திங்கள், 17 ஜூன், 2013

குவைத்தில் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

டெல்லி: குவைத்தில் தமிழர்கள் இருவருக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (30). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக குவைத்தில் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர். இதேபோல், திருவாரூர் அருகேயுள்ள சித்தாம்பூரைச் சேர்ந்த தாஸ் (எ) காளிதாஸும் குவைத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் சுரேஷுக்கும், காளிதாஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி குவைத் நாட்டுப் போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுரேஷ், காளிதாஸ் இருவரையும் ஜூன் 18-ஆம் தேதி தூக்கிலிடுவதாக குவைத் நாடு அறிவித்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது. தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்று சுரேசின் தாயாரும், கணவரை காப்பாற்ற வேண்டும் என்று காளிதாஸின் மனைவியும் நேற்று ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
இதனையடுத்து மத்திய அரசின் துரித நடவடிக்கையினால் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை குவைத்திற்கான இந்திய தூதர் சதீஷ் மேத்தா, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகிய இருவருக்கும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதால், வார இறுதி நாளாக இருந்த போதிலும் குவைத் அரசு அதிகாரிகளைத் தாம் தொடர்பு கொண்டு தண்டனையை நிறுத்தி வைக்க கோரினோம். குவைத் சட்ட அமைச்சர் ஆகாஃப் உள்ளிட்டோரின் தலையீட்டின் பேரில் தமிழர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குவைத்திற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: