ஞாயிறு, 3 மார்ச், 2013

தமிழக காங்கிரஸ் உடைகிறதா? G.K.வாசன் வீட்டில் ஆதரவாளர் கூட்டம்!

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நீக்கப்பட்டதன் எதிரொலியாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் தனிக் கட்சி (தமிழ் மாநில காங்கிரஸ்?) தொடங்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து யுவராஜா, அமைச்சர் வாசனின் ஆதரவாளர். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவி ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதற்கு யுவராஜாதான் காரணம் என்று பரவிய செய்தியை ஆதாரமாக வைத்து, இரண்டு வாரங்களுக்கு முன்பே அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லும்படி காங்கிரஸ் மேலிடம் வாசனிடம் கூறியுள்ளனர்.
ஆனால், ஆதாரம் இன்றி யுவராஜாவை ராஜினாமா செய்யச் சொல்ல முடியாது என்று வாசன் கூறிவிட்டார்.

வாசனை மீறி, கடந்த சில தினங்களுக்கு முன் யுவராஜா திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது ஜி.கே. வாசனையும் அவரது ஆதரவாளர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
காங்கிரஸ் தலைமையின் மீதும் வாசன் அதிருப்தியில் இருந்தார். அதன் வெளிப்பாடாகவே ராஜபக்ஷே இந்திய வருகையை தவிர்த்து இருக்கவேண்டும் என்றும், ஆசிய தடகளப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்தமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னதை வரவேற்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் பேசினார்.
இன்று காலை முதல் சென்னையில் உள்ள வாசனில் இல்லத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் யுவராஜா நீக்கம் பற்றி பேசியதாக தெரிகிறது. இவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் வாசன் இல்லத்துக்கு வரவைத்தது யார்? வாசனின் சிக்னல் இல்லாமல் வந்தார்களா இவர்கள்? சந்தேகம்தான்.
வந்தவர்கள், “தனிக்கட்சி தொடங்க வேண்டும்” என்று கோஷம் போடுவதற்கும் யாராவது சொல்லிக் கொடுத்திருப்பார்களே…
லோக்சபா தேர்தலுக்கு முன் தனிக்கட்சி தொடங்கினால் நல்லது என்று வாசன் நினைக்கிறார் போலிருக்கிறது. இது இனிஷல் ஸ்டேஜ்தான். போகபோக பார்க்கலாம். viruviruppu,com

கருத்துகள் இல்லை: