புதன், 29 மே, 2013

கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் மர்மச் சாவு

கோவை: போதையில் வாகனம் ஓட்டியதாக, போலீஸ் ஸ்டேஷனுக்கு
அழைத்து வரப்பட்ட ஆட்டோ டிரைவர் திடீரென இறந்தார். இதுதொடர்பாக மனைவி, உறவினர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். கோவை போத்தனூர் ரயில்வே காலனி கருப்பண்ண கவுன்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மார்ட்டின்(31). இவரது மனைவி ஜெபசாந்தி மெர்லின். இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை. மார்ட்டின் சரக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து மார்ட்டின் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, போத்தனூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த மார்ட்டின் ஆட்டோவையும் சோதனை செய்ததில், அவர் மது குடித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சிக்கிய மேலும் சிலருடன் மார்ட்டினை யும், போத்தனூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில் இருந்த மார்ட்டின் போன் மூலம் தனது உறவினர் சுதாகர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த மார்ட்டின் திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக, அவரை அவரது ஆட்டோவில் வைத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் அளித்த தகவலின் பேரில், மார்ட்டினின் மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த மார்ட்டினின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும். இதனிடையே, மார்ட்டின் இறந்ததில் மர்மம் உள்ளது, அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில், கோவை ஜேஎம் 7 கோர்ட் மாஜிஸ்திரேட் ஹேமநந்தகுமார், அரசு மருத்துவமனைக்கு சென்று, உடலை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள், மெர்லின் மற்றும் உறவினர்களிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்dinakaran.com

கருத்துகள் இல்லை: