புதன், 29 மே, 2013

கிரெடிட் கார்டு மோசடி 5 பேர் விமான நிலையத்தில் கைது !

சென்னை: தமிழகத்தை கலக்கி வந்த கிரெடிட் கார்டு மோசடி கும்பலை சேர்ந்த
5 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்களிடம், கியூ பிரிவு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு, போலி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வெளிநாட்டில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் போது, ஷாப்பிங் சென்டரிலேயே அதற்கென உள்ள நவீன கருவி மூலம் பாஸ்வேர்ட் உள்பட கார்டுகளின் தகவல்களை, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பதிவு செய்வது தெரிய வந்தது.
அந்த தகவல்களை திருடும் கும்பல், இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கு அனுப்புகின்றனர். பல நேரங்களில் வெளிநாடுகளிலேயே போலி கிரெடிட் கார்டுகளையும் தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. போலி கிரெடிட் கார்டு மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கில் பணம் எடுப்பதும், ஷாப்பிங் செய்தும் தொடர்ந்து இந்த கும்பல் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. குறிப்பாக இந்த மோசடியில் இலங்கையை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தெரிந்தது. இதையடுத்து, இலங்கை தமிழர்கள் சிலரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.


தொடர்ந்து நடந்த விசாரணையில், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வர்த்தக வளாகங்களில் வெளிநாட்டு தொழில் அதிபர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளின் டேட்டாக்களை திருடியது உறுதி செய்யப்பட்டது. டேட்டாக்களை எடுத்து கொண்டு வெளிநாடுகளில் இருந்து சிலர் சுற்றுலா விசாவில் அடிக்கடி சென்னை வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் பற்றிய ரகசிய தகவல்களை, விமான நிலைய அதிகாரிகளுக்கு கியூ பிரிவு போலீசார் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த முகமது இம்ரான் (24) என்பவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் விசாரித்த போது, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு 4 இலங்கை தமிழர்கள் வருவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கியூ பிரிவு டிஎஸ்பிக்கள் சந்திரன், செல்லத்துரை ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது விமானத்தில் வந்த இலங்கை தமிழர்கள் பிரகாஷ், முரளீதரன், சுந்தரேசன், சந்திரமோகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் 4 பேருமே கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். அங்கு உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக இதுபோல போலி கிரெடிட் கார்டு டேட்டாக்களை வாங்கி வந்து சென்னையில் உள்ள ஆசாமிகளிடம் கொடுத்துள்ளனர். சென்னையில் போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கம், விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி உள்ளனர். அவற்றை விற்று பணமாக்கி மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரிடமும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: