வெள்ளி, 31 மே, 2013

பிரபலமான எழுத்தாளன் எல்லாம் பெரிய எழுத்தாளன் அல்ல , மதிமாறன்

எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் வெறுப்பாக எழுதி வருகிறார்களே?
-தமிழன்வேலு.
வாசகர்கள் எழுத்தாளர்களின் தகுதிக்கு மீறிதான் அவர்களை கொண்டாடுகிறார்கள். ‘செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதுபோல், ‘பிரபலமானவர்கள்தான் அறிவாளிகள்’ என்கிற மூடத்தனத்தின் தொடர்ச்சியாக, பிரபலமானவர்களையே எழுத்தளார்களாக மதிக்கிற மனோபாவமும் சமூகத்தில் நிரம்பி இருக்கிறது. அதனாலேயே எழுதுபவர்கள் எப்படியாவது பிரபலமாகிவிடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே எழுதுகிறார்கள்.
அதுபற்றியெல்லாம் ‘பிரபல’ எழுத்தாளர்கள் பேச மாட்டார்கள். பிரபலமாக இருப்பதினாலேயே எழுத்தாளர்களாக இருப்பவர்களாயிற்றே.
உண்மையில் எழுத்தாளனை எழுத்தாளன்தான் மதிப்பதில்லை.
ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனை பார்த்து ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய்’ என்று எழுதினான். தாலியறுத்து பிழைக்கிற பொறுக்கிக் கூட மாற்றுத் திறனாளியை இப்படி இழிவாக சொல்லமாட்டான். ஆனால் இப்படி எழுதியவர், பெரிய எழுத்தாளனாக கொண்டாடப்படுபவர்.

அந்த மாற்றுத் திறனாளி எழுத்தாளராக மட்டும் இல்லாமல், பதிப்பாளராகவும், புரவலாகவும் இருப்பதால், அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக, இன்னொரு பிரபல எழுத்தாளன், தன் பதிப்பாளரை இழிவாக திட்டிய பெரிய எழுத்தாளனின் புத்தகங்களை பொதுஅரங்கில் கிழித்தெறிந்தார்.
இன்னொரு கவிஞன் குடிப்பதற்காக பணம் கேட்டு, எதிர்ல வர்றவன்கிட்ட எல்லாம் கையேந்துவார்.
மற்றொரு எழுத்தாளன் பிள்ளைமார் ஜாதி பெருமை பேசி அதனூடாக நாவிதர் சமுதயாத்தை இழிவாக சித்தரித்தார்,
தாங்க முடியாத வறுமையில் இருப்பதாக சித்தரித்து, இளிச்சவாயர்களிடம் பணம் யாசகமாக பெற்று, வட்டிக்கு விடுகிற எழுத்தாளர்களும், கவிஞர்களும் இருக்கிறார்கள்.
பதிப்பகம் நடத்துகிற எழுத்தாளர்களில் சிலர், புதிய புத்தகம் கொண்டுவர விரும்பும் எழுத்தாளரிடம் குறிப்பாக வெளிநாடு வாழ் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் புத்தகத்தை அவர் செலவிலேய தன் பதிப்பக வெளியீடா வெளியிட்டு, அதுலேயும் கமிஷன்..
இன்னொரு எழுத்தாளன்; பெண் எழுத்தாளர், பெண் வாசகரின் கையபுடிச்சி இழுத்திருக்கிறார்.
தன் பத்திரிகையில் கவிதை, கதை, கட்டுரை இன்னும் பிற விஷயங்களை எழுதுகிற பெண்களுக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக பெருமையோடு பேசி சிரிக்கிறார் எழுத்தாள பத்திரிகையாளர்.
இன்னும் பல ஆண், பெண் எழுத்தாளர்கள் வாங்குன பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதும், ஓசியில் உடம்பை வளர்ப்பதுமாக இருக்கிறார்கள்.
எழுத்தாளர்கள் இப்படி பொறுக்கிகளாகவும், மத, ஜாதி வெறியர்களாகவும், நம்பிக்கை துரோகிகளாகவும் இருந்து கொண்டு, அவர்களை மதிக்கவில்லை என்று சபிக்கிற முனிவர்களாகவும் இருப்பதுதான் பயமாக இருக்கிறது.
‘எழுத்தாளனுக்கு ஒரு கர்வம் இருக்கும்’ என்கிறார்கள். உண்மை அதுவல்ல, கொள்கையாளர்களுக்குத்தான் தான் கொண்ட கொள்கையின்பால் அவர்களிடம் இயல்பாகவே கர்வம் இருக்கும்.
உண்மையில் எழுத்தாளன் என்பவன், ‘அரசியல்வாதி, பணக்காரன், நூலகத்திற்கு புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரி, அமைச்சர், இவர்களுடன் உறவை ஏற்படுத்தி கொடுக்கும் தரகர், சினிமாக்காரன், பிரபலமானவன், தொழில் அதிபர் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி பொறுப்பாளர்கள் இவர்களிடம் கூழக்கும்பிடு, அடிதண்டம் போடுவதும்;
தன்னை பெரிய எழுத்தாளனாக மதிக்கும் அப்பாவி வாசகர்களிடம் எழுத்தாள மிடுக்கோடும் திமிரோடும் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். இதுதான் எழுத்தாளனுக்கு இருக்கிற கம்பீரம் மற்றும் கர்வத்தின் ரகசியம்.
பொதுவாக கவிஞர்கள் அல்லது புலவர்கள் மன்னர்களிடம், புரவலர்களிடம் பம்முவதும், அவர்கள் முன்னால் யார் பெரிய ஆள் என்று காட்டுவதற்காக, ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சி மற்றும் பொறமையினால் சண்டையிட்டுக் கொள்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
பெரியார் காலத்திலும் அப்படித்தான். பெரியார் சொல்வார், ‘இரண்டு புலவனுக்கு மத்தியில் ஒரு போலிஸ் ஸ்டேசன் வைக்கணும்’ என்று.
‘தமிழ் உணர்வு’ கொண்ட அந்தக் காலத்து புலவர்களின் லட்சணமே அதுவென்றால், ‘அற்ப உணர்வு’ கொண்ட இந்தக் காலத்து எழுத்தாளர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
‘ரஜினி, கமல் இன்னும் பிற நடிகர்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை எழுத்தாளர்களுக்குத் தருவதில்லை’ என்றும் வருத்தப்படுகிறார்கள் பக்கத்து இலைக்கு பாயசம்’ என்கிற பாணியில் வளரும் எழுத்தாளர்கள் .(பிரபலமாவதற்கான வேலைகளில் தீவிரமாக இருப்பவர்களுக்கு ‘வளரும் எழுத்தாளர்’ என்ற கண்ணியமான பெயரும் உண்டு.)
வளரும் எழுத்தாளர்கள் சொல்வது சரிதான். நாமும் நடிகர்களைவிட உயர்வாக எழுத்தளார்களை மதிக்கலாம் என்றால்,
எழுத்தாளனோ ரஜனி, கமல் இன்னும் பிற நடிகர்கள், இயக்குநர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அய்யா எதவாது பாட்டெழுத, வசனம் எழுத வாய்ப்பிருந்த போடுங்கய்யா..’ என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: