செவ்வாய், 5 மார்ச், 2013

அமெரிக்க வர்த்தக பள்ளியில் மோடி உரையாற்றுவது ரத்து

புதுடில்லி: "" அமெரிக்க வர்த்தக பள்ளியில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, சிறிய விஷயம் தான். அதை, பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
அமெரிக்காவின், பிலடெல்பியாவில், புகழ் பெற்ற, "வர்டன் வர்த்தக பள்ளி' உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களிடையே, உரையாற்றுவது, பெருமைக்குரிய விஷயம். இங்குள்ள மாணவர்களிடையே, வீடியோ கான்பரன்சிங் மூலமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வரும், 22 மற்றும் 23ம் தேதிகளில், உரை நிகழ்த்த, வர்த்தக பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நரேந்திர மோடி உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியை, அந்த கல்வி நிறுவனம் ரத்து செய்தது.
இந்தியாவில், இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான, பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: "வர்டன் வர்த்தக பள்ளி'யில், நரேந்திர மோடியின் நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டது, சிறிய விஷயம் தான்; அதை, நாங்கள் பெரிது படுத்த விரும்பவில்லை. அங்குள்ள மாணவர்கள், நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள, திட்டங்களையும், நிர்வாக பணிகளையும், அறிந்து கொள்ள விரும்பினர். அதனால் தான், அந்த கல்வி நிறுவனம், நரேந்திர மோடி பேசுவதற்கு அனுமதித்தது. தற்போது, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்; இது, சாதாரண விஷயமே. இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

மோடிக்கு தகுதியில்லை:

இதற்கிடையே, பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர்களை, நரேந்திர மோடி, கடுமையாக விமர்சித்து பேசியதற்கு, காங்., தரப்பில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக விவகாரத் துறை அமைச்சர், நாராயணசாமி கூறியதாவது: காங்., தலைவர்களை, மிக தரக் குறைவான வார்த்தைகளால், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தலைவருக்குரிய தகுதி, அவருக்கு இல்லை. அவருக்கு, அரசியல் நாகரிகமும் தெரியவில்லை. நரேந்திர மோடி, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். தேசிய தலைவராகும் தகுதி, அவரிடம் இல்லை. பா.ஜ.,வில், தலைவர்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. இதனால் தான், மோடியை முன் நிறுத்துகின்றனர். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பா.ஜ., பதிலடி:
இதுகுறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: பா.ஜ.,வில், தலைவர்களுக்கு பஞ்சமில்லை; காங்கிரசில் தான், அந்த பிரச்னை உள்ளது. மத்திய அமைச்சர், நாராயணசாமி, முதலில், தன் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரசை பொறுத்தவரை, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, தலைவராக முடியும். ஆனால், பா.ஜ.,வில், கடுமையாக உழைக்கும் அனைவரும், ஜனநாயக முறைப்படி, தலைவராக முடியும். நரேந்திர மோடியை விமர்சிக்கும் காங்., கட்சியினர், இதை உணர வேண்டும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: