வெள்ளி, 21 ஜூன், 2013

Badri Seshadri :தனியார் பொறியியல் கல்லூரிகளும் கல்விக் கட்டணமும்

எஸ்.ஆர்.எம் குழுமக் கல்வி நிறுவனங்களிலும் அவர்களுடைய பிற
நிறுவனங்களிலும் (புதிய தலைமுறை தொலைக்காட்சி சேர்த்து) இன்று வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்துக்கு மேலாகப் பணம் வாங்கப்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். என் நண்பர் ஒருவர், கடந்த பத்து நாள்களுக்குமுன் சென்னையின் ஒரு பொறியியல் கல்லூரியில் ஆறு லட்ச ரூபாய் கொடுத்து  சீட் வாங்கியதாகச் சொன்னார். என் தூரத்து உறவினர்கள் பலரும் தத்தம் பிள்ளை/பெண்களுக்கு கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்துத்தான் பொறியியல் கல்லூரிகளில் சீட் வாங்கிக்கொடுத்துள்ளனர். 2 லட்சம் முதல் 7-8 லட்சம் வரையில் இருக்கலாம். நான் இரு ஆண்டுகள் முன்புவரை வசித்துவந்த அடுக்ககத்தில் ஒரு பெற்றோர் தன் பெண்ணுக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கிக்கொடுத்தனர். இதுகுறித்துச் சில கேள்விகளை மட்டும் இங்கே எழுப்ப முனைகிறேன்.
1. இப்போதைய இந்தியச் சட்டங்களின்படி கல்வி நிறுவனங்களை நடத்தும் அறக்கட்டளைகள் லாபநோக்கு அற்றவையாக இருக்கவேண்டும். அப்படியானால், இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்துத் தனியார் பொறியியல், மருத்துவ, கல்வியியல் கல்லூரிகளுமே சட்டத்துக்குப் புறம்பாகத்தான் நடந்துகொள்கின்றன.
2. யூ.ஜி.சி கட்டுப்பாடு, ஏ.ஐ.சி.டி.ஐ/ எம்.சி.ஐ/ என்.சி.டி கட்டுப்பாடு, பல்கலைக்கழகக் கட்டுப்பாடு, மாநில அரசின் கட்டண வசூல் கட்டுப்பாடு என்று எண்ணற்ற கட்டுப்பாடுகளின்கீழ் திண்டாடும் தனியார் கல்லூரிகளால் வெளிப்படையாகத் தங்களுக்கு இவ்வளவு கட்டணம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்ள முடியாத நிலையே இருக்கிறது. அரசு குறிப்பிடும் கட்டணத்துக்குள்ளாக ஒரு பொறியியல் கல்லூரியை நடத்த முடியாது. பின் ஏன் மத்திய/மாநில அரசுகள் இந்த மோசமான நிலை தொடர்ந்து நடக்கக் காரணமாக உள்ளன?

3. வெளிப்படையாக ரசீது கொடுத்து, காசோலை/வரைவோலையில் கட்டணம் வாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேசைக்கு அடியில் பணத்தைக் கட்டுக் கட்டாக வாங்குகிறார்கள். விளைவு, கடுமையான கருப்புப் பணம் உருவாகும் சூழல். இதை எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் தடுக்க முடியாது. பிரச்னை கொள்கை அளவில் இருக்கிறது. இதனை வருமான வரித்துறையினால் எதிர்கொள்ளவே முடியாது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய மத்திய அரசு ஏன் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது?

4. எத்தனை பணம் கேட்டாலும் கொடுப்பதற்கு மாணவர்களும் பெற்றோரும் என் தயாராக இருக்கிறார்கள்? அவ்வளவு பணம் கொடுத்துப் படிப்பதால் மாணவர்களுக்கு உண்மையிலேயே ஏதேனும் நன்மைகள் கிடைக்கின்றனவா?

5. தனியார் கல்லூரிகளும் தங்களுக்குரிய அனுமதிகளைப் பெறுவதற்குக் கட்டு கட்டாகப் பணம் லஞ்சமாகத் தரவேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அறிகிறேன். இதை எதிர்த்துப் போராட தனியார் கல்லூரிகள் சிலர்கூடத் தயாராக இல்லையா?

6. ஏன் கல்வியை லாபநோக்கற்ற துறை என்று சொல்லவேண்டும்? இது பொய், பம்மாத்து என்று தெரிந்தே இதனை ஏன் செய்கிறோம்? ஏன் இதனை லாபநோக்குள்ள ஒரு தொழில்துறையாக அறிவித்துவிடக்கூடாது? அப்படிச் செய்தாலாவது, (அ) வெளிப்படைத்தன்மை (ஆ) பெறும் லாபத்தில் நியாயமான வருமான வரி (இ) கருப்புப் பணம் தடுப்பு (ஈ) கல்வி நிலையங்களை வாங்குவதும் விற்பதும் எளிதாவது (உ) வென்ச்சர் கேபிடல் பணம் இந்தத் துறைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு ஏற்படுதல் ஆகியவற்றைச் சாதிக்க முடியுமே?

கருத்துகள் இல்லை: