ஞாயிறு, 16 ஜூன், 2013

மாமூல்' பட்டியலில் உளவுப்பிரிவு போலீஸார்: அதிர்ச்சி தகவல் அம்பலம்

திருச்சி: போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர, "மாமூல்' பட்டியலில், உளவுப் பிரிவு போலீஸாரும் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தமிழக போலீஸ் துறையில், மாநகராட்சிகள் போலீஸ் கமிஷனர் தலைமையிலும், மாவட்டங்கள் போலீஸ் எஸ்.பி., தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.இதில், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில், ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவுப் பிரிவும், மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் எஸ்.பி., எனப்படும தனிப்பிரிவும் செயல்பட்டு வருகிறது. மாநகரில் ஒரு உதவி கமிஷனர் தலைமையிலும், மாவட்டத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலும் இப்பிரிவுகள் செயல்படுகிறது.இந்த பிரிவுகள் சார்பில், மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், ஒரு போலீஸார் நியமனம் செய்யப்படுவர். அந்த குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள், வழக்குகள், புகார்கள், கொலை, கொள்ளை, அடிதடி என அனைத்து தகவல்களையும், சேகரித்து, கமிஷனர் அல்லது எஸ்.பி., அலுவலகத்தில் செயல்படும், ஐ.எஸ்., அல்லது எஸ்.பி., பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.


அந்தந்த பிரிவுகளில் இருந்து முக்கிய தகவல்கள், கமிஷனருக்கும், போலீஸ் எஸ்.பி.,க்கும், சென்னையில் உள்ள தலைமை அலுவலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.இதுதவிர, எஸ்.பி.சி.ஐ.டி., என்ற உளவுத் துறை, மாநகருக்கும், மாவட்டத்திற்கும், என தனித்தனியே செயல்படுகிறது. இந்த பிரிவு சார்பிலும், அனைத்து போலீஸ் ஸ்டேஷ்களிலும், ஒருவர் நியமனம் செய்யப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.ஐ.எஸ்., அல்லது எஸ்.பி., மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸார், போலீஸ் ஸ்டேஷன்களில் உளவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் முழுக்க முழுக்க உளவுத் துறை அளிக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளையும், தமிழக அரசு மேற்கொள்ளும்.

இதர தகவல்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம், செயல்பாடு, அமைச்சர்கள் செயல்பாடு, போலீஸ் அதிகாரிகளின் செயல்பாடு, இதர கட்சிகளின் செயல்பாடு என அனைத்து விஷயங்களிலும், உளவுத் துறை போலீஸாரின் கையே ஓங்கியிருக்கும்.இதனால், அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு போலீஸாருக்கு அதிக மவுசு உண்டு. அ.தி.மு.க., அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், என அனைவரும், உளவு பிரிவு போலீஸாரை கண்டால் சற்று அலர்ஜி அடைவார்கள். இதே போல், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட ஐ.எஸ்., மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸாரை "தாஜா' செய்து வைத்துக் கொள்வர்.இதை பயன்படுத்தி, ஐ.எஸ்., எஸ்.பி., மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போன்ற உளவு பிரிவு போலீஸார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, மதுபான பார்கள், சூதாட்ட கிளப்புகள், லாரி ஷெட்கள், லாட்டரி விற்பனை, கடை வீதி, நகை கடைகள் உள்பட சில தொழில்களில் இருந்து, மாதந்தோறும், சம்மந்தப்பட்ட பகுதி அடங்கியுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், உயர் அதிகாரிகள் வரை "மாமூல்' வழங்குவது நடைமுறையில் உள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஏட்டு, முதல் நிலை போலீஸார் வரை, குறிப்பிட்ட அளவிலான பணம், அவரவர் பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்.இந்த பட்டியலில் தற்போது. உளவு பிரிவு போலீஸாரும் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் "மாமூல்' வழங்கப்பட்டு வருகிறது. இதனால், போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் சம்பவங்கள், விபரங்கள் மறைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

அதோடு, அ.தி.மு.க., நிர்வாகிகளிடமும் உளவு பிரிவு போலீஸார் மாமூல் பெற்றுக் கொண்டு, முழு தகவல்களை அளிக்காமல், பாரபட்சமான தகவல்களை அளித்து வருகின்றனர். இவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் தங்களது சுயநலத்திற்காக, தவறாகவும் பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.லஞ்ச ஒழிப்புத் துறை, சி.பி.ஐ., போன்றவற்றில், மாநில போலீஸார் தான் விருப்பத்தின் பேரில் பணிபுரிந்து வருகின்றனர். விருப்பம் தெரிவிக்கும் போலீஸாரை, பல கட்ட விசாரணைக்கு பின், அவரது நேர்மை தன்மையை அறிந்து கொண்டு தான் பணியில் சேர்க்கின்றனர்.அதே போல், மாநில அரசின் உளவு பிரிவில் பணிபுரியும் போலீஸாரை பணி நியமனம் செய்வதற்கு முன், இது போன்ற விசாரணைகளை முடித்துக் கொண்டு பணி அமர்த்தினால், உண்மையான தகவல்கள் அரசை சென்றடையும் என ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: