திங்கள், 4 மார்ச், 2013

அமைச்சர் திருமணத்தில் 22 ஹெலிபேடுகள் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை

அமைச்சர் திருமணம்
 ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
டந்த மாதம் மத்திய அமைச்சர் ச‌ரத்பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த, மராட்டிய மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் தனது மகன் மற்றும் மகளுக்கு ஒரு ஆடம்பர திருமணத்தை நடத்தி உள்ளார். ஒரு திருமணத்தில் என்ன விசேசம் என்று நினைத்து விடாதீர்கள்! இது பத்தோடு ஒன்று அல்ல.
படம் : என்.டி.டி.வி
மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சிப்லன் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கோட்டை போன்ற செட் போடப்பட்டிருந்தது. ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்ப‍டி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த விருந்தில் வெட்டப்பட்ட ஆடுகள், கோழிகள், வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மதிப்பு, ஆபரணங்கள் மற்றும் மது வகைகளைப் பற்றிய கணக்கை மத்திய வருமான வரித் துறையினர் தற்போது கவனமாக ஆராய்ந்து வந்தாலும் கணக்கு போட்டு முடியவில்லை.

அக்கட்சியின் தலைவரான மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், இத்திருமணம் பற்றி கேட்டதற்கு ‘அதைக் கண்ட பிரமிப்பில்  சில நாட்களாக இரவில் தூங்க முடியவில்லை. என் மகள் சுப்ரியாவின் திருமணத்துக்கு 2 லட்சம் பேர் வந்தாலும் ஆளுக்கொரு பேடா மட்டும் கொடுத்து எளிமையாக  எளிமையாக கொண்டாடினோம். வறட்சி காலங்களில், ஏன் சாதாரண காலங்களில் கூட பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வத்தை இப்படி வெளிப்படையாக காட்டிக் கொள்ளக் கூடாது’ என தனது கட்சி அமைச்சரை கடிந்து கொண்டார். இதனால் சரத்பவாரை ஏதோ பிளாட்பாரத்து ஏழை என்று முடிவு செய்து விடக்கூடாது. இந்தியாவின் முன்னணி தரகு முதலாளிகளில் அவரும் ஒருவர். அவரையே இந்த திருமணம் மெய்மறக்கச் செய்திருப்பதுதான் விசேசம். தன் மகள் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு அவர் பேடா மட்டும் கொடுத்தாலும், அதை ஒட்டி மகாராஷ்டிராவின் முன்னணி தொழிலதிபர்கள்  அவருக்கு எவ்வளவு மொய் எழுதினார்கள் என்பதை அவர் அறிவிக்கவில்லை
திருமணம் நடந்த ரத்னகிரி பகுதி மராட்டிய மாநிலத்தின் மிக வறட்சியான தொகுதிகளில் ஒன்று. இங்கு இப்படி ஒரு ஆடம்பர திருமணம் தேவையா என கேள்வி எழுந்துள்ள நிலையில், “நான் என் குடும்பத்தோடு ஒரு விழா கொண்டாடினேன். இது தவறா? நான் இயல்பாக செய்த கொண்டாட்டங்கள் எனது தலைவர் சரத் பவாரின் கொள்கைகளுக்கு மாறாக இருந்திருக்கலாம்.  நான் மக்கள் விரோதி என நிரூபித்தால் பதவி விலகத் தயார்” என்றெல்லாம் பாஸ்கர் ஜாதவ்,  சவால் விடுத்துள்ளார். உண்மையில் இந்த மெகா ஆடம்பரத் திருமணங்களெல்லாம் சரத்பவாரின் கொள்கைக்கு விரோதமில்லை, என்ன, மக்கள் முன்பு அம்பலப்படாமல் நடத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைவுபடுத்தியிருக்கிறார், அவ்வளவுதான்.
மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் குறிப்பாக விதர்பா பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு இருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மான்சாண்டோ கம்பெனியின் பி.டி ரகப் பருத்தி விதைகள், கடுமையான உர விலை உயர்வு காரணமாக கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி திருப்பித் தர இயலாத விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பிருத்விராஜ் சவான் தலைமையிலான காங்கிரசு-தேசியவாத காங்கிரசு அமைச்சரவையின் துணை முதல்வரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜீத் பவார் பாஜக வின் கட்கரியுடன் சேர்ந்து மகாராஷ்டிர நீர்மின் திட்டங்களில் திட்ட மதிப்பை அதிகரித்து ஊழல் செய்துள்ளனர்.
இதெல்லாம் சேர்ந்துதான் மராட்டிய மாநிலத்தின் விவசாயிகளது கழுத்தை நெறித்து வருகின்றன. இப்போதோ உர மானியத்தை நேரடியாக பணப்பட்டுவாடா என மாற்றிய மத்திய அரசு உரக் கம்பெனி மாஃபியாக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22  அன்று விதர்பா பகுதியை சேர்ந்த கஜானந்த் கோதேகர் என்ற 45 வயதுடைய விவசாயி தற்கொலை செய்து கொண்டார். டிராக்டர் வாங்கி விவசாயம் செய்ய முடிவுசெய்த அவர், வங்கியில் வாங்கிய கடனில் ரூ.1 லட்சத்தை அவரால் அடைக்க முடியவில்லை. இந்த நேரத்தில் மகளது திருமணமும் குறுக்கிடுகிறது. எல்லா இடங்களிலும் கேட்டுப் பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. விளையும் என எதிர்பார்த்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியும் காலை வாரி விட்டிருந்தது. வந்த பருத்திக்கான ஆதார விலையும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2,800 ஐத் தாண்டவில்லை. “விலை உயர்த்துவார்கள் எனப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த்து போல எதுவுமே நடக்கவில்லை. தயவுசெய்து யாரும் காங்கிரசு, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்” என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் கஜானந்த் கோதேகர்.
இது கோதேகரது பிரச்சினை மட்டுமல்ல. வறட்சி பாதித்த விதர்பா பகுதியில் தற்போது திருமணங்கள் நடக்கும் முறையையே அம்மக்கள் மாற்றி விட்டனர். கிராமங்களில் திருமண வயதில் உள்ள ஜோடிகள் சிலவற்றுக்கு ஒரே நேரத்தில் ஒரே செலவில் திருமணம் செய்கின்றனர். ‘திருமண விழாவிற்கு  குடும்பம் ஒன்றிலிருந்து தலா எத்தனை நபர்கள் வரை பங்கேற்கலாம்’ என்பதை முதலிலேயே அறிவித்து விடுகின்றனர். ஏற்கெனவே இருக்கும் கடன்களோடு புதிய கடனை வளர்க்க மக்கள் விரும்பவில்லை. இந்த ஊரில்தான் பாஸ்கர் ஜாதவின் மகனது திருமணம் பாசிச ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு நிகராக நடந்திருக்கிறது.
விவசாயிகள் தற்கொலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அக்கட்சியின் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவாருக்கு, நடந்த திருமணத்தின் பிரம்மாண்டம் தூக்கத்தை வரவிடாமல் தடுக்கிறதாம். தற்கொலை செய்ய முடிவெடுத்த கஜானந்த கோதேகர் போன்றவர்கள் சேர்ந்து போராடத் துவங்கும் போதும் சரத் பவாரின் தூக்கம் கெடத்தான் செய்யும். என்ன அப்போது அவரிடம் பிரமிப்பு இருக்காது..vinavu.com/

கருத்துகள் இல்லை: