் சிங், சைபர் கிரைம் அதிகரித்துக்கொண்டே போவதால் அது தொடர்பான விசாரணைக்கு சாஃப்ட்வேர், ஹார்ட்வேர்கள் எல்லாம் தேவைப்படுகின்றன. அதற்கு அரசு உதவ வேண்டும்” என்று அம்மாவிடம் கோரிக்கையை முன் வைத்தார். அம்மாவுக்கு கோப்புகளில் எழுதி அனுப்பி இத்தகைய கோரிக்கைகளை கேட்பதை விட நேரில் கேட்பதற்கு பவர் அதிகம் என்பதை, புட்டபர்த்தி சாயிபாபாவை படத்தை வைத்து வழிபடுவதை விட நேரில் சந்தித்து பாதம் பணிவது அதிக பலனளிப்பது என்பதுடன் ஒப்பிட்டுப்பார்த்து ஆன்மீக அன்பர்கள் மகிழலாம்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சென்னையில், கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் முந்தைய ஆண்டுகளை குறைவாக உள்ளது என்று பெருமைப்பட்டிருக்கிறார். ஆனால், ஆட்சிப் பொறுப்பு ஏற்றுவுடனேயே கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று அம்மா அறிவித்திருந்தும் இன்னமும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடப்பது ஏன்? ஒருவேளை கிரிமினர்களும் அம்மா ஆட்சியை விரும்புகிறார்களோ என்னமோ!
சட்டமன்றத்தில் மட்டுமல்ல, ஊடகங்களின் தலையங்கத்தில் மட்டுமல்ல, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார வர்க்க மாநாடுகளிலும் அம்மா பஜனைதான் என்பதை நிரூபித்த இந்த மாநாட்டிற்கு நாம் நிறையவே நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இனி இந்த படிச்ச கோமான்கள் நாட்டை திருத்துவார்கள் என்று கருத்து கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள் அல்லவா?
-    அப்துல் vinavu .com 

கருத்துகள் இல்லை: