வியாழன், 20 ஜூன், 2013

உத்தரகாண்டில் ஆயிரம் பேருக்கு மேல் பலி ? யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம்

புதுடெல்லி : உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும்
சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள தகவல்கள் பதைக்க வைக்கிறது.  உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால்  ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் 100 பேர் பலியாயினர். ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உட்பட 73 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, சமோலி, உத்தரகாசி போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு லட்சம் பக்தர்கள் சாலைகள் சேதம் அடைந்ததால் ஆங்காங்கே சிக்கியுள்ளனர்.
பொதுமக்களும் பல இடங்களில் வெள்ளத்துக்கு இடையே சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவற்றின் மூலம் உணவு பொட்டலங்கள், உணவு பொருட்கள் போடப்படுகின்றன,

வட மாநிலங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக துவம்சம் செய்த மழை, பல்வேறு இடங்களில் நேற்று சற்று ஓய்ந்தது. வெப்பநிலையும் சாதகமாக இருந்ததால், மீட்பு பணிகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டன. உத்தரகாண்டில் மழை, வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் யாத்திரிகர்கள். வெள்ளம், நிலச்சரிவால் கூட்டம் கூட்டமாக சேற்றில் புதைந்து இவர்கள் இறந்துள்ளனர். புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகே 50 பக்தர்கள் புதைந்து பலியாகினர். வெள்ளத்தில் இக்கோயில் முழுமையாக மூழ்கி விட்டது. இதனால், கோயில் அப்படியே இருக்கிறதா? இடிந்து விட்டதா என தெரியவில்லை என மாவட்ட கலெக்டர் ஜஸ்பால் ஆர்யா கூறினார்.

இக்கோயிலுக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கு 6 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர். உத்தரகாண்ட் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெள்ளத்தாலும், நிலச் சரிவாலும் ஆங்காங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் புனித யாத்திரை சென்றவர்கள். உத்தரகாண்டில் 200 கார்கள், 2 மண் அள்ளும் பிரம்மாண்ட இயந்திரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. காரையோரம் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஹெலிகாப்டரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும், நிருபர்களும் நிலச்சரிவால் பூ என்ற இடத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

அரியானா , உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் கத்திமா , பானிபட் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டு விட்டது. உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், ‘‘இமயமலை சுனாமியால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கக்கூடும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பலி எண்ணிக்கையை பற்றி சரியாக கூற முடியாது’’ என்றார் dinakaran.com

கருத்துகள் இல்லை: